Friday, August 10, 2012

அடித்தார் ஹக்கீம் அந்தர் பல்ட்டி! பௌத்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருகின்றார்.

அண்மையில் கிழக்கு மாகாண சபைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கையிலே பயங்கரவாதத்தை ஒழித்தால்போல் ஜனாதிபதி நாட்டில் நிலவும் காவியுடை பயங்கரவாதத்தையும் ஒழிக்கவேண்டும் எனக்கோரிக்கை விடுத்திருந்தார். மேற்படி அவரின் கூற்று ஒரு சில ஆயிரம் இனவாத வாக்குகளுக்கு வழிசமைத்துள்ளதாக கணிக்கப்பட்டிருந்த அதேதருணத்தில் அமைச்சர் தனது கதிரையை தக்கவைத்துக்கொள்வதற்காக அந்தர் பல்ட்டி அடித்து தனது கருத்துக்கு மகா சங்கத்தினர் மற்றும் பௌத்தர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் வருமாறு.

கல்முனை சாய்ந்தமருதுவில் அண்மையில் நான் கூறிய கருத்து பௌத்தத் தலைவர்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பௌத்த குருமார் இடையே மிகவும் கடுமையான விசனத்தை தோற்றுவித்துள்ளது.இழுத்தடிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல் நான் இலங்கையில் உள்ள சகல பௌத்த மக்களிடமும் தயக்கம் ஏதும் இன்றி மன்னிப்பு கேட்கின்றேன். நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி இலங்கை மகாசங்கத்திடம் விசேடமாக கேட்டுக்கொள்கின்றேன்.

முஸ்லிம்களின் மனத்தாங்கல்கள் பற்றி நான் குறிப்பிட்டது குறித்த ஒரு இடத்தில் காணப்பட்ட உள்ளூர் விவகாரத்தோடு மட்டுப்படுத்திய பிரச்சினை பற்றியதாகும். ஆனால் துரதிஷ்டவசமாக குறித்த பின்னணியிலிருந்து விலகிய எனது சொற்பிரயோகம் எமது மக்களின் பிரதான சமயமான பௌத்தத்தின் பாதுகாவலர்களாக மகாசங்கத்தினர் பற்றி தரக்குறைவான கருத்துரைத்தது போன்று அமைந்துவிட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் நான் எப்போதும் முஸ்லிம்கள் இலங்கை தேசத்தின் ஒன்றிணைந்த பகுதியினர் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் சிங்கள அரசர்கள் காலத்திலிருந்து சிங்கள மக்களின் அரவணைப்பையும் தாராள மனப்பான்மையையும் அநுபவித்துள்ளோம்.

போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கிய செனரத் அரசனின் காலத்திலிருந்து சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடித்துவரும் பன்மைவாத கொள்கையை பற்றி சில மாதங்களின் முன் சர்வதேச தாராண்மை கவுன்ஸிலில் பேசியபோது நான் எடுத்துரைத்தேன்.

பௌத்தர்களுடனும் ஏனைய சமயத்தவர்களுடனும் பூரண ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் முஸ்லிம்களின் விருப்பம் பற்றி நான் நன்கு அறிவேன். இதுவே ஸ்ரீலங்கா தேசத்தில் முஸ்லிம்கள் முழுமையாக இணைந்துகொள்ளவுள்ள ஒரே பாதையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com