16 ஆவது அணி சேரா நாட்டுத் தலைவர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு
16 ஆவது அணி சேரா நாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஈரானுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ, ஈரான், பாகிஸ்தான், பங்களாதேஷ், லெபனான், உட்பட பலநாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி அஹமட் நெஜாத்திற்கும், ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவுக்கும் இடையே இடம் பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பில் இரு தரப்பு உறவு குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், ஈரான் நாட்டின் கடனுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் உமாஓயா நீர்ப்பாசன திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், ஈரானின் உதவியுடன் 1200 க்கும் அதிகமான கிராமங்களில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுவரும் கிராமிய மின்சாரத் திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு விளக்கியுள்ளார்.
அத்துடன் சில வாரங்களுக்கு முன்னர் ஈரானில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட அழிவு குறித்து ஜனாதிபதி ஈரான் அரசாங்கத்துக்கு தமது கவலையை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து லெபனான் ஜனாதிபதி ஜெனரல் மிசெல் சுலைமானுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இடம் பெற்ற சந்திப்பில், லெபனானில் பணி புரியும் இலங்கைப் பணிப் பெண்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன், இவர்களுக்காக உச்ச அளவிவான நலன்புரி சேவைகளை வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கை தொடர்பில் லெபனான் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து ஈரான் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைத்துள்ளதுடன், அணிசேரா நாடுகளின் அமைப்பை ஆரம்பிப்பதற்கான நோக்கம் மாநாட்டினூடாக திறன்படி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், அது முன்னேறிவரும் மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு பிரயோசனமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து எழுப்பப்பட்ட ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், 30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டி தற்பொழுது நாட்டில் சமாதானம் நிலை நாட்டப்பட்டுள்ளதாகவும், ஆயுதம் தூக்கி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment