ஜனநாயகத்தைப் பலப்படுத்தி அரசா ங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இம்முறை தேர்தல் வெற்றி மேலும் உந்துசக்தியாக அமைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் வெற்றி குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அந்த விசேட செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு சப்ரகமுவ, மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், நடாத்தி சிறந்த ஒரு மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல்கள் ஆணையாளர் திணைக்களத்திற்கும், ஆளும், எதிர்க்கட்சி சகல வேட்பாளர்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும், விசேடமாக இந்த மாகாணங்களைச் சேர்ந்த சகல பொது மக்களுக்கும், இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை இந்தத் தேர்தல் தெளிவாக வெளிப்படுத்தியது எனது தலைமையில் 2005ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வரும் தேர்தலில் 10வது வெற்றியான இந்தத் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
தேசிய மக்கள் கருத்து கணிப்பாக இம்முறை நடைபெற்ற இந்த தேர்தல் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட எமது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல பலம் கிடைத்துள்ளது.
அதேபோன்று இன மத, குல, பேதங்களை காண்பித்து வெற்றியை எதிர்பார்த்திருந்த அனைத்து சக்திகளையும் தோல்வியடையச் செய்து, இலங்கையின் தேசம் மற்றும் அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்கள் தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
ஒரு இலக்கை நோக்கி வெற்றிகரமாக நெருங்கக் கூடியதாக இருப்பது வெற்றியாளரைப் போன்று தோல்வியாளரும் இணைகின்ற போதே ஆகும். எனவே, நாடு எதிர்நோக்கும் சாவல்களின் போது பொறுப்புடனும் ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment