ஏமன் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப் பட்ட குண்டு வெடிப்பு ஒன்றில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவருடன் சென்ற 12 பேர்,இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பு நடப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர்தான் ஏமன் நாட்டின் அல்-காய்தா பிராந்திய தலைவரை, ராணுவம் சுட்டுக் கொன்றிருந்தது இதனையடுத்து 'அல்-காய்தா ஏமன் பிரிவின் பிராந்திய தலைவர் சையத் அல்-ஷெஹ்ரி கொல்லப்பட்டு விட்டதால், இனி ஏமன் நாட்டுக்குள் அல்-காய்தா அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் உள்ளது' என்று பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை விடுத்து 24 மணிநேரத்துக்கு உள்ளேயே, அறிக்கை விட்ட அமைச்சரை குறி வைத்திருக்கிறது அல்-காய்தா ஏமன் பிரிவு.
இந்த தாக்குதலுக்கு அல்-காய்தா (ஏமன்) இதுவரை உரிமை கோரவில்லை என்றாலும், அவர்களை தவிர வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது. நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவல்களின்படி, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்ட காரில்தான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் நசீர் அஹ்மத் அதே வீதி வழியாக வந்தபோது, வீதியில் இருந்த கார், ரிமோட் கன்ட்ரோலர் மூலம் வெடிக்க வைக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சருடன் வந்த வாகனங்களில் இருந்த 7 பாதுகாவலர்களும், அந்த வீதியில் சென்று கொண்டிருந்த 5 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அமைச்சர் வந்த கார், சில அடிகள் உயரத்துக்கு தூக்கி எறியப்பட்டு கீழே வீழ்ந்தது. ஆனால், அது புல்லட் புரூஃப் கார் என்பதால், வெடிகுண்டில் இருந்து அமைச்சர் பாதுகாக்கப்பட்டார்.
No comments:
Post a Comment