Thursday, September 20, 2012

தோற்றுப்போன பிரதேச வாதமும் தோற்று நிற்கும் கிழக்கு தமிழனும் ..! - இரா.வி.விஸ்ணு

என்ன இது தலைப்பு பிரதேச வாதம் பேசப்போகிறதா என யோசிக்க வேண்டாம் . இன்று என்ன மனோநிலையில் கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் இருப்பார்களோ அதற்கு எதிர்மறை மனோநிலையிலேயே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பாலான தமிழ் மக்கள் எந்த ஆட்சி அதிகாரத்தை தாம் கைப்பற்றவேண்டும் என்று நினைத்த வாக்களித்தார்களோ அந்த கனவு அவர்களை எதிர்க்கட்சியில்தான் அமர்த்தியிருக்கிறது . மறுபுறம் எந்த அதிகாரத்தை தாம் கைப்பற்ற வேண்டுமென்று முஸ்லீம் மக்கள் வாக்களித்தார்களோ அந்தக்கனவு அவர்களுக்கு முழுமையாக நிறைவேறியதுடன் ஒருபடி மேல் சொல்லப்போனால் அவர்களுக்கு நிறைவேறியது வெறும் கனவல்ல போனஸ் கனவு என்றே சொல்லவேண்டும்.

கடந்த கிழக்கு தேர்தலில் முதலமைச்சு நோக்கி சரமாறியாக தமிழ் , முஸ்லீம் தரப்பில் இனவாதம் பிரதேசவாதம் , அரச எதிர்ப்பு என்பன மும்முனை பிரச்சார யுக்திகளாக இருந்தது. இக்கருத்துக்கள் ஒருதரப்புக்கு வெற்றியை தேடித்தந்து மறுதரப்புக்கு ஏமாற்றத்தை அள்ளித்தந்ததையும் தேர்தல் முடிவுகள் காட்டி நிட்கின்றன . இன்றைய சூழலில் தேர்தல் முடிவுகளையும் தாண்டி ஏமாற்றம் என்பது கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு உரியதாகி இருக்கின்றதென்பது கிழக்கில் உள்ள சிலருடன் உரையாடியதில் இருந்து உணர முடிந்தது.

இங்கு கிழக்கு தேர்தலில் தமிழ் தரப்பு அரசியல் வாதிகளின் பிரச்சாரம் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டது , அதைவிட முக்கியமாக வேட்ப்பாளர் தெரிவுகள் கட்சிவாரியாக எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்கின்ற கேள்விகளுக்கு விடை தேடும்போது சில தவறுகள் வெளிப்படையாக தெரிகின்றன . முதலாவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னென்ன தவறுகள் விட்டன என்பதை மட்டக்களப்பில் அதிகூடிய விருப்புவாக்குக்களை பெற்ற இரா . துரைரெட்ணம் அவர்கள் வெற்றி பெற்ற பின் இலண்டனில் உள்ள தமிழ் வானொலி ஒன்றுக்கு அளித்த செவ்வியிலும் , பின் தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கருத்துக்கள் ஊடகங்களில் வந்ததன் மூலமும் பலர் அறிந்திருக்க முடியும். இதற்கு மேலதிகமாக என்னென்ன தறுகள் விடப்பட்டிருக்கின்றன என்ன ஆராயும்போது த.தே .கூ மக்கள் மயமானதா இல்லை கட்சிகள் மயமானதா என்ன கேள்வி கட்சி இட பங்கீடு மற்றும் நபர் பங்கீடுகளில் இருந்து கேட்க தோன்றுகின்றது. பிரதேசம் , சில இளையோர்க்கும் , அரசியல் ஆர்வமிக்க , செல்வாக்குமிக்க சில திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க்காததேன்? . அவ்வாறு வழங்கியிருந்தால் ஒருவேளை மேலும் சில ஆயிரம் வாக்குகளை அதிகரித்திருக்கலாம் என தோன்றுகின்றது . எது எப்படி இருப்பினும் வருங்காலத்தில் வேட்ப்பாளர் தெரிவுகளில் மாற்றம் கொண்டு வந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஒன்றை காலம் ஏற்ப்படுத்தியே ஆகும் என்றே நம்புவோம்.

அடுத்து அரசுடன் கூட்டு சேர்ந்து கேட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு வருவோம். இது என்ன தோற்றவர்களை இனி அரசியல் எதிர்காலம் இல்லாதர்வர்கள் என சிலர் யோசிக்கலாம். அனால் முதமைச்சர் தெரிவு , மற்றும் அமைசரவையில் சந்திரகாந்தன் (பிள்ளையான் ) ஒருவேளை இல்லாமல் இருக்காலாம் என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இவர்களில் மேலும் சிலராவது மாகாணசபையில் இருந்திருக்கலாம் என எண்ணம் , முதலமைச்சு தமிழ் தரப்பிலிருந்து பறி போனதிலிருந்தும், முதலமைச்சு ,சில மாகாண அமைச்சுக்களும் இதுவரை தமிழ் தரப்பில் இருந்தன (இங்கு முதலைமைச்சு , மாகாண அமைச்சுக்களை முழுமையாக பிரயோகித்தார்களா , அல்லது தெரியாமல் இருந்தார்கள் என்கிற விமர்சனங்களுக்கு அப்பால் தமிழரிடம் இவை இருந்தன என்றளவில் ) ஆனால் அவை முற்று முழுதாக தமிழரிடம் இருந்து கைநழுவி போய்விட்டன என்ற சாட்டை அடிக்கு பின் தமிழ் மக்கள் யோசிக்கத்தான் செய்வார்கள்.

ஆனாலும் இவர்களின் தோல்விக்கு முற்று முழுதாக மக்களை யாரும் கை நீட்டிவிட முடியாது . இவர்களில் தோல்விக்கு இவர்கள் (த .ம ,வி ,பு கட்சியை மக்கள் மயப்படுத்தாமை ) அடுத்து கூட்டமைப்பின் இவர்களுக்கெதிரான சூறாவளி பிரச்சாரம் (மொத்தத்தில் வட - கிழக்கிலிருந்து கூட்டமைப்பின் பா..உறுப்பினர்கள் , அதரவாளர்கள் அனைவரும் முகாமிட்டு பிரச்சாரம் செய்தது ) , அரசாங்க எதிர்ப்பு அத்தோடு இவர்களின் தோல்வியின் முக்கியமானவர்களில் கருணா எனப்படும் முரளிதரனும் ஒருவர் என்பதை சொல்லியே ஆகவேண்டும். ஒரே கட்சியில் போட்டியிட்டும் ஒற்றுமையின்மை, இவரின் த .ம , வி .பு கட்சிக்கு எதிரான முக்கியமாக சந்திரகாந்தனுக்கு (பிள்ளையானுக்கு ) எதிரான பிரச்சாரம் அவரின் சகோதரிக்கும் வாக்கை குறைத்திருக்கிறது (அவரின் சகோதரியை வேட்ப்பாளராக தெரிவு செய்ததே அவர் மீதான விமர்சனம் மேலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது என்பது வேறு கதை ) அதே நேரம் சந்திரகாந்தன் (பிள்ளையான் ) , த . ம .வி ,பு இக்கும் வாக்குகளை குறைத்திருக்கிறது.

த. ம .வி பு. கட்சியின் வேட்பாளர் தெரிவிலும் . பிரச்சாரத்திலும் மிகப்பெரிய தவறுகள் விட்டிருக்கின்றார்கள் மேல் குறிப்பிட்டதைப்போல் இவர்கள் தமது கட்சியை மக்கள் மயப்படுத்தலில் தோல்வி கண்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும் . இன்றைய அரசியல் சூழலில் யாருக்குமே வாய்த்திராத சந்தர்ப்பங்கள் , அதிகாரங்கள் , வாய்ப்புக்கள் சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையானுக்கும் ) அவரின் கட்சிக்கும் வாய்த்தது . கடந்த நான்கு வருடத்தில் தம்மால் பயன்படுத்த முடிந்த அதிகாரங்களை பிரயோகித்து சில வேலைகளை செய்திருந்தால் , தமது கட்சியின் எதிர்காலம் மக்கள் மயமாக்கம் தொடர்பாக தொடர்ந்து செயற்ப்பட்டிருந்தால் இந்தளவுக்கு தோல்வியை சந்திக்க நேர்ந்திருக்காது என்றே கூற வேண்டும்.

வெறுமனே வீதி அமைத்தல் ,கட்டடம் அமைத்தல் , ஒருசிலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தல் , சில குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்து மட்டும் அபிவிருத்தி வேலைகளை செய்தல் என்றளவோடு நின்றதோடு , மேலும் மாகாண சபை , பிரதேச சபை ஆற்றவேண்டிய சில அடிப்படை வேலைகளை பார்பதோடு மட்டுப்படுத்திக்கொண்டனர் என்றே பார்க்க தெரிகிறது . தமிழ் , முஸ்லீம் உறவு இவர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்திருந்தது அதுவும் இத் தேர்தலுக்கு பின் ? ஆக்கப்பட்டிருக்கிறது . அத்தோடு குறுகிய காலத்துக்குள் அரசியல் படித்திருக்கிறார்கள் , பேச்சாற்றலை வளர்த்திருக்கிறார்கள் என்பதும் காண முடிகிறது . இவர்களும் தமது கட்சி உறுப்பினர்கள் என்றே வேட்ப்பாளர் தெரிவுகளை பெரும்பாலும் மேற்கொண்டிருக்கின்றனர் பொதுவான சிலருக்கும் , மக்கள் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு பரவலாக வாய்ப்புக்கள் வழங்கவில்லை.

அத்தோடு பிரதேச ரீதியாக வாக்காளர்களை மையப்படுத்தி வேட்ப்பாளர்களை நிறுத்தவில்லை . அத்தோடு பிரச்சார நடவடிக்கைள் அனைத்து கிராமங்கள் நோக்கி விரிவுபடுதப்படாமை , தம் சார் ஊடகங்களை சரியாக பயன்படுத்த தவறியமை என்பன . இவர்கள் மீதான சில விமர்சனங்களோடு சேர்த்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தோல்விக்கு காரணக்களாக இருக்கின்றன . இவர்களின் கிழக்கு சார் சில ஆதரவாளர்களிடம் தோல்விக்கு உரிய காரணம் என்னவாக இருக்கும் என வினவியபோது . அவர்காளால் கோரப்பட்ட சில விமர்சனங்கள் , அவர்கள் மற்றவர்கள் பேச்சை (கிழக்கு சார்ந்து சிந்திக்கின்றவர்களின் ) பெரிதாக கேட்பதில்லை . தொடர்புகளை விரிபுபடுத்தவில்லை , பரந்து பட்டு கட்சிப்பணிகளை கிராமம் இளையோர் நோக்கி விரிவுபட்டுத்த வேண்டுமென்று சில காரணங்களை அடுக்கினர் . எது எப்படியோ இக்காரணிகள் உண்மையெனில் . இத்தேர்தல் அவர்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத்தந்திருக்கும். சுய விமர்சனம் செய்ய தயாரானவர்களா என்பது அவர்களின் எதிர்கால செயர்ப்பாடுகள்தான் பதில் கூற வேண்டும்.

இங்கு பிரதேச வாதம் எந்த அளவுக்கு தமிழ் அரசியல் சூழலுக்கு ஆரோக்கியமானது என்பதை பிரதேச வாதத்தில் தீவிரமான மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது என்பதை இன்றைய மாகாண சபை சூழல் கேள்விகேட்டு நிட்க்கின்றது. சில பிரதேச வாத கருத்துக்களில் சில நிஜாயங்கள் இருக்கலாம் ஆனால் அது முழுமையாக வெற்றி பெறாது என்பதை காலம் தான் ஒரு சிலருக்கு பதில் சொல்லும்.

கிழக்கு மக்கள் தமக்கான பலமான தலைமைகள் சில தேவை என்று சிந்திப்பதில் தவறேதும் இல்லை அதில் அவர்கள் எவ்வாறு பலப்படுத்தப்பட வேண்டும் , எங்கிருந்து பலப்படுத்த வேண்டும் என்பதே இங்கு முக்கியமானது . எமது பிரதேசவாத கருத்துக்கள் எமது சமூகத்தை வளவீனப்படுத்துவதாயும் , அதே நேரம் ஏனைய சமூகத்துக்கு வாய்ப்பை வழங்குவதாயும் இருக்க முடியாது. மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய சேவைகளை எமது மக்களுக்கு எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பதை சிந்திப்பதோடு . பேரின வாத சிந்தனைகள் , செயற்ப்பாடுகள் சில தற்காலத்திலும் எதிர்காலத்திலும் எம் மக்களை பாதிக்கும் என சரியாக மதிப்பிட்டு அதை தடுக்கின்ற தலைமைகள் உருவாகவேண்டும்.

ஆகவே கிழக்கு மக்கள் உதாரணத்துக்கு ஒன்றை இப்போதைக்கு சிந்திக்கலாம் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தமது கிழக்கு சார்ந்த தலைவர்களை எவ்வாறு பலப்படுத்துவது, முடிவெடுக்கக்கூடிய அதிகாரமிக்கவர்களாக மாகாணம் சார்ந்து ஆக்குவது என்பதே எமது தமிழினம் சார்ந்து நம்மைதரக்கூடிய சிந்தனையாக இருக்கும். இதற்கு இளையர்களின் உழைப்பும் தலைவர்களின் வெளிப்படைத்தன்மைகள் என்பன முக்கியமானவை. பிரதேச வாத கருத்துக்கே இடம் இல்லாத சூழல் இப்படியான நடவடிக்கைகள் மூலமாகவே உருவாக முடியும் . அதோடு கிழக்கு மக்களின் இந்த அதிகாரத்தையும் ஆளுமையையும் வளத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு கிழக்கு மக்களிலும் , அரசியல் தலைவர்களிலுமே தங்கியிருக்கின்றது . இதை விடுத்து வெறுமனே கருத்துக்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திவிடப்போவதில்லை . இன்று வடக்கிலும் கிழக்கிலும் பல அரசியல் கட்சிகள் , தலைவர்கள் உருவாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை . அப்போதுதான் சர்வாதிகார தன்மைகள் நீங்கி , மக்களுக்கு சரியான தலைமைகளும் கட்சிகளும் இனங்காணப்படும் . அதுவே ஜனநாயகமாகவும் இருக்க முடியும். அந்த வகையில்தான் வெற்றி பெற்றவர்கள் , தோற்றவர்கள் என பல தரப்பையும் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை உணரப்பட்டதாலேயே வாசகர்களின் சிந்தனைக்காக சில கருத்துக்கள்.

அத்தோடு இன்று புதிதாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கருத்துத்தான் இக்கடுரையை அவசரமாக எழுதத்தூண்டியது அது 'அன்று மறைந்த அஸ்ரப் கிழக்கில் ஒரு முஸ்லீம் அலகு வேண்டுமென்று ஆசைப்பட்டார் , ஆனால் முழு கிழக்கு மாகாணமே முஸ்லீம் மாகாணமாக மாற்றுவோம் அதற்கான திட்டமும் எங்களிடம் இருக்கிறது ' நடைமுறையில் சாத்தியம் இல்லாவிட்டலும் எவ்வளவு ஆபத்தான கருத்து. மூவினங்களையும் ஒன்றிணைத்து இன ஐக்கியத்தை பேணவேண்டிய மாகாணத்தில் இப்படி ஒரு கருத்தா.

நேரடியாக சொல்வதானால் தமிழர்கள் இரத்தம் சிந்தி பெற்றெடுத்த மாகாண அதிகரா பீடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புன் எதிர்பு அரசியலே வாக்குகளை அள்ளித்தரும் கொள்கை அமர்த்தி இருக்கின்றது. இங்கு முஸ்லீம்கள் அவர்கள் சார்ந்து சரியாகத்தான் இருக்கிறார்கள் . நாம் முழுமையாக கொள்கை சார்ந்து மட்டும் இருக்கப்போகின்றோமா . இல்லை மக்கள் சார்ந்து இருக்கப்போகின்றோமா இதில் தமிழ் தலைமைகள் அனைவரும் பொறுப்பு கூறவேண்டியவர்கள் .(இதை மனோ கணேசனும் தனது முகப்புத்தகத்தில் எழுதியிருந்ததை அவதானிக்க முடிந்தது ) இது கிழக்கு தமிழ் மக்கள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை என்பதோடு, இங்கு தமிழ் தரப்பு கட்சி பேதமின்றி அனைத்து பலமிக்க தமிழ் கட்சிகளும் (கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் , த ம.வி . பு , ஈ .ம .ஜ .க அனைத்துமே விமர்சனத்துக்கு உட்ப்பட்டவை யாருமே முற்று முழுதாக சுத்தமானவர்கள் அல்ல என்ற சுயவிமர்சனத்தை கருத்தில் கொள்க ) பலப்படுத்த படவேண்டிய தேவை இனியாவது உணரப்படட்டும்.

ஒரு தரப்பை மாத்திரம் நம்பி நாம் பல பாடங்களை கற்றிருக்கின்றோம் . கிழக்கு தேர்தலிலோ ,இனி வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு மாத்திரமோ அல்லது பல கட்சிகள் பிரதிநிதிகளை பெறுவதில் ஒன்றும் பிரச்சனையில்லை ஆனால் அங்கும் இனம் சார்ந்தில்லாமல் தனி மனிதர்கள் சிலர் தோற்கடிக்க படவேண்டும் என்ற பிரச்சாரங்கள் தலை தூக்குமானால், கிழக்கின் நிலைமை இன்றில்லாவிடினும் பல வருடங்களின் பின் வடக்கிலும் ஏற்ப்படலாம் . அதற்கு உதாரணமாக யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை பெற இருந்த இழுபறியை நினைவில் கொள்க . மொத்தத்தில் கூற வருவது இவர் மட்டும் தான் தேவை என்றில்லை . தமிழர்கள் எல்லோரும் தேவை என்பதே . அவர் திறமை செயற்ப்பாடுகள் சார்ந்து அவர் அரசியலில் வளரட்டும் . (இலங்கையின் மற்றைய இரண்டு தேசிய இனங்களைப்போல் ) இனம் சார்ந்து அனைவரும் ஒன்றுபடும் கலாச்சாரத்தை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வோமே,,!

"சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒரு தலையா உட்க்கொட்டம் இன்மை பேரின்"

சுதந்திர ஊடகம் என்ற வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள இக்கட்டுரையின் பொருளுக்கு கட்டுரையாளரே பொறுப்பு.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com