Friday, August 31, 2012

அந்தப் பள்ளிக்குச் செல்பவர்கள்: எஸ்.நஸீறுதீன்.

அல்லாஹ்வுக்காக, பாராளுமன்ற, மாகாண, பிரதேச சபைத் தேர்தல்களின்போது மட்டும் நபிகள் நாயகத்தையும், கலிபாக்களின் கிலாபத்து ஆட்சிகளையும் பேசுவதற்கே வக்கற்ற நிலைமையிலுள்ள நீங்கள், உங்களிடம் இல்லாதன கூறல் இழுக்கு என்பதற்கொப்ப உங்களையே அசிங்கம் செய்கிறீர்கள்.

அவர்கள் யாரென்று பார்க்க முன்னர், அந்தப் பள்ளிகளைப் பற்றி முதலில் பார்க்கவேண்டியுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் தனி அல்லது பலபேர் சேர்ந்த கூட்டு அடிப்படையில் வாங்கப்பட்டு, அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணிகளுக்கானது, இன்னும் சில முன்னாள் அரசுகள்-முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரஜைகள், மத உரிமை உள்ளவர்கள் எனும் நோக்கில் வழங்கப்பட்டவை.

இங்கு இடத்தைச் சுட்டி யாருக்கும் பிரச்சினையில்லை அங்கு வரும் ஆட்கள்தான பிரச்சினை என்றால், அவர்கள் அங்கு அப்படி என்னதான் பண்ணுகிறார்கள்? நிச்சயமாகப் பயங்கரவாதி வருகிறானென்றால், அல்லாஹ்வின் வீட்டை நெருங்கவே முடியாதவன். அவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது. முதலாளித்துவம் , பயங்கரவாதி குர்- ஆனே என நினைத்து முன்னர் ஆபிரிக்காவில் பைபிளைக் கொடுத்து மாற்றியும், இப்போது ஆப்கானில் எரித்தும் இல்லாமலாக்கி விடலாம் என நினைப்பது போன்ற அசட்டுத்தனமே இது.

இதனால், சும்மா கிடந்த சங்கின் முத்தை எல்லோரும் தேடும்படியான தன்மையையே உருவாக்கி விடுகிறார்கள். அதனால்தான், இருளிலிருந்து ஒளிக்கு என தன விருப்பத் தேர்வைப் புத்தகமாக்கிய பெண்ணைச் சிறை செய்ததுவும்.

முஸ்லிம்கள், வாழ்வின் அனைத்துச் செயற்பாடுகளையும் -புற ,அகச் சுத்தங்களையும் கண்டடையக் குர்-ஆனே தங்களுக்கு வழி காட்டவல்லது என நம்புகிறவர்கள். இன்னும் முதலாளிகளின் நவீன சித்தாந்தங்களின்படி சொன்னால், முஸ்லிம்கள் என்பவர்கள், ' நன்கு இறுக்கமாகக் கட்டப்பட்டு ஆழ நதிக்குள் போடப்பட்ட கற்களைப் போன்றவர்கள்.. பாவம்,அந்த அப்பாவிகளைக் குற்றம் சாட்டாதீர்கள். குர்ஆனின் வழியுறுத்துதலை நம்பிய அடிமைகள் அவர்கள்.வாழ்வியல் மட்டுமன்றி, தங்களையும் எங்கிருந்து வந்தீர்,எங்கு போக உள்ளீர் எனச் சொன்னதையும், மறைவானவற்றையும் நம்புகிறவர்கள் அவர்கள். இங்கு பிறப்பதற்கு முன்னரேயே, அல்லாஹ்வின் முன்னிலையில் சஜதாவில் (தலை தாழ்த்தி)விழுந்தபடி 'நீதான் எங்கள் அல்லாஹ்' என மொழிந்துவிட்டு வந்தவர்கள்.

மௌத்தின் பின்னரும், அவன் முன் எழுப்பப்பட்டு கேள்விக்கு உட்படுத்த உள்ளதை நம்புகிறவர்கள் . கேள்வி? இந்தப் பூமியில் பின்பற்றி நடந்தாயா? என்பதுதான். . நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடந்தால் வெற்றியடைந்தவனாவாய் என முன்னரேயே அவன் வசனங்களினூடு அருளியிருந்தான். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்த பின்னர் ஒரு சஹாபி அவர்களின் மனைவி ஆயிஷா நாயகி அவர்களிடம்,'அவர்களின் வாழ்வு எப்படி இருந்தது’ எனக்கேட்க, ஆயிஷா நாயகியவர்கள்-' குர்-ஆனாய இருந்தது’ என்பார்கள். அந்த இறைத் தூதர்தான், முஸ்லிம்களாகிய நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகள், அவனின் வழியை விட்டும் தவறிவிடாதிருக்க ஐந்து வேளையும் தொழுது வாருங்கள். அதுவும் தனியே தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு நன்மைபெற பள்ளியில் தொழுங்கள். எனவும், தனது ஊரின் பள்ளியைச் சாராதவன் மட்டுமல்ல, இனம், மொழி, பிரதேசம் பேசுகிறவனும் எம்மைச் சார்ந்தவனல்ல என்பதைச் சொல்லி செயலில் நிறுவிக்காட்டியவர்கள் .

இதை இன்னும் வலியுறுத்த 'முஸ்லிம்கள் ஒருடம்பு போன்றவர்கள்: அவர்களின் எந்தப் பகுதியில் வலி ஏற்படினும், மொத்த உடலுமே துடிக்கும்' என்றார்கள். பள்ளிகளில் அவர்கள் தலை தாழ்த்தி வணங்கும், மகிமைக்குரிய அல்லாஹ்வைப் பற்றி அதிகம் சொல்லிக் கொடுத்தார்கள். அவன் தனித்தவன், இணை, துணை அற்றவன். அனைத்தையும் ஆள்பவன். கேள்வி கேட்பவன்: யாராலும் கேட்கப்பட முடியாதவன். அன்பாளன். அருளாளன். மூஸா நபியுடன் வானவரின்றி பேசியவன். எந்தவித ஒப்பீடும் அற்றவன், உருவமற்றவன், அவனைத் தன் புறக் கண்களினூடு பார்க்க மூஸா நபி விரும்பிய போது, தன்புறமிருந்து துகளளவான ஒளியை இறக்கியருளவே, சிதறிய மலையும், பேரொளியும் கண்டு, நினைவற்று மூர்ச்சையர்றுப் போனதன் மூலம் தன் உள்ளமையின் வல்லமையை காட்டியவன்.

ஈசா நபியின் தாய், மரியமுக்கு, மூஸா நபியின் காலத்தின் போது இஸ்ரேலர்களுக்கு வானிலிருந்து உணவு அனுப்பியவன், உயிர் துவங்கி அனைத்தும் கொடுப்பவனும், பறிப்பவனும் அவனே என நம்பிக்கை கொண்டவர்கள். நடந்தது, நடக்க உள்ளது, நடந்து கொண்டிருப்பது அத்தனையும் அவன் நாட்டத்தின் படியே என முழுக்க விசுவாசித்து அவன் புறமாகத் தன்னை ஒப்படைத்து அவன் ஆகுமாக்கியதைக் கொண்டு திருப்தி கொண்டவர்கள். அதன்வழி தவறிவிடும்போது பிழை பொறுக்கவும், அவனுக்கு நன்றி தெரிவிக்க்கவுமாகக் கூடும் இடம் பள்ளி வாசல். அங்கு பயங்கரவாதச் சிந்தனை இருக்கச் சாத்தியமேயில்லை. ஒரு உண்மையான முஸ்லிமுக்கு இந்தப் பூமி சோதனைக்குரிய இடம் . இடைத் தங்கும் தலம், அவ்வளவுதான்.

அல்லாஹ்வின் தேர்வுக்கு முன்னால், தன் நாட்டம், செயல் எதையுமே முன்வைக்க முடியாத அடிமை .. இதை அவனே ஏற்றுக்கொள்கிறேன் என்றபோது, தான் என்னமோ உயுரத்திலுள்ள மோட்டு வளையில் உட்கார்ந்திருப்பதாக நினைத்துக் கொண்டு 'ஏலே, என்னாலே நீ இப்பிடியிருக்க' என்றால், அவனென்ன செய்ய முடியும்? ஏதும் வைத்துக் கொண்டா அவன் வஞ்சனை செய்கிறான்.? அனைத்தும் அறியுமாம் அல்லாஹ்வின் வார்த்தைகளான திருமறை. அது, ஒருபோதும் ‘இது முஸ்லிம்களுக்கு மட்டுமானது’ என சொல்லவில்லை. 'இந்த ஒளி .உலக மாந்தர்களுக்கு ஒரு நேரிய வழிகாட்டி’ என்றே சொல்கிறது. அதை எந்த . வேதம்தான் சொல்லவில்லை. அதையேதான் அதுவும் சொல்கிறது. அதுவும் இப்படிமுன்னர் வந்த அனைத்து வேதங்களையும் உண்மைப் படுத்துவாக இதுவும், நீங்களும் இருந்த போதிலும்,,,,' அதாவது, இந்து, பௌத்தம், கிறிஸ்தவ வேதங்களுக்குப் பிந்தியதாகவே முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை இருந்தது. இஸ்லாம் மிக இள வயது கொண்ட மதம். இலங்கையில் சிங்களவரும், தமிழரும் இருந்த காலத்திலிருந்து முஸ்லிம்களும் இருந்ததனரா என்பது தெரியாது. ஆனால்,நிச்சயமாக இலங்கை முஸ்லிம்களின் இத்தனை பரம்பலின் மூதாதைகள் -நமது ஆறாம், ஏலாம் அறிவெல்லாம் வேண்டாமல் ஐந்தைக் கொண்டு பார்த்தாலே, பெரும் பகுதியினர் மொழியால், சிங்களம்-தமிழ்: ,. மதத்தால் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் . அது வாள் கொண்டுதான் சாதிக்கப்பட்டது என்பதுஅபத்தமானது.

இந்தியாவைத் தவிர்த்து, இந்தோனேசியா, மலேசியா, மாலைதீவு, இலங்கை,,,,எங்குமே அவர்களின் போர் நிகழ்ந்ததில்லை. இங்கெல்லாம் இஸ்லாம் பரவியது நபிகள் நாயகத்தை அடியொற்றிய மிகப்பெரும் கண்ணியத்துக்குரிய ஆலிம்களால்தான். இலங்கையின் இன்றைய பெரும்பாலான பழைய பள்ளிவாயல்களினது, பெயரீடுகளை நீங்கள் தேடிக்கண்டடைந்தாலே அதை ருசுப்படுத்திக்கொள்ள முடியும். அவர்களிடம் இன்றைக்கு இஸ்லாத்துக்கு உரிமையும், அதிகாரமும், செல்வ நிலையும் எங்களுக்குரியதுதான் எனக்காட்டுபவர்களைப் போல், (அப்படி ஒன்று எந்த வேதத்துக்குமே யாராலும் கோரப்பட முடியாது என்பதுவே சத்தியமான உண்மையாயிருக்க) உரிமை கொண்டாடும் நிலைமை இருக்கவில்லை. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்ததனால், அவனது அண்மையைப் பெற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். தமது இள வயது முதற்கொண்டு , தனது அத்தனை முயற்சி,உழைப்பு, , 'என் வழியில் போர் செய்பவர்களுக்கு நானே பாதைகளை இலகுவாக்கிக் கொடுக்கிறேன்' எனும் அவனின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாழ் நாள் பூராக அவன் ஏவிய அமல்களிலேயே இருந்தவர்கள் அவர்கள். ஆம்,, பாதைகள் வேறு வேறான போதும், ஒருத்தர் மற்றையவரையும் மேலாகவே மதித்திருந்த காலம்அது. அவர்கள் இதற்காக எந்தக் கூலியையும் பெற்றதில்லை. ஏனெனில்,தங்களை அவனளவில் முடுகுதல் பெற்றோராக, இந்த உலகின் அனைத்து வளங்களையும் விட மேலான செல்வம் வாய்க்கப் பெற்றோராக அவர்கள் இருந்தனர்.

அல்லாஹ்வே 'தங்களை தனவந்தர்களாக அவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்குக் கொடுங்கள்' என உத்தரவிடுகிறான். மக்களோ , அதைத் தங்களின் கடமையாக நினைத்து, நன்மையை நாடி அவர்களைப் போசித்தார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை ஞாபகப்படுத்துபவர்களாகவே அவர்களைக் காணும் பொழுதெல்லாம் இருந்தது. மக்களும் தங்களின் அனைத்துக் காரியங்களையும் மதத்தைவிட்டு அப்பால் ஆக்காதபடி இருக்க அது வழி செய்தது.

பள்ளிக்குப் பள்ளி கந்தூரி, வீட்டுக்கு வீடு ஆபத்து, நேர்ச்சை, இறந்த உறவினர்களுக்கான வேண்டுதல்கள், தான தர்மங்கள், ரொட்டியும் சாப்பாட்டு வாசமுமாக ஊரே மத வாசம் பூசி நிற்கும். பகலை இருட்டுச் சுருட்டி எடுக்கும் நேரம் ,முன்னால ஒருத்தர் பெர்ரோமேகஸ் லாம்ம்பை, மாப்பிள்ளைக்கு அருகாகப் பிடித்துவர, தலைப்பாகை போட்டதுகள் மாப்பிள்ளையை பைத்துச் சொல்லிக் கூட்டிப் போவார்கள்.. ஒருத்தரையும். சைக்கிள்ளை பார்க்கேலா. நடை பவனி. இன்னொரு நாளைக்கு இரவைக் கிழிக்கும்,மரணத்தை ஞாபகமூட்டும் அமைதியைச் சூறையாடும் மரண ஊர்வலம். அப்போதும் குரலில் வேதனை மறைத்து, ஓதிக்கொண்டு போவார்கள். நோன்பு மாசம்தான் எத்தனை உசத்தியானது இரு பெருநாட்கள், மௌலூது, மீலாது விழா வென்று எப்போதும் மார்க்க சிந்தனையில் மக்கள் இருப்பது இலகுவாயிருந்தது..., ஒரு குவளை நீர் அருந்துவதானால் கூட, தாகத்தைத் தீர்க்கும் தண்மையை நீருக்கு வழங்கி உயிருள்ள அனைத்தின் தாகம் தீர்க்கும் வல்லவனின் அருளை ஞாபகம்கொண்டு உட்கார்ந்து கொண்டு அருந்துவதுதான் அவர்களின் பண்பாயிருந்தது.

முஸ்லிம்களுக்கான வாழ்வியலை, மொழி, பிரதேசம், இனம், நிறம் கடந்த வாழ்வாகக் காட்டித் தந்தவர்கள் அவர்களே. மக்களின் திருமணம், காணிப்பிரச்சினைகள், முரண்பாடுகள் அனைத்துமே பள்ளிவாயல் நிருவாகங்களினூடாக தீர்த்து வைக்கப்பட்டிருந்தன. உலமா சபை என்பது முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழிகோலியது. அன்றையமக்களிடமிருந்த நம்பிக்கை இன்றைய மக்களிடம் இல்லை. ஆனால் எல்லோரும் முன்னர் சந்திக்கு சந்தி நின்று பேசிய அரசியலுடன் ஒன்றாக இதையும் ஆக்கப்பார்க்கிறார்கள்.

அந்தப் பள்ளிக்கு வருபவர்களின் மூதாதையரின் காலம், ஒரு முஸ்லிம் தூங்கி எழுந்தது முதல் படுக்கைக்குச் செல்லும்வரையான மார்க்கக் கடமைகள் இப்படித்தான் இருக்க வேண்டும், அனைத்திலும் இப்படியே இருங்கள் என்பதைச் செய்தும், போதித்தும் வந்தவர்கள் முஸ்லிம்களின் தலைவர்களாக இருந்த காலம் . அன்று பாராளுமன்றத்தில் இருந்த முஸ்லிம் அரசியல் சார்பான எம்பிக்கள்கூட இந்தப்பெரியார்களைத் தங்களின் மரணமற்ற உயரிய வாழ்வுக்கு முன் உதாரணமாகப் பின்பற்றிய காலம். அதன் பின்னர் வந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாலும், வருடா வருடம் அரபிக் கலாசாலைகள் வெளித்தள்ளிய மூவாயிரம் மௌலவிகளாலும் (ஆலிம்கள் அல்ல) முஸ்லிமாயிருப்பது என்பது இந்த அரசியல் சாக்கடைகளைப் பின் பற்றுவது என்றாகிப் போயிருக்கிறது.

மௌலவிகள் பச்சோந்தித்தனமான இந்த அரசியல்வாதிகளுக்கு ஏற்றதுபோல மக்களை வழிகேட்டுக்கு உள்ளாக்க முனைந்துள்ளார்கள். ஒரு உதாரணம் : ஐ. தே.க. சார்ந்த ஒரு மௌலவி ஜும்மாவிலேயே இப்படிப் பேசுவார் : முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்: ஒரு காலம் வரும் அப்போது, உள்ளத்திலே நயவஞ்சகமும், பேராசையும்வைத்துக் கொண்டு, தொண்டைக்கு அருகான வாயினால் மட்டும் இஸ்லாத்தைப் பேசுகிறவர்கள் உங்களின் தலைவர்களாக வருவார்கள் என்று.
அடுத்த ஜும்மாவில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த மௌலவி பேசுவார் : முஹம்மது நபி (ஸல்)அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்: ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று.

இரெண்டையும் கேட்கிறவனின் பாடுதான் என்ன ஆவது? அல்லாஹ்வே தனது திருமறையில், சொற்ப ஆதாயத்துக்காக ' இதன் வசனங்களை மாற்றுபவனுக்குக் கேடுதான்' எனச் சொன்ன பின்னரும், ஹராமாகப் பொருள் தேடிக் குவிக்கும் இந்தப் பொறுக்கிகளின் அரசியலுக்கு வாகாக மதம் பிடித்தலைபவர்களை என்ன சொல்வது?

தமிழ் மொழி பேசுவோருக்கு விடுதலை என்று சொன்னாலும், முஸ்லிம்களைக் கொன்றொழித்ததிலும், யாழை விட்டுத் துரத்தியதிலும் புலிகளுடன் உடன்பட்ட கூட்டணியின் எந்த மேடையிலும்,யாரும், 'தங்களின் கட்சிக் கொள்கையாக கீதோபதேசத்தையோ, அவர்களின் வேதப் புத்தகங்களையோ யாப்பாகக் கொண்டிருப்பதாகச் சொன்னதில்லை. இவர்களால் மட்டும்தான் குர்- ஆனும், ஹதீதுமே எங்கள் யாப்பு எனச் சொல்ல முடிந்திருக்கிறது.

அல்லாஹ்வுக்காக, பாராளுமன்ற, மாகாண, பிரதேச சபைத் தேர்தல்களின்போது மட்டும் நபிகள் நாயகத்தையும், கலிபாக்களின் கிலாபத்து ஆட்சிகளையும் பேசுவதற்கே வக்கற்ற நிலைமையிலுள்ள நீங்கள், உங்களிடம் இல்லாதன கூறல் இழுக்கு என்பதற்கொப்ப உங்களையே அசிங்கம் செய்கிறீர்கள்.

புலிகளின் அராஜகத்தின்போது கிட்டத்தட்ட நூறு பள்ளிவாயல்கள் சேதமாக்கப்பட்டதை துளியளவுகூட கண்டிக்க வக்கற்ற நீங்கள், இன்று ஜனநாயகம் இருக்கிற தைரியத்தில், ஆட்டுகிற சின்னிவிரலின் வீரத்தில் மொத்த முஸ்லிம்களே திகைத்துப் போயுள்ளார்கள். அனைத்துப் பள்ளிவாயல்களுக்கும் பொறுப்பான உலமா சபையினரினால், தீர்க்கவேண்டிய கடுகளவு பிரச்சினையை- அனுராதபுர தர்ஹா தகர்ப்பின்போது, மூச்சுக்கூட விடாது முக்காட்டுள் மூடிக் கிடந்துவிட்டு, தேர்தலுக்காக என்னமாய்த்தான் வீராப்புப் பொங்கி வழிகிறது உங்களிடம்.

முஸ்லிம்களின் வழி காட்டுதலுக்குரிய தலைவர்களின் - உலமாக்களின் தொழிலை மேற்கொள்ள முனையாதீர்கள். எல்லா அரசியல் கட்சிகளையும்போல பத்தோடு ,இன்னொன்றாக இருந்துவிட்டுப் போங்கள். நீங்களாகவே ' முஸ்லிம்களின் தலைவர்கள்' எனும் குல்லாவைப் போர்த்துக்கொண்டு அவர்களின் நாளாந்த வாழ்க்கையையே அச்சத்துக்குரியதாக்கி விடாதீர்கள்.

ஏனைய சமூகத்தவரிடம், ஆற்றோரப் பத்திரிக்கை போலவே, ஆற்றோரப் பாராளுமன்றத்துக்கு வருபவர்களிடம் உங்கள் பிரச்சனைகளை வைத்துக் கொள்ளுங்கள் என எங்கள் உலமாக்கள் சொல்லி விடட்டும். ஏனெனில்,முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் 'அயல் விட்டான் மனம் கோணும்படி நடப்பவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது என்றார்கள்.. நோன்பின் பிந்திய காலத்தின்போது, ஜிப்ரீல்(அலை) அவர்கள், பக்கத்து வீட்டு யூதனுக்கு வாரி, வாரி வழங்கச் செய்ததன் மூலம் உறவுக்காரர் ஆக்கிவிடுவார் போலிருந்தது' என்பது அவர்களின் வாழ்வியல் முறை .

தனது சொந்த மகனை நாயகத்தின் தோழர், இஸ்லாத்தில் இணைந்து கொள்ள நிர்ப்பந்திக்கலாமா? எனக்கேட்க, வஹி மூலம் 'யார் மீதும் நிர்ப்பந்தமில்லை' என்கிறான் அல்லாஹ்.

பள்ளிவாயலில், அல்லாஹ்வின் வழியை விட்டும், தன் நப்சு மாற்றம் செய்வதை நிறுத்தவே, அதனுடன் போராடவே அவன் தன்னுள் உருவிய வாளையும் கவசத்தையும் பாதுகாப்பதே பெரும்பாடாயிருக்க உங்களின் அவாவுக்குப் பின்னால் அவனை இழுத்துச் செல்லாதீர்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரிய வழியைத் தந்தருள்வானாக. ஆமீன்.

பிற்குறிப்பு: இது முன்னரே எழுதப்பட்டதாயினும், கிழக்கு மாகாண சபைக்குப் போட்டியிடும் அபேட்சகர்களை உலமாக்களை வைத்து சத்தியம் பெற்ற செய்தியை முன்னிட்டு இது.

உங்கள் உறுப்பினர்கள் மட்டுமல்ல, எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்களேதான் வழிகாட்டிகள் என்பதை ஒப்புக் கொண்டு, மக்களையும் அவர்கள் காட்டும் வழியில் செல்ல விட்டு விடுங்கள். மேற்படி கட்டுரைக்குச் சாதகமாகவே -நாங்கள் இப்படித்தான் இருந்தோம்' என்பதை ஆதாரபூர்வமாக்கிய உங்களின் நிகழ்வுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com