Monday, August 13, 2012

ரிஷாட் பதியுதீனுக்கு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 27 ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவானுக்கு தொலைபேசி ஊடாக அழுத்தம் விடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பானதுறை நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாம் உள்ளிட்ட நான்கு சட்டத்தரணிகள் இந்த விடயம் தொடர்பில் நீதவானுக்கு விடயங்களை தெரியப்படுத்தியுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜய கமகே குறிப்பிட்டார்.

மன்னார் நீதவானின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமது சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னாள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள 13 நபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த ஏனையவர்களை உடனடியாக கைதுசெய்து, எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இதன்போது சம்பவம் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரித்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மன்னர் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com