இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஒருவரைத் தாக்கிப் படுகாயம் விளைவித்த குற்றத்திற்காக தேடப்பட்டுவரும், அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக, களனி ரஜமகா விகாரையில் வைக்கப் பட்டிருந்த புனித கபிலவஸ்துவைத் தரிசிக்க தனது தந்தை மேர்வின் சில்வாவின் பாதுகாவலர்களுடன் வருகை தந்தார். அதை 2000 பொலிசாரும் 500 கொம்மாண்டோ படையினரும் சேர்ந்தும் "ஆ" வென்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மாலகவை இதுவரை கைது செய்ய இயலாமல் இருப்பது பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் சந்தேக நபரான மாலக சில்வா சுதந்திமாக நடமாடித் திரிவதாக அறிய முடிகிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை பரபரப்பான நேரத்தில் ஜய்க் ஹில்டல் ஓட்டலில் இரண்டு இராணுவ அதிகாரிகளைத் தாக்கி, அவர்களின் கைத்துப்பாக்கிகளையும், செல்போனையும் பறித்தாகவும், இது சி.சி.டிவி.யில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. படுகாயமடைந்த மேஜர் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
மாலகவை கைது செய்வதற்கு இரண்டு விசேட பொலிஸ் குழுவினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒரு குழுவினர் அவரின் வீட்டுக்குச் சென்ற பொழுது அவர் அங்கிருக்கவில்லையென்றும், எனினும் இன்று அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்ப்பதாகவும், அவரைக் கைது செய்யத் தவறும் பொலிஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் சிரேட்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment