Thursday, September 27, 2012

கிழக்கு மாகாண தேர்தலும், கொழும்பு கொடுக்கல்வாங்கல்களும். சஹாப்தீன் நாநா –

எப்போது உருப்படும் இந்த சமூகம்.
இனி என்ன செய்வதாய் உத்தேசம்.


கனாவுக்கும், கனவுக்கும் என்ன வித்தியாசம் என ஞானியிடம் கேட்டார்கள். ஒருவன் தூங்கிய பின் காண்பது கனா, எது ஒருவனை தூங்கவிடாமல் பண்ணுகின்றதோ அது கனவு என்றார் ஞானி. சொல்லிவிட்டு அனைவரும் சந்தோஷமாக கனவு காணுங்கள் என்றார் அந்த ஞானி. கடந்த பல நாட்களாக கிழக்கில் முஸ்லீம் காங்கிரசுக்கு வாக்களித்த ஒரு லட்சத்தி முப்பத்திரண்டாயிரத்து, தொளாயிரத்து இருபத்தேழு பேர்களும் கனவாக கண்டு கொண்டிருந்தார்கள். ஒருவருக்கும் தூக்கம் கிடையாது. யார் கிழக்கின் முதலமைச்சர். ஹாபிஸ் நசீரா அல்லது வேறு யாராவது முஸ்லீம் காங்கிரசை சேர்ந்தவர்களா என்றுதான் அனைவரும் கனவு கண்டார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டும் எக்காரணம் கொண்டும் முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த ஒருத்தனுமே வந்துவிடக்கூடாது என தேர்தலுக்கு மூன்றுமாதம் முதல் இருந்தே கனவு கண்டார். அவர் யார் என்பது மூத்த போராளிகளுக்கும் தெரியும், எதிர்க்கட்சிக் காரனுக்கும் தெரியும், மகின்த அரச குடும்பத்துக்கும் நன்றாகவே தெரியும். ஆம் அவர்தான் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கடந்த இரண்டு மாதங்களாக மொத்த சிறிலங்கா முஸ்லீம்களின் தலைகளில் மொளகா அரைத்தவருமான திருவாளர் நீதிதேவன்.

1960 களில் தொடங்கி 1983வரை தமிழ் அரசியல் தரப்புகள் எவ்வாறு தமிழ் பேசும் தமிழர்களின் தலைகளில் அரைத்தார்களோ, அதைவிட ஒரு படி மேலே போய் அதாவது அரசில் இருந்து கொண்டு, அதுவும் அரசின் அமைச்சுப் பதவியில் இருந்து கொண்டு, மகின்த அரசை வாங்கு வாங்கெனவாங்கிவிட்டு இறுதியில் முந்தா நாளுக்கு முதல்நாள், கழுவின மீனில நழுவின மீன் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லீம்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். உலகப்பொலீஸ்காரர்களுக்கே சவால்விட்டுக் கொண்டிருந்த புலிகளை புஸ்வாணமாக்கிய மகின்த அரசையே திட்டுகின்றாரே இந்த மனுஷன், என்ன துணிச்சல்டா இது என்று ஏமாந்து வாக்குப் போட்டவர்களுக்கு, இப்போது கொழும்பில் இருந்து கொண்டு, அதுவும் ஊர் பேர்தெரியாத பத்திரிகையாளர்களை கூட்டி வைத்துக்கொண்டு சோத்துக்கு உப்பு போடல, கறிக்கு வெள்ளப் பூடு பத்தல, அதனால நாங்க அரச ஆதரிச்சிருக்கம், சமயம் வரும்போது வறுத்தெடுப்பம் என்ற ஒப்புக்கு சப்பாணி கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர்கள்.

இந்த உத்தம புத்திரர்கள், இடுப்புல பலம் உள்ள கட்சியை வைத்திருப்பவர்கள் என்றால், முதல் அமைச்சர் அறிவிப்பு வந்த அடுத்த நிமிடம், கிழக்கு சென்று, அதே பழைய மேடைகளில் ஏறி, நியாயங்களை வீறாப்புடன் பேசி, அதே கிழக்கு மக்களிடம் கைதட்டு வாங்கியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, கொழும்பு பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளித்துவிட்டு, தலைவர் லண்டனுக்கும், அமேரிக்காவுக்கும் சிறுபான்மை சமூகமொன்றை வழிநடாத்துதல்- ஓர் இலங்கை அனுபவம் பற்றி விளக்கம் அளிக்க கியாஹோகய. கிழக்கு முஸ்லீம்களே நீங்கள் சாக்கடை கொசுக்கள் அல்ல, சரித்திர சக்கரங்கள் என்பதை இவர்களுக்கு எப்போது புரிய வைக்கப் போகின்றீர்கள்.

முந்தா நாள் பெய்த மழைக்கு முளைத்த இந்த காளான்களுக்கு, கிழக்கின் வரலாறு தெரியாது சகோதரர்களே. இந்த கிழக்குக்கும் கிழக்கின் ஒவ்வொரு ரெத்தெத்தின் ரெத்தங்களுக்கும் பல கதைகளுண்டு சகோதரர்களே. யாழ் புத்தி ஜீ(சீ)விகள் 1970களில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு கொம்பு சீவி தேர்தலில் வாக்கு வேட்டையாடும் போது, துப்பாக்கி கலாசாரத்தை நடாத்திக்காட்டி தேர்தல் களேபரங்களை முதல் முதலில் ஆரம்பித்தது இந்த கிழக்கு மாகாணம்தான். அதுவும் முஸ்லீம் தரப்புதான். அதன் பின்னர்தான் வடக்கே துப்பாக்கி தூக்கத்தொடங்கியது. கிழக்கிலேயே முதலாவதாக தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்தவர்களும், இயக்கங்களை கிழக்குக்கு அழைத்து வந்தவர்களும் மூஸ்லீம் இளைஞர்கள்தான், அதன் பின்னர்தான் கிழக்கு தமிழ் இளைஞர்கள் முக்கி, முனகி யாழ் இளைஞர்களுடன் இணைந்தார்கள். ஆயுதப்பயிற்சிக்கென இந்திய உத்தர பிரதேசத்துக்கு சென்ற முதல் குரூப்பும் கிழக்கு மாகாணத்தவன்தான். அதில் முஸ்லீம்களும் அடக்கம். சிறிலங்காவிலேயே பெரிய வங்கி கொள்ளை ( காத்தான்குடி ) மட்டக்களப்பு சிறையுடைப்பு என ஆசியாவையே அதிரவைத்த நிகழ்வுகளுக்கு சூத்திரதாரிகள் கிழக்கு முஸ்லீம்களும், கிழக்கு தமிழர்களுமே. ஏன் உலகின் அதிபயங்கர, பயங்கரவாத அமைப்பான புலிகளிலேயே, முன்னணி வீரர்களாக இருந்தது கருணா அம்மானின் கீழ் இயங்கிய, கிழக்குமாகாண இளைஞர்கள்தான். அப்படி உணர்ச்சியும், உணர்வும் மனிதாபிமானமும் நிறைந்த கிழக்கு மக்களை கடந்த 8ம் திகதிவரை உசுப்பேத்தி, 8லிருந்து 18வரை முட்டாள்களாக்கிவிட்டு, இப்போது ரொம்ப சாவகாசமாக ரெண்டெரை வருடத்துக்கு பிறகு ஒத்தணம் போடுவோம் அதுவரை பொறுத்திருங்கள் என அம்புலிமாமா கதை சொல்லுகின்றார்கள் பில்லி சூனியக்காறர்கள். இதனால் இன்று மொத்த கிழக்கு மாகாணத்தவனும் சந்தை முடிந்த பின், சரக்கு விற்க வந்தவனைப் போல் ஏமாந்து நிற்கின்றான்.

85களில் இந்த முஸ்லீம் காங்கிரஸ்கட்சியினர் கிழக்குக்கு காலடி எடுத்து வைக்க முன்னர், முஸ்லீம் அமைப்பினரின் கைகளில்தான் கிழக்கு இருந்தது. கிழக்கு மட்டுமல்ல வடக்கு மற்றும் தென், மேற்கு பகுதிகளிலும் முஸ்லீம் குழுக்களின் செல்வாக்கு இருந்தது. இந்த முஸ்லீம் குழுக்கள் பல முஸ்லீம் பெரியார்களதும், கல்வியாளர்களதும், ஆலோசனையின் பேரில் அனைத்து ஆக்க பூர்வ நடவடிக்கைகளிலிருந்தும் 1987களில் பின் வாங்கியது. நாட்டை விட்டு முக்கிய உறுப்பினர்கள் வெளியேறினர். இந்த வெளியேற்றம் அடாவடி ஆட்சி செய்த புலிகளுக்கு பயந்து நடக்கவில்லை. எமது இளைஞர்களின் கைகளில் இருக்கும் பொருட்களை பாவித்து, சிங்கள அரசுகள் குளிரகாய்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், எமது சமூகத்தின் கல்வி முன்னேற்றம் மற்றும் வியாபாரவிருத்திகளில் எவ்வித தடங்கல்களும் வரக்கூடாது என்பதற்காகவுமே நடந்தது. அன்று இந்த முஸ்லீம் இளைஞர்கள் வெளியேறாமல் அல்லது அமைதிகாக்காது இருந்திருந்தால், இன்று கல்வியில், மற்றும் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றம் கண்டிருக்கும் முஸ்லீம்கள், தமிழ் மக்களைப் போல் மேற்குலக நாடுகளில் பெற்றோல் கராஜ்களிலும், சிக்கன் சொப்பிலும் சகலவற்றையும் தொலைத்துவிட்டு அலைய வேண்டியிருந்திருக்கும். இதற்குரிய முழு நன்றியையும் காத்தான்குடியைச்சேர்ந்த மறைந்த மர்ஹூம் அகமட்லெப்பைக்கும், மறைந்த மர்ஹும் மூதூர் மஜீத்துக்கும் முழு முஸ்லீம் சமூகமும் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றது.

இந்த விடயமெல்லாம் இப்போது முஸ்லீம்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகின்றோம் என புறப்பட்டு, முதுகெலும்புள்ள தலைவன் அஸ்ரப் இறந்த பின், ஒன்று ரெண்டாகி, ரெண்டு மூணாகி, இன்று மூணும் கோணலாகி மொத்த முஸ்லீம்களின் மானத்தையும் கழுவிலேற்றி விட்டு, வாக்குகளையும் வாங்கி, வாக்குத்தவறி ........... இப்போது மொத்த சிறிலங்கா முஸ்லீம்களையும் நோயாளி மடிந்த பின், மருந்து வாங்கி வந்த உறவுக்காரா்களைப் போல் நிற்க வைத்துள்ளார்கள்.

பொம்மை ஆட்சி ஒன்றில் கைகட்டி, வாய்பொத்தி, மௌனியாக இருந்துவர எமது கட்சி தயாரில்லை. முஸ்லீம் காங்கிரஸ் கட்சியான நாம் தனித்து கேட்பது பற்றி நாடே பெருமைப்படுகின்றது. எமது தனித்துவம் காக்கப்படும், என கிண்ணியா, மூதூர் தொடக்கம் பொத்துவில் வரை முழங்கி, இளைஞர்களையும், மொத்த முஸ்லீம் இனத்தையும் சூடாக்கி, சூடேற்றி, சூல்கொள்ள வைத்து, வாக்குகளை வாங்கி, தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்து, இறுதியில் மகிந்த மகராசனின் காலில், தொபுக்கடீர் என விழுந்து. முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கிட்டம், ஹிஹி.......நாங்க கேட்ட மாதிரியே ரெண்டு அமைச்சும் பெற்று விட்டோம். ஹிஹி....ஹிஹி.......அதாவுல்லாவுக்கும் ஆப்பு, ரிசாட் பதியுதீனுக்கும் ஆப்பு வெச்சுட்டம் ஹஹ் ஹஹ்ஹா (அவங்கட ஆட்களுக்கும் முதலமைச்சு பதவி கிடைக்காம பார்த்துங்கிட்டாங்களாம்.) என்ன சாதனை செய்திருக்கின்றாரகள் பார்த்தீர்களா.

அடுத்த சித்திரை புதுவருடம் தமிழீழத்தில்தான் நடக்கும், அன்று சிங்களவனின் தோலை செருப்பாக அணிவோம் என்று சொல்லிக் கொண்டுதான் 70களில் யாழ்ப்பாண லோயர் மாமாக்கள் வாக்குவேட்டையாடி மொத்த தமிழனையும் ஏலம் விட்டுவிட்டு, அவர்கள் தம் பிள்ளைகளை ஐரோப்பிய வாழ்க்கைக்கு தயாராக்கினார்கள். இப்போ ரொம்ப காலம் கழித்து அதே பாணி சூடேற்றல்களுடன் நம்ம ........................ ? நாம் தமிழ் இளைஞர்கள் அல்ல. இவர்கள் சூடேற்றும் போதெல்லாம் சூடேறுவதற்கு. ஆனால் தொடர்ந்தும் இவர்களது வசப்பு வார்த்தைகளுக்கு ஆடுவதற்கு பொம்மலாட்டக்காரர்களும் அல்ல என்பதை நிருபிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

நாம் இங்கு மகிந்த சகோதரர்களுடன் மல்லுக்கு நிற்கவோ, சம்பந்தன் தரப்புடன் தேன் நிலவு கழிக்கவோ சொல்லவில்லை. ஏனெனில் சிங்கள பாமர மக்களையும், தமிழ் பாமர மக்களையும் முழுக்க முழுக்க நம்பலாம். ஆனால் சிங்கள அரசியல்வாதிகளை நம்பினாலும், தமிழ் அரசியல்வாதிகளை ஒரு வீதமும் நம்ப முடியாது. சம்பந்தன் ஐயாவை நம்பினாலும், வடக்கில் பிறந்து, வளர்ந்து இப்போது சம்பந்தன் ஐயாவின் திவசத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த கண்கொத்திப் பாம்புகளை நம்பவே முடியாது. ஆனால் நேற்றைய தலைப்பு செய்திகளில் கலாநிதி.ஹஸ்புல்லா அழகாக சொன்னதை ( கிழக்கில் முஸ்லீம்கள் ஐந்து வீத நிலத்திலேயே இருக்கின்றனர் ), முப்பது வருடத்துக்கு முதல் யாழ்.லோயர்கள் ரொம்ப ஆவேசமாக சொன்னார்கள்.

அந்த ஆவேசம் பல துன்பியல் சம்பவங்களுக்கு வழிவகுத்தது. அதே பாணியை இப்போது நீங்கள் கையில் எடுத்து குளிர்காய முற்படுகின்றீர்கள். அது கூடாது. அதற்கு இது தருணமுமல்ல. ஆம் சகோதரர்களே, முஸ்லீம் காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி முழு சிறிலங்கா முஸ்லீம்களுக்கும் தேவை. அந்த கட்சிக்கு முதுகெலும்புள்ள தலைவர்களும் தொண்டர்களும் தேவை.
நசீர் ஹாபீஸ் என்றொருவர், அஸ்ரப் தலைவராக இருக்கும் போது கட்சியில் இணைகின்றார். அஸ்ரப் இறந்ததும் அவர் கட்சியை விட்டு ஒதுங்குகின்றார். அல்லது ஒதுக்கப்படுகின்றார். திடீரென அவர் கோடீஸ்வரர்கள் லிஸ்ரில் இணைக்கப்படுகின்றார். முஸ்லீம் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியின் தலைமை காரியாலயம், அந்த நசீர் ஹாபீசின் பெயரில் இருக்கின்றது என சொல்லி அனைவரும் ஒதுங்கி நிற்கின்றார்கள். முந்தாநாள், திடீரென அதே நசீர் அகமட் புதிய தலைவர் ரவுப் ஹக்கீமுடன் தோன்றுகின்றார். நிறைய கசமுசாக்கள் நடக்கின்றன. செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றது. கட்சி தலைமை காரியாலயத்தை கட்சிக்கு எழுதி கொடுத்துட்டாராம் என போராளிகள் ( நம்ம முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் ) கும்மாளம் அடிக்கின்றார்கள். கிழக்கு தேர்தல் அறிவிக்கப்படுகின்றது. நம்ம சனங்கள் மேடையேறுகின்றார்கள். மேடையில் முக்கிய காட்சிப் பொருள் அந்த கோடீஸ்வரர். கிழக்கின் அடுத்த முதலமைச்சர் அவர்தானாம். இது இப்படி என்றால்.

இன்னொருவர், உணர்ச்சியின் உச்சக் கட்டத்துக்கே போய், 18 நாட்களுக்கு 18 உண்மைகளை சொல்லி வாக்கு கேட்கப் போய், ஈரோஸ் மூத்த போராளி கதைகள் எல்லாம் சொல்லி, மூக்குடைபட்டு ( இவருக்கு முதலே ஈரோஸில் சேர்ந்து, மெட்ராஸ் கோரமண்டல் ஹோட்டலில் ஈரோஸ் தலைவர் ரட்ண சபாபதிக்கு விஸ்கியும், ஊறுகாயும் வாங்கிக் கொடுத்த சோனவனுகள் இன்னும் கிழக்குல உலாத்துற கதை தம்பிக்கு தெரியாது போல கெடக்கு ) இருந்த பிரதி அமைச்சர் பதவியையும் பறிகொடுத்து........இதுதான் இன்றைய முஸ்லீம் காங்கிரசின் நிலை. வீ டோன்ட் வோன்ட் கொமடியன்ஸ். வீ ஆர் லுக்கிங் போர் ஒன் ஹேண்ட்சம் கைட் போர் அவர் கொம்மியுனிற்றி லீடர்சிப்.

யார் சிறிலங்கா முஸ்லீம் மக்களுக்கு தலைவர் என்பதைவிட, யார் அதிகூடிய பதவியைப் பெறலாம், யார் அதிகூடிய பணத்தை உழைக்கலாம், யார் அதிக காலம் ஆளும் அரசுகளுடன் ஒட்டி உறவாடலாம் என்பதாகவே இருக்கின்றதே தவிர, சிறிலங்கா வாழ் மொத்த முஸ்லீம் மக்களைப் பற்றியும் யாரும், கிஞ்சித்தும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

இன்று சிறிலங்காவில் உள்ள மொத்த முஸ்லீம் மக்களில், மூன்றில் ஒரு பகுதியினர் வடகிழக்கிலும், மூன்றில் இரண்டு பகுதியினர் தெற்கு, மேற்கு பகுதிகளிலும் வாழ்கின்றனர். வடகிழக்கில் வாழ்பவர்கள். நெருக்கமாக செறிந்து வாழ்வதாலும், தென்மேற்கில் வாழ்பவர்கள். ஆங்காங்கே தொட்டம், தொட்டமாக வாழ்வதாலும், சிறிலங்கா முஸ்லீம்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும், வடகிழக்கு முஸ்லீம்கள்தான் குரல்கொடுக்க வேண்டும், போராட வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத சடங்கை யாரோ பெயர் தெரியாத பலர் எழுதிவிட்டுச் சென்றுவிட்டனர்.

அன்றிலிருந்து, இன்றுவரை வடக்கு கிழக்குக்கு வெளியே முஸ்லீம் சமூகத்துக்கு அல்லது முஸ்லீம்களின் முன்னேற்றத்துக்கு பாதகமாக எது நடந்தாலும் காத்தான்குடியில் ஜூம்ஆத் தொழுகையின் பின் ஒரு ஆர்ப்பாட்டம், ஓட்டமாவடியில் ஒரு கடையடைப்பு என்ற ஒரு பத்திரிகைச் சிறு செய்தியுடன் முடிந்து விடுகின்றதே தவிர இதுவரையும், எப்போதும் நடந்த பிரச்சனைகளுக்கு, அல்லது தொடங்கிய தடங்கல்களுக்கு எங்கும், எப்போதும் முடிவுகள் காணப்படவில்லை. அதற்காக ஒரு கட்சி தேவை. அது முஸ்லீம் காங்கரஸ் கட்சியாக இருக்க வேண்டும்.

சிங்கம் மூர்க்கமாய் தாக்கினால், சின்ன முயல் கூட எதிர்த்து நிற்குமாம். தலைவர்களே எங்களை முயல்கள் ஆக்கி விடாதீர்கள். நாங்கள் கழுதைகளாகவே இருந்து கொள்கின்றோம். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, பறவாயில்லை நாங்கள் பொதிகளை சுமக்கின்றோம். பொதிகளை எக்கச் சக்கமாக எங்கள் முதுகில் மட்டும் ஏற்றி நாங்கள் தந்த புள்ளடிகளுக்கு வஞ்சனை செய்து விடாதீர்கள். அப்புறம் நாங்கள் முயல்கள் எல்லாம் சேர்ந்து.............


shabdeensl@ymail.com

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com