Thursday, September 13, 2012

மனித உரிமைகள் தொடர்பாக விசேட ஆணையாளர் ஓருவரை நியமிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு

"பொதுநலவாய நாடுகளுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விசேட ஆணையாளர் ஒருவர் நியமிக்க ப்படும் போது இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமையும்"

பொதுநலவாய நாடுகளுக்கு மனித உரிமைகள் தொடர்பாக தனியான விசேட ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனைக்கு இலங்கை எதிர்ப்பை தெரிவித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான அமர்வின் போது, பொதுநலவாய நாடுகளுக்கும் மனித உரிமைகள் தொடர்பான விசேட ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டிருந்த போதே இலங்கை எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகளுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விசேட ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படும் போது, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு இவ்வாறான ஒரு விசேட ஆணையாளர் இருப்பதால் பொதுநலவாய நாடுகளுக்கு அவசியமில்லை என்பதை அவ்வமர்வில் எடுத்துக் கூறியதாகவும், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

மேற்குலக நாடுகளின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே இந்த நிகழ்ச்சி நிரலிலும் இவ்விடயம் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அடுத்து நடைபெறவிருக்கும் பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஆராய்வதென முடிவு செய்யப்பட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

விசேட ஆணையாளர் நியமிப்பது தொடர்பான அமர்வின் போது, அவுஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், போன்ற நாடுகளுடன் ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜயலத் ஜயவர்தன,ஜோன் அமரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன், ஆகியோர் ஆலோசனைக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com