கச்சதீவு வேண்டும் !!. பழைய பைலை தூசிதட்டி எடுக்கின்றார் ஜெயலலிதா.
இலங்கைக்கு உரித்தானதாக்கப்பட்ட கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப்பெறுவதற்கு இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை செல்லுபடியற்றது என அறிவிக்க கோரி இந்திய உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழக முதல்வர் முதல்வர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கை:
1974,ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததன் காரணமாக, தமிழக மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதும், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மேற்குவங்க மாநிலம் 'பெருபாரி' வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என அறிவிக்க கோரி 2008,ல் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் வழக்கு தொடர்ந்தேன்.
தற்போதும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறையவில்லை. இதுகுறித்து 14,ம் தேதி எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், வருவாய்த்துறை முதன்மை செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர், அரசு தலைமை வக்கீல், அரசு கூடுதல் தலைமை வக்கீல் கலந்து கொண்டனர். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த ஒப்பந்தங்கள் செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரி ஒரு மனுவை தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும்.
0 comments :
Post a Comment