புலிகளின் குரலாக இன்றும் செயற்பட்டுவருவதாக முஸ்லிம் மக்களால் நம்பப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள மறைமுகமான இரகசிய உடன்பாடானது முஸ்லிம் மக்களிடையே பாரிய எதிர்ப்பலையையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. இது புலம் பெயர் தமிழர்களினதும், புலி ஆதரவாளர்களினதும் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவுள்ள சூழ்ச்சிக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களை அடகு வைப்பதற்குச்சமனாகும்.
வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் புலி ஆதரவு சர்வதேச சதித்திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணைபோவதுடன் முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கும் நயவஞ்சகச் செயலுமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
புல்மோட்டையில் நடைபெற்ற ஐ.ம.சு.முவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி இச்சவாலை விடுத்துள்ளார்.
உண்மையில் நாட்டிலுள்ள சில பள்ளிவாசல்கள் மீதான குழப்பத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியே உள்ளமை தெளிவாகியுள்ளது. இது புரியாது அல்லது இந்த உண்மை தெரிந்திருந்தும் மு.கா தலைவர் ஹக்கீம் தான் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்.
இவ்வாறு அவர் நடந்துகொள்வது முஸ்லிம்களுக்கு அவமானமாக உள்ளது. முடிந்தால் மு.கா தலைவர் உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பள்ளிவாசலை தெரிவிக்கட்டும் எனவும் அஸ்வர் எம்.பி சவால் விடுத்தார். அரசை விமர்சிக்கும் ஹக்கீம் ஏன் அதே அரசியலில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் மு.கா தலைவர் ஹக்கீம் இன்று கிழக்கில் இனத்துவேசமாக பேசிவருகிறார். தயவு செய்து மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் சாணக்கிய அரசியல் மற்றும் தலைமைத்துவத்தைப் பின்பற்றுமாறு நான் அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
அண்மைக் காலமாக மு.கா தலைவரது செயற்பாடுகள் காரணமாக அக்கட்சிக்கிருந்த சொற்ப ஆதரவும் இல்லாதுவருகிறது. விரைவில் மு.காவிற்கு மூடுவிழா செய்ய வேண்டிய நிலை ஏற்படவுள்ளது. அதற்கு தலைவரே வழி சமைத்து வருகிறார். கொடிய விஷப்பாம்பு கக்கும் விஷம் போன்ற அவரது இனத்துவேச கருத்துக்கள் நாட்டில் இன ஒற்றுமையை சீர்குலைப்பதாக உள்ளது என்றும் அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
மு.காவினால் உடைக்கப்பட்டதாகப் பொய்ப்பிரசாரம் செய்யப்படும் தம்புள்ள, தெஹிவளை பள்ளிவாசல்களில் இப்போது முன்னரை விடவும் முஸ்லிம்கள் அதிகமாகச் சென்று ஐவேளைத் தொழுகைகளை நடத்திவருகிறார்கள். விரைவில் மு.காவிலுள்ள முஸ்லிம்கள் முன்னரைப் போன்று தம்மைத் தேசியக் கட்சியான ஸ்ரீ.ல.சு.க வில் முழுமையாக இணைக்கவுள்ளதாகவும் அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
No comments:
Post a Comment