Saturday, September 1, 2012

தினமும் 6 மணி நேரம் தூக்காவிட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாம் - மருத்துவர்கள்

பெண்களுக்கு தினமும் 6 மணி நேர தூக்கம் சரியாக தூங்காவிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் என்று வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். பெண்களின் தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செரில் தாம்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 40-50 வயது பெண்கள் 412 பேரின் மருத்துவ விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர்கள் இரவில் எவ்வளவு நேரம் தூங்குகின்றனர் என்ற தகவலும் பெறப்பட்டது.

ஆய்வில் தெரியவந்த தகவல் பற்றி செரில் தாம்சன் தெரிவிக்கையில், பொதுவாகவே, எல்லாருக்கும் தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். பெண்களும் கட்டாயம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். வேலை பளு, மன உளைச்சல் போன்ற காரணங்களால் பல பெண்கள் போதிய அளவு தூங்குவதில்லை. இரவு தூக்கம் 6 மணி நேரத்தைவிட குறைந்தால், எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும். தூக்கம் சரியாக வராவிட்டால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். போதிய நேரம் தூங்காத பெண்களை மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் எனவும், ஆன்கோ டைப் டிஎக்ஸ் வகை கேன்சர் கட்டிகள் மெல்ல இவர்களை தாக்கத் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், நோய் பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபட்டவர்கள் ஆகியோருக்கும் போதுமான தூக்கம் அவசியம். அவர்கள் தினமும் 6 மணி நேரம் தூங்காவிட்டால், மார்பக புற்றுநோய் மீண்டும் தீவிரமாகும் அபாயம் இருக்கிறது என செரில் தாம்சன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com