Monday, September 17, 2012

மகனுக்கு விளக்கமறியல்!! நீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றாராம் மர்வின் சில்வா!

செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஜக் பகுதியில் கடமையில் நின்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, றெஹான் விஜயரட்ன மற்றும் வேறு சிலரும் கொம்பனித்தெரு பொலிஸில் சரணடைந்தனர்.

விசாரணைகள் முடிவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, றெஹான் விஜயரட்ன மற்றும் 5 பேரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை அன்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்ததவும் நீதவான் உத்தரவிட்டார்.

இராணுவ மேஜரொருவரை தாக்கி, அவரது கைத்துப்பாக்கியை பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா 'நைட் கிளப்பில் ஏற்பட்ட குழப்பத்தின்போது யாரோ சிலர் இராணுவ மேஜரை தாக்கினர். அத்தருணத்தில் அவரது கைத்துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. எனது வாகன சாரதி இக்கைத்துப்பாக்கியை எடுத்து பொலிஸில் ஒப்படைத்தார்' என் கூறியுள்ளார்.

அன்றையதினம் கொழும்பிலுள்ள ஹில்டன் வீட்டுத்தொகுதியில் தனது நண்பர்களுடன் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

'நான் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்த பின்னர் வீட்டிற்குப் போக தயாரானபோது 2 பேரை அவதானித்தேன். இவர்களில் ஒருவரை வெளிநாட்டுப் பயணங்களின்போது பல தடவைகள் நான் சந்தித்துள்ளேன். நாவல நிஹால் என்னும் இவர் 'பொடி சூட்டி' என அழைக்கப்படுபவராவார். நான் அவருக்கு ஹலோ சொன்னேன். பின் வந்த மற்றைய நபர் இவன் யாரென அவர்களிடம் கேட்டார். என்னைப் பற்றி அவன், இவனெனப் பேசுவதற்கு நீ யாரென நான் கேட்டேன்' என அவர் கூறினார்.

இவ்வாறான வாய்த்தர்க்கத்தை விட வேறு சம்பவங்கள் இடம்பெறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகனார் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து அமைச்சர் மேர்வின் சில்வா தனது மகனுக்கான தான் வருந்துகின்றபோதிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவை தான் மதிப்பதாக ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

ஒரு பௌத்தர் என்ற வகையில் இதை தன்னால் சகித்துக்கொள்ள முடியும் எனக் கூறிய அமைச்சர் மேர்வின் சில்வா, ராஜபக்ஷ அரசாங்கத்தின்கீழ் சட்டத்தின் ஆட்சி அமுலில் உள்ளது என்பதை இந்நீதிமன்ற உத்தரவு வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com