Tuesday, September 11, 2012

அரபுலகம் எதிர்நோக்கும் சவால் எனும் தொனிப் பொருளுடன் நினைவு கூரப்பட்ட பாக்கிர் மாக்கார்.

முன்னாள் சபாநாயகர் தேசமான்ய எம்.ஏ. பாக்கிர் மாக்காரின் 15வது நினைவு தின சொற்பொழிவு நேற்று இடம்பெற்றது. கொழும்பு, பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்தில், அரபுலகம் எதிர்நோக்கும் சவால் எனும் தொனிப்பொருளில் பேசப்பட்டது.

எம்.ஏ. பாக்கிர் மாக்கார் மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது இந்நிகழ்வில் அல் ஜசீரா சர்வதேச ஊடக நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரும், கட்டாரில் உள்ள அஷ் ஷர்க் நிறுவனத்தின் பணிப்பாளருமான பொறியியலாளர் வதாஹ் ஹன்பார் நினைவு சொற்பொழிவாற்றினார். ஈராக் யுத்தம், எகிப்து, சிரியா, பலஸ்தீனம் போன்ற நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள் மற்றும் அரபுலகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில், அவர் உரையாற்றினார்.

மேலும் பாக்கிர் மாக்கார் இணையதளத்தை றோயல் கல்லூரி முன்னாள் பிரதி அதிபர் ஏரானந்த அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மபாஸ் சனூன் எழுதிய இளைய தலைமுறையில் பாக்கிர் மாக்கார் எனும் நூல், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரிடம் கையளிக்கப்பட்டது.

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, பேராசிரியர் எஸ். சந்திரசேகரம், கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சிறப்பு பேச்சாளர் மற்றும் தனது மூத்த தந்தை பற்றி, பாதில் பாக்கிர் மாக்கார் உரை நிகழ்த்தினார். வைபவத்தில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சமய தலைவர்கள் உட்பட ஏராளமானனோர், கலந்து கொண்டனர்.

மர்ஹூம் தேசமான்ய பாக்கிர் மாக்கார், பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, சபாநாயகராக, ஆளுநராக இருந்து, நாட்டுக்கும், சமூகததிற்கும், பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார். மூவின மக்களையும் அரவணைத்து, அவர் நாட்டின் அபிவிருத்திக்காக, பல்வேறு வழிகளிலும் பாடுபட்ட ஒரு தலைவராவார்.

No comments:

Post a Comment