Sunday, September 2, 2012

இந்திய விமானப்படை விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொருங்கின. 9 பேர் கருகிச்சாவு..

இந்திய விமானப் படையைச் சேர்ந்த இரு ஹெலிகாப்டர்கள் கடந்த வியாழக்கிழமை நடுவானில் மோதி, விபத்துக் குள்ளாகின. எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் அவை. அதில் பயணித்த 9 பேர் விபத்தில் கொல்லப்பட்டனர். குஜராத்தின் ஜாம்நகரில் இந்த விபத்து நடைபெற்றது. இரு ஹெலிகாப்டர்களும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே விபத்து நடைபெற்றது.

இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றுக்கொன்று போதிய இடைவெளி விடாமல், அபாயகரமான அளவில் குறைந்த இடைவெளியில் பறந்த காரணத்தாலேயே விபத்து ஏற்பட்டது. இந்திய விமானப்படையின் ஃபிளையிங் கைட்-லைனில் கூறப்பட்டுள்ள தூர இடைவெளி இவ்விரு ஹெலிகாப்டர்களுக்கு இடையே இருக்கவில்லை.

இது அனேகமாக, இரு ஹெலிகாப்டர்களில் ஒன்றை செலுத்திய விமானி, மற்றைய ஹெலிகாப்டரை டிஸ்ட்டன்ஸ் ஜட்ஜ்மென்ட் செய்யாமல் நெருங்கி வந்ததால் ஏற்பட்டு இருக்கலாம் என விமானப்படையின் முதல்கட்ட விசாரணை அறிக்கை கூறுகிறது. எந்த ஹெலிகாப்டர் நெருங்கி வந்தது என்பது தெரியவில்லை.

பொதுவாக ஹெலிகாப்டர் விபத்துக்களில், தரையில் வீழ்ந்த ஹெலிகாப்டர் தீப்பிடிக்காமல் இருந்தால், அதில் பயணித்தவர்கள் உயிர் தப்ப சாத்தியம் அதிகம். தீப்பிடித்தால் நிலைமை கவலைக்கிடம். தரையில் இருந்து 6,000 அடிக்கு மேல் பறந்த நிலையில் இருந்து வீழ்ந்து தீப்பிடித்த ஹெலிகாப்டர்களில் இருந்து யாரும் தப்பியதாக சரித்திரம் இல்லை.

இந்த விபத்தில், தமிழகம் சூலூர் (கோவை) விமான தளத்தை சேர்ந்த வி.மனோஜ் உயிரிழந்தார். கோவை, சிங்காநல்லூரில் அவருடைய இறுதிச் சடங்குகள் பூரண ராணுவ மரியாதையுடன் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. விபத்துக்கு உள்ளான இரு ஹெலிகாப்டர்களில் ஒன்றை செலுத்தியவர் மனோஜ்.

கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்த மனோஜ், சூலூர் விமான தளத்தில் ஸ்குவாட்ரன் லீடராக இருந்தார். ஐ.நா. அமைதிப்படையின் ஒரு பிரிவாக சென்ற இந்திய படைப்பிரிவில், விமானப் படையின் சார்பில் கொங்கோ நாட்டுக்கு அனுப்பப்பட்ட டீமில், மனோஜூம் ஒருவர்.

சில மீடியாக்களில் செய்தி வெளியானதுபோல, இவர் பயிற்சி விமானி கிடையாது. பயிற்சியளிக்கும் விமானி. 2000-ம் ஆண்டு திருவனந்தபுரம் பல்கலைக்கழக பாஸ்அவுட் பேட்சை சேர்ந்தவர். 2002-ல் இருந்து விமானப்படையில், பறக்கும் மிஷனில் உள்ளார்.

இதற்குமுன், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் மோதிக்கொண்ட சம்பவம், 2010 செப்டெம்பரில் நடந்தது. அதில் 3 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. சரியான இடைத் தூரத்தை இரு ஹெலிகாப்டர்கள் மெயின்டெயின் பண்ணி பறந்து கொண்டிருக்க, 3-வது ஹெலிகாப்டர் இடையே புகுந்ததில், மூன்று ஹெலிகாப்டர்களும் விபத்துக்கு உள்ளாகின.

சீட்டாக் ரக ஹெலிகாப்டர்கள் தொடர்புபட்ட விபத்து அது. காலநிலை சரியில்லாத காரணத்தால் (விசிபிளிட்டி குறைவு) ஏற்பட்ட விபத்து என்று விசாரணையில் தெரியவந்தது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com