Thursday, September 6, 2012

நீதியுடனும் அமைதியாவும் தேர்தல் இடம்பெற வழிவிடுவீர். மட்டு-திருமலை மறை மாவட்ட ஆயர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நீதியுடன் கூடிய அமைதியான தேர்தலாக நடை பெற வழி அமைத்து கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு - திருகோணமலை மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கேட்டுள்ளார். நாளை நடை பெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

அந்த அறிக்கை வருமாறு

நீதியும், சமாதானமும் நிறைந்த தேர்தலாக அமைய அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்

இம்முறை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, எதிர்வரும் செப்டம்பர் 8ம் நாள் தேர்தலென அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்தங்களும் மும்முரமாக நடை பெற்றுக் கொண்டு வருகின்றன. இம்முறைத் தேர்தலில் நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், இன்னும் பல சுயேட்சைக் குழுக்களும் களத்தில் குதித்துள்ளன. தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தற்போது மும்முரமாக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு வருவது அனைவரும் அறிந்த விடயமே.

வாக்குரிமை மக்களின் ஜனநாயக உரிமையாகும். எனவே வாக்களிக்கத் தகுதிபெற்ற அனைத்து மக்களும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தக்கூடிய சுமூகமான சூழ்நிலையினை தேர்தல் திணைக்களமும், சிவில் பாதுகாப்பு தரப்பினரும், தேர்தலில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மக்கள் தங்களது வாக்குரிமையை அச்சுறுத்தலற்ற, சுதந்திரமான முறையில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பான சூழ்நிலையை அவரவர் பிரதேசங்களில் முதலில் வாக்காளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதனூடாக மக்களது வாக்குரிமைச் சுதந்திரமெனும் ஜனநாயக்கடமை பாதுகாக்கப்பட அனைத்துத் தரப்பினரும் உதவ வேண்டும்.

இரண்டாவதாக, தேர்தலில் ஈடுபடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், சுதந்திரமானதும், நீதியுமான தேர்தல் நடைபெற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தங்களது பிரசார நடவடிக்கைளின்போது காழ்ப்புணர்ச்சிகளாலும், குரோத மனப்பான்மையினாலும் தூண்டப்பட்டு வன்முறையில் ஈடுபடும் கலாசாரத்தை முற்றாகத் தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும், அரச உடமைகளுக்கும், தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும் அசௌகரியத்தை விடுக்கக்கூடிய செயல்களிலிருந்து விலகி நடக்கவேண்டும். தேர்தல் வன்முறைகளை கூடிய மட்டும் தவிர்த்து அமைதியான தேர்தல் நடைபெற வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்.

அரசியல் மேலாதிக்கம், அடக்குமுறை, வன்முறை போன்ற செயல்களில் ஈடுபடுவோரும், அத்தகைய செயல்களைத் செய்யத் தூண்டுவோரும் அவற்றிலிருந்;து முற்றாக விலகி, நீதியுடன் கூடிய அமைதியான தேர்தல் நடைபெற வழிசமைத்துக் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். இத்தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகளுக்கும், தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்பாளர்களுக்கும் மத்தியில் சுமூகமான சூழ்நிலை தோன்ற வேண்டும். அதனூடாக தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் தோன்றக்கூடிய அச்சமான சூழ்நிலைகள் நீக்கப்பட வாய்ப்புக்கள் ஏற்படும்.

எனவே நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பினை தோற்று வித்துள்ள இச்சூழ்நிலையில், மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர் அதனை அச்சுறுத்தலற்ற ஜனநாயக மரபினைப்பேணும் தேர்தலாக அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மாற்றித் தர வேண்டுமென்று வினயமுடன் கேட்டு நிற்கின்றனர். அத்துடன் தேர்தல் திணைக்களத்தினர் தங்களது கடமைகளை சுயாதீனமாக செயற்படுத்த அனைத்து போட்டியிடும் தரப்பினரும் ஆதரவு நல்கவேண்டுமென்றும் கேட்டு நிற்கின்றனர். அதுமட்டுமல்லாது, மிகவும் முக்கியமாக வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையெனும் ஜனநாயகக் கடமையை சுதந்திரமாக பாவிக்க உறுதி செய்ய வேண்டுமென்றும் சிவில் சமூகத்தின் சார்பில் கேட்டு நிற்கின்றோம். இதன்மூலம் நீதியானதும், நேர்மையானதுமான தேர்தல் நடைபெறவும், அதனூடாக மக்கள் அமைதியுடனும், சமாதானத் துடனும் ஒன்றுபட்டு வாழவும் எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.


பேரருட்திரு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை,
திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்.

No comments:

Post a Comment