Saturday, September 8, 2012

வன்செயல்கள் அற்ற தேர்தலாக கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நிறைவு பெற்றது.

கிழக்கு மாகாண சபைக்கான மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு சுமுகமான முறையில் இன்று சனிக்கிழமை காலை முதல் நடைபெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார். அதே நேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாலை 3 மணிவரையில் 55 வீதமான வாக்களிப்பு நடைபெற்றதாக அவர் அறிவித்திருந்ததுடன்  மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 வீதம் வரையில் வாக்களிப்பு நடைபெற்றுள்ளதாக தேர்தல் அலுவலகத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு ஆகிய மூன்று தொகுதிகளிலும், காலைமுதல் வாக்களிப்பு குறைந்தளவாக இருந்த போதும் பகலுக்குப்பின்னர் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

காலை முதல் அசம்பாவிதங்கள் இல்லாதிரந்த போதும், மட்டக்களப்பு, காத்தான்குடி, மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் இறுதி நேரத்தில் ஒரு சில அசம்பாவிதங்கள் நடைபெற்றன. இருப்பினும், வாக்குப் பெட்டிகள் யாவும் குறித்து நேரத்துக்குள் வாக்கெண்ணும் நிலையங்களை சென்றடைந்துள்ளன.

இரவு 7 மணி முதல் வாக்கெண்ணும் வேலைகள் யாவும் ஆரம்பமாகவுள்ளதுடன் முடிவுகள் இன்று நள்ளிரவு முதல் அறிவிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் இறுதிமுடிவுகள் நாளையதினம்  பகலுக்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய முக்கிய மூன்று கட்சிகளுக்கிடையிலேயே அதிகமான போட்டி உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அபிவிருத்திகள் எதிர்காலத்திட்டங்கள், பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களை தமது தேர்தல் பிரச்சாரங்களில் சேர்த்திருந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் முதலமைச்சரையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் முதலமைச்சரையும் தமது கோசங்களாக வைத்து வாக்கு கேட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக  38 வாக்கெண்ணும் நிலையங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கவுள்ளன.

No comments:

Post a Comment