தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கை அகதிகள், சட்டவிரோதமாக கடல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தமிழகத்தில் இலங்கை அகதிகள் இருக்கும் முகாம்களுக்கு, தமிழக நுண்ணறிவுப் பிரிவு பொலிஸ் தலைவர் அபாஷ் குமார், சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கைத் தமிழர்களை, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சட்ட விரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் இலங்கைத் தமிழர்கள், கிறிஸ்துமஸ் மற்றும் கொக்கோஸ் தீவுகளுக்குக்கு ஊடாக படகுகள் வாயிலாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சிப்பதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு சர்வதேச கடலில், சட்ட விரோத பயணங்கள் மேற்கொள்வது பாரிய குற்றச் செயலாக கருதப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட போலி முகவர்களை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.
எனவே இலங்கைத் தமிழர்கள், சட்ட விரோதமாக கடல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், போலி முகவர்களிடம் ஏமாறாமல் இருக்க, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், பொலிஸார் எச்சரிக்கை விடுக்கின்றனர் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் சட்ட விரோதமாக வெளிநாடு செல்வோர், அல்லது சட்ட விரோதமாக ஆட்களை அனுப்ப முயற்சிக்கும் முகவர்கள் குறித்த தகவல்களை அறிந்தவர்கள், 044- 28447739 பேன்ற தெலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும், சரியான தகவல்கள் கொடுப்போருக்கு வெகுமதி அளிக்கப்படும் என அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment