‘ஆர்மகெடோனுக்கு எதிரான உளவாளிகள்: இஸ்ரேலின் இரகசியப் போர்களுள்’ என்னும் புத்தகம் சந்தேகத்திற்கு இடமின்றி, இஸ்ரேலின் உளவுத்துறைப் பிரிவான மொசாட் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈரானின் உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகளை அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்தை சேதப்படுத்துவதை நோக்கம் கொண்ட பரந்த செயற்பாடுகளின் ஒரு பகுதியாக படுகொலை செய்துள்ளது எனத் தெரிவிக்கிறது.
மேற்கு சக்திகள் ஈரானின் அணுசக்தி உள்கட்டுமானத்தை அழிப்பதற்கான மறைமுகமான பயங்கரவாதத் திட்டத்தை செயல்படுத்துகின்றன என்பது பரந்த அளவில் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்நூலின் ஆசிரியர்களான Haaretz பத்திரிகைக்கு எழுதும் முக்கிய இஸ்ரேலிய இராணுவ மற்றும் உளவுத்துறைச் செய்தியாளரான ஜொஸ்ஸி மெல்மானும், ஒரு CSB செய்திநிறுவனத்தின் அரசியல் நிருபரான டான் ராவிவும் படுகொலைகள் அனைத்தும் ஷா சகாப்தத்தில் இருந்து ஈரானுக்குள் இருக்கும் “பாதுகாப்பு இல்லங்களை” பயன்படுத்தி மொசாட் உறுப்பினர்களால் நடத்தப்பட்டன என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவை ஒப்பந்தக்கூலியினரால் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. மாறாக “நீலம் மற்றும் வெள்ளை” செயற்பாடுகள்—இது இஸ்ரேலின் தேசியக் கொடியின் நிறத்தைக் குறிப்பதாகும். படுகொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு பொறுப்புக் கொண்ட கிடோனில் இருந்தியங்கும் மொசாட் உறுப்பினர்கள் இக்கொலைகளை நடத்தினர்.
‘ஆர்மகெடோனுக்கு எதிரான உளவாளிகள்’ என்ற நூலை எழுதிய ஆசிரியர்கள் மொசாட்டின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்த முயலும் இடதுசாரிகள் அல்ல. இவர்கள் மொசாட் இஸ்ரேலுக்குச் செய்யும் பணிகளைப் பெருமைப்படுத்துகின்றனர். 2009 ஏப்ரல் மாதம் “நெத்தென்யாகு ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என நான் ஆலோசனை கூறுவேன்—அத்தகைய நடவடிக்கை மேற்குக்கும் அரபு உலகிற்கும் நலன்களை அளிக்கும், ஆனால் அதை அவர்கள் ஒப்புக்கொள்ள இயலாது” என்ற தலையங்கம் கொடுத்து Haaretz இல் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆத்திமூட்டப்படாத போரை இஸ்ரேல் நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளது இதற்கு சான்றாகும்.
பெரும்பாலான கொலைகாரர்கள் ஈரானியப் பின்னணி கொண்ட இஸ்ரேலியர்கள், ஒருவேளை இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களாக இருக்கக் கூடும், ஈரானிய கடவுச்சீட்டையும் வைத்திருக்கலாம் என்று புத்தகம் தெரிவிக்கிறது. 1979 புரட்சிக்குப் பின் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் ஈரானை விட்டு நீங்கினர், இஸ்ரேலுக்குப் பலர் வந்துவிட்டனர். அவர்களில் சிலரை மொசாட் தேர்ந்தெடுத்து, பயிற்சி கொடுத்தது. அல்லது அவர்களுடைய பார்சி மொழி பேசும் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தது. இந்த முகவர்கள் வாடிக்கையாக பல பாதைகள் மூலம் ஈரானுக்குச் செல்லுகின்றனர்.
இப்பாதைகள் குர்திஷ் பிராந்தியம் மற்றும் அஜெர்பைஜான் போன்ற இஸ்ரேல் நெருக்கமான உறவுகளைக் கொண்ட காஸ்பியன் பகுதியில் சில நாடுகள் ஆகியவற்றில் உள்ளன.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட 2007ம் ஆண்டு அமெரிக்க வெளிவிவகாரத்துறையின் இரகசியத் தந்தித் தகவல்கள் ஈரானில் பலூச்சி, அஜேரி, குர்திஷ் சிறுபான்மையினர் போன்ற அதிருப்தியடைந்துள்ள சிறுபான்மை குழுவினருடன் மொசாட் பிணைப்புக்களை நிறுவத் திட்டமிட்டிருந்தது எனக் காட்டுகின்றன. இதைத்தவிர இஸ்லாமியக் குழுக்களும் உள்ளன. இதன் நோக்கம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை தாமதப்படுத்துவது ஆகும். மொசாட்டின் தலைவர் மையர் டாகான் இத்தகைய இரகசிய, முக்கிய பணிகளுக்கு ஈரானின் தலைநகரில் படுகொலைகளை செய்வதற்குத் துணை ஒப்பந்தக்காரர்களை பயன்படுத்தும் கருத்தை நிராகரித்தார்.
“மறைமுக நடவடிக்கைகள்” மற்றும் “ஆயுதப்பரவலை தடுத்தல்” என்னும் மொசாட்டின் நடவடிக்கை குறித்து வாஷிங்டன் நன்கு அறிந்திருந்தது என்று நூல் தெளிவாக்குகிறது. ஒருவேளை எந்த நேரத்தில் மற்றும் முக்கிய குறிப்புக்களையும் அறிந்திராது இருக்கலாம். இதனால் வெள்ளை மாளிகை மறுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
கடந்த டிசம்பர் மாதம், அணுசக்தி விஞ்ஞானி பேராசிரியர் மொஸ்தபா அஹ்மதி ரோஷன் என்னும் 32 வயதுக்காரர், அவருடைய காரில் மோட்டார் சைக்கிள்காரர் ஒரு காந்த சக்திக் கருவியை பொருத்தியதை சிலர் பார்த்தபின், அக்கார்க்குண்டினால் கொல்லப்பட்டார். இந்தக் குண்டு காரை ஓட்டிவந்த ரோஷனின் மெய்க்காவலரையும் கொன்றதுடன் அங்கு சென்றுகொண்டிருந்த 85வயது நபரையும் காயப்படுத்தியது. ரோஷன் ஒரு தெஹ்ரான் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராக இருந்ததுடன், நடன்ஸில் இருக்கும் யூரேனிய அடர்த்தி நிலையத்தில் ஒரு மேற்பார்வையாளராகவும் இருந்தார். அவர் கொலைசெய்யப்படுவதற்கு சில நாட்கள் முன்பு சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) ஆய்வாளர்களை சந்தித்திருந்தார்.
ஜனவரி 2010ல் ஒரு தொலைக்கட்டுப்பாட்டில் இயங்கிய குண்டு தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் அணுசக்தி விஞ்ஞானி மசௌத் அலி மொகம்மதியைக் கொன்றது.
நவம்பர் 2010 அன்று மற்றொரு கார்க்குண்டு வெடிப்பு ஷகித் பெஹெஸ்ட் பல்கலைக்கழகத்தில் அணுசக்திப் பொறியியல் பேராசிரியராக இருந்த மஜித் ஷரியாரியைக் கொன்றது.
இமான் ஹொசின் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவரான பெரிடெயௌன் அப்பாசி டேவானியைக் கொல்லும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. ஏனெனில் அவர் உரிய நேரத்தில் காரில் இருந்து குதித்துத் தப்ப முடிந்தது.
ஜூலை 2011ல் தெஹ்ரானில் துப்பாக்கிதாரிகள் இயற்பியல் வல்லுனர் டாக்டர் தாரியௌஷ் ரேஜாயைச் சுட்டுக் கொன்றனர்.
தன்னுடைய வீட்டில் வெப்பக் கருவி ஒன்றில் இருந்து வெளிப்பட்ட கார்பன் மானொ ஆக்ஸைடின் -carbon monoxide- விளைவினால் மற்றொரு விஞ்ஞானி இறந்து போனார்.
ஈரானிய இராணுவத் தளங்களில் விளக்கப்படாத பல வெடித்தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. நவம்பர் 12, 2011ல் ஒரு குண்டு வெடிப்பு பிட் கனே என்னும் இடத்தில் இருந்த ஈரானியப் புரட்சிகரக் காவல் படையை அழித்து 17 பேரைக் கொன்றது. டிசம்பர் 2011ல் ஒரு பாரிய குண்டவெடிப்பு இஸ்பகானில் உள்ள யுரேனிய அடர்த்தி நிலையத்தின் பெரும்பகுதியை அழித்து, டஜன் கணக்கானவர்களையும் கொன்றது. இறந்தவர்களில் ஒருவர் புரட்சிகரக் காவல் படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஹாசன் மொகடம் ஆவார். இவர் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கு பொறுப்பு கொண்டிருந்ததுடன், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா ஆகியவற்றுடன் இடைத்தொடர்பிற்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார்.
மொசாட்டின் பிற மூலோபாயங்கள் ஈரானின் சர்வதேச பொருள் விநியோக சங்கிலியை துண்டித்தல், தவறான மூலக்கூறுப் பொருட்களை அனுப்பிவைத்தல், நடன்ஸில் மையம் கொண்டுள்ள சீமன்ஸ் கணினிமுறைச் செயற்பாட்டைத் தடைக்கு உட்படுத்தும் வகையில் Stuxnet என்னும் கணனித் தொற்றுக்கிருமியை இயக்கியது மற்றும் இரு வலைத்தள தாக்குதல்களை நடத்தியது ஆகியவை அடங்கும். மற்றொரு கணணி தொற்றுக்கிருமியான Duqu என அழைக்கப்பட்டது செலுத்தப்பட்டது.
மெல்மானும், ராவிவும் இஸ்ரேல் எப்படி இப்பிராந்தியத்தில் அணுசக்தி ஆயுதங்கள்மீது தங்கள் ஏகபோக உரிமையைக் காக்கும் உறுதியைக் கொண்டுள்ளதுதான் செப்டம்பர் 6, 2007 தாக்குதலின் பின்னணியில் இருந்தது என்பதைக் கூறுகின்றனர். இத்தாக்குதல் சிரியாவின் வடமேற்கில் அல் கிபிர் மீது நடத்தப்பட்டது. இந்த இடத்தில் வட கொரியா வடிவமைப்புச் செய்திருந்த அணு உலைக்கூடம் ஒன்று செயல்பட்டது என்று மொசாட் நம்பியது. அந்த நிலையத்தின் நோக்கம் குண்டுகளுக்கு பிரிவடையகூடிய பொருளான புளூட்டோனியத்தைத் தயாரித்தல் என்பதாகும்.
இப்படுகொலைகள் விஞ்ஞானிகள் மற்றும் அவர்கள் குடும்பங்களை அச்சுறுத்த உதவுகின்றன. சில விஞ்ஞானிகள் திட்டத்தில் இருந்து விலகினர் என்று மொசாட் உளவுத்துறை நம்புகிறது. சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான் இன்னும் பிற இடங்களில் இருக்கும் விஞ்ஞானிகள் ஈரானில் பணிபுரியக் கிடைத்த அழைப்புக்களை நிராகரித்தனர்.
படுகொலை மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கை அமெரிக்கா, ஐரோப்பா இன்னும் பிற நாடுகள் ஈரானுக்கு எதிரான பட்டியலிட்ட பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியதுடன் இணைந்து நடக்கிறது. பாரசீக வளைகுடாவிற்கு வாஷிங்டன் விமானத்தளங்கள் உடைய போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. “அனைத்து விருப்புரிமைகளும் மேசைமீது உள்ளன” என்ற திமிர்த்தன அறிக்கைகளுக்கு இடையே இது நடந்தது. ஆத்திரமூட்டப்படாத தாக்குதல் ஒன்றை ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்தக்கூடும் என்னும் இடையறா அச்சுறுத்தல்களும் உள்ளன. அப்படித்தான் 1981ல் ஈரான் மீதும் 2007ல் சிரியா மீதும் நடைபெற்றது.
இஸ்ரேல் தன்னுடைய சொந்த அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் இப்புத்தகம் எழுதியுள்ளது. இவற்றில் குறைந்தபட்சம் 200 குண்டுகளாவது கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் ஆகியவற்றின் மூலம் போடப்படக்கூடிய திறனுடையவை உள்ளதாக நம்பப்படுகின்றது. இஸ்ரேல் பரிசோதனைகளுக்கு உட்படாததுடன், அணுசக்தி பரவா உடன்படிக்கையில் கையெழுத்திடவும் இல்லை.
வாஷிங்டனுடைய முழு ஆதரவுடன் டெல் அவிவ் வாடிக்கையாக ஈரானை “பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் அரசாங்கம்” என்று ஹமாஸ், ஹெஸ்பொல்லா போன்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்பதே இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கும், விரிவாக்கங்களுக்கும் மற்றும் சிரியாவில் ஜனாதிபதி அசாத் ஆட்சிக்கும் எதிரான அதன் பிரதிபலிப்பிற்கும் காரணம் எனவும் கூறுகின்றது.
தெஹ்ரான் சட்டவிரோதமாக அடர்த்தி நிறைந்த யுரேனியத்தை உற்பத்தி செய்வதாக வாஷிங்டனும் டெல் அவிவும் குற்றம் சாட்டுகின்றன. இந்த அடர்த்தி வெறும் மருத்துவப் பயன்பாடுகளுக்காக இல்லை எனவும், மிகவும் சிக்கல் வாய்ந்த தூய்மைப்படுத்தும் வழிவகையைக் கொண்ட அணுவாயுதங்கள் தயாரிப்பிற்கான எரிசக்திக்காகும் எனவும் எந்த விதமான சான்றுகளும் இல்லாமல் கூறுகின்றன. அதே நேரத்தில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இவை சர்வதேச ஆய்வு முறை வடிவமைப்பிற்கு முற்றிலும் புறத்தே உள்ளன.
சில ஆண்டுகளாக இஸ்ரேல் அணுவாயுதம் தயாரிப்பதில் தெஹ்ரான் “ஒராண்டுதான் தள்ளி உள்ளது” என்று கூறிவருகிறது. பெருநிறுவனச் செய்தி ஊடகம் இது நடத்தும் படுகொலைகள், குண்டுத்தாக்குதல்கள், சேதப்படுத்தும் நடவடிக்கைகள், தன் இலக்குகளை அரக்கத்தனமாக சித்தரித்தல் ஆகியவற்றை பொறுத்துக் கொள்கிறது. இது இப்பிராந்தியத்தில் நிலவும் அமெரிக்கக் கொள்ளையின் பொறுப்பற்ற தன்மை மற்றும் முழு மௌனத்துடன் இணைந்த வகையில் உள்ளது. அதேபோல் அமெரிக்காவின் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பாசாங்குத்தனத்திற்கு இயைந்தும் உள்ளது. ஏனெனில் அமெரிக்க இதே நேரத்தில் அது அகற்ற விரும்பும் இலக்கு கொண்ட ஆட்சிகளுக்கு எதிராக நடத்தப்படும் பல பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கிறது. செய்தி ஊடக விமர்சகர்கள் தெஹ்ரானுக்கு எதிரான இடையறா ஆத்திரமூட்டல்களுக்கான உண்மையான காரணத்தை விளங்கப்படுத்துவதும் இல்லை. அதாவது மத்திய கிழக்கு மற்றும் காஸ்பியின் பகுதியில் தன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் அமெரிக்காவின் உறுதிப்பாடு பற்றி.
1979ம் ஆண்டு ஷாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டதில் இருந்து, வாஷிங்டன் அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு ஈரான் கொடுக்கும் சவாலை அகற்ற உறுதி கொண்டுள்ளது. எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக, ஈராக் மீதான போர் இப்பிராந்தியத்தில் ஈரானின் நிலைப்பாட்டை வலுப்படுத்த உதவிவிட்டது. இதுவும் நீண்ட கால அமெரிக்க நண்பர்களான ஜைன் எல் அபிடைன் பென் அலி துனிசியாவிலும், எகிப்தில் ஹொஸ்னி முபாரக்கும் வீழ்த்தப்பட தொழிலாள வர்க்கம் நடத்திய வெகுஜன இயக்கமும் வளைகுடாப் பகுதியில் அமெரிக்க நட்பு நாடுகளின் உறுதிப்பாட்டை குலைக்கும் அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளன. இது தெஹ்ரான் மீது இன்னும் பொறுப்பற்ற முறையில் தன் செயல்களை அமெரிக்கா தொடர வழிவகுக்கும்.
இது போலித் தாராளவாதிகள், இஸ்லாமியவாதிகள், முன்னாள் ஆட்சிகளின் விசுவாசிகள் ஆகிய கலவைக் கும்பலுடன் இணைந்து லிபியா மீது நேட்டோ தலைமையிலான போருக்கு இணைந்து செயல்பட்டது. இப்பொழுது சிரியாவில் அசாத் ஆட்சியைக் கவிழ்க்கவும் முயல்கிறது. ஒவ்வொன்றிலும் அமெரிக்கா சவுதி அரேபியா, வளைகுடா நாடுகள், எகிப்து மற்றும் துருக்கியிலுள்ள அரசியல் சக்திகளின் ஆதரவை நம்பியுள்ளது.
மத்திய கிழக்கின் முழு வரைபடத்தையும் மறுபடி வரையும் முயற்சியில் வாஷிங்டன் முற்பட்டுள்ளது. பிராந்தியம் முழுவதும் ஏற்படக்கூடிய மோதலைக் கொண்டு வர இருப்பதாக இது அச்சுறுத்துவதுடன், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய சக்திகளை இந்த முக்கிய மூலோபாய பூகோள அரசியல் நலன்கள் உடைய பகுதிகளில் இருந்து அகற்றவும் முற்படுகிறது.
No comments:
Post a Comment