"எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கையை மாற்று"
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னி ட்டு "எமது சிறுவர்களுக்கு பாதுகாப் பான நாடாக இலங்கையை மாற்று" என்ற தொனிப்பொருளில் சிறுவர் துஷ்பிரயோகத்தினை எதிர்க் கும் மாபெரும் அமைதி ஊர்வலமும் கலாசார விழிப்புணர்வு நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
காலை 9.00மணியளவில் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான அமைதி ஊர்வலம் மகாஜனக் கல்லூரி வரை சென்று நிறைவுபெற்றது.
பிள்ளைகளின் பாதுகாப்புக்காக ஒன்று திரள்வோம் என்ற கோஷத்துடன் மட்டக்களப்பு சர்வோதயம் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாஜம் என்பன இணைந்து இப்பேரணியை நடத்தின.
இவ் ஊர்வலத்திலும் ஒன்றுகூடலிலும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண சர்வோதய இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம், மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செணவிரட்ன, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் மண்டபத்தில் விழிப்புணர்வு கலாசார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இணையத்தின் தலைவர் செல்வேந்திரன் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையின் மனநோய் வைத்திய நிபுணர் கடம்பநாதன்,மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தின் சிறுவர் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி, விழுது ஆற்றல் மேம்பாட்டு நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் காசுபதி நடராசா, பெண்கள் சமாஜ தலைவி திருமதி சுகுமாரன் சௌந்தரராணி உட்பட மதத்தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது சிறுவர் உரிமைகள் அவை பாதுகாக்கப்படவேண்டிய வழிமுறைகள்,இன்று சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கருத்தரங்கு இடம்பெற்றதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment