Wednesday, September 12, 2012

பிள்ளையின் பிரதிநிதிகள் குழு 14ம் திகதி கொழும்பு வருகின்றனர்

தருஸ்மன் அறிக்கையை ஆராயும் பொருட்டு விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படுமென எடுக்கப் பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இக்குழு இலங்கை வரவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை யடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளையின் பிரதிநிதிகள் அடங்கிய குழு எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தருஸ்மன் அறிக்கையை ஆராயும் பொருட்டு விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படுமென எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இக்குழு இலங்கை வரவில்லை என்பதனை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமெனவும், 14ஆம் திகதி இலங்கை வரும் குழுவுக்கும், தருஸ்மன் அறிக்கைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ஜி. எல். பீரிஸ் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், இதுபோன்ற குழுக்களின் வருகையை நாம் வரவேற்கிறோம். இவர்களை
வரவிடாமல் செய்வதோ, அல்லது வருகையை மறைப்பதோ நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அரசாங்கம் இவர்களின் வருகையை ஒரு சிறந்த சந்தர்ப்பமாகவே கருதுகின்றது என தெரிவித்துள்ளார்.

நாம் குறுகிய காலத்திற்குள் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளோம். எமது சாதனைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு இது எமக்கொரு அளப்பரிய சந்தர்ப்பம். இதனை நாம் முழுமையாக பயன்படுத்தவே நினைக்கிறோம். எம்மிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நிலைமைகளை நேரில் கண்டாராய்வதன் மூலம் அவர்களாலும் உண்மை நிலைவரங்களை புரிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கும் அந்தவகையில் இலங்கையின் அழைப்பின் பேரிலேயே இக்குழு இலங்கை வரவுள்ளது என தெரிவித்துள்ளார்.

இக்குழுவின் விஜயத்தை தொடர்ந்து நவநீதம் பிள்ளையும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வாரென எதிர்பார்க்கிறோம். அத்துடன் இவர்களது வருகை பார்வையாளர்களாக மாத்திரமே அமையுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment