யாசர் அராபத் உடலை வெளியே எடுத்து பரிசோதிக்க சுவிஸ் ஆய்வகம் முடிவு
ஜெனிவா:பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், "பொலோனியம்' என்ற, விஷம் வைத்து கொள்ளப்பட்டாரா, என்பது குறித்து, சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம், பரிசோதனை செய்ய உள்ளது. பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11ம்தேதி இவர், பாரிஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். இவருடைய இறப்பில் பாலஸ்தீன தலைவர்கள் சந்தேகப்பட்டனர். கோமா நிலையில் அராபத் இறந்ததால், பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, அராபத் இறக்கும் போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் கடந்த மாதம் வெளியிட்டது. அராபத் இறக்கும் போது அவரது உடலில் கொடிய விஷமான "பொலொனியம்' இருந்துள்ளது. ரஷ்ய உளவாளியான அலெக்சாண்டர் லிட்வினென்கோ என்பவர், லண்டன் ஓட்டலில் தேனீர் கோப்பையில் தடவப்பட்ட பொலொனியம் விஷத்தால் கொல்லப்பட்டார். இதே முறையில் தான் அராபத் உடலிலும் பொலோனியம் இருந்துள்ளது, என ஆய்வக அறிக்கையில் கூறப்பட்டது.
"அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை உறுதியாக நிருபிக்க வேண்டுமென்றால், அவர் உடலை மீண்டும் தோண்டியெடுத்து தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், என கோரும் உரிமை அராபத்தின் மனைவி சுகாவுக்கு மட்டுமே உள்ளது' என, சுவிட்சர்லாந்து நாட்டின் கதிர்வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் புக்கட் தெரிவித்திருந்தார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள, ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர்அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய, பாலஸ்தீன நிர்வாகமும், அராபத்தின் மனைவி சுகாவும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
"பிரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் அராபத் இறந்ததால், இது தொடர்பாக அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' என, சட்டரீதியாக கோரும் மனுவை சுகா அராபத், பிரான்ஸ் நாட்டு கோர்ட்டில் கடந்த மாதம் சமர்ப்பித்தார்.இதையடுத்து, சுவிட்சர்லாந்து நாட்டின் Lausanne பல்கலைக்கழக கதிர்வீச்சுத்துறை நிபுணர்கள், விரைவில் ரமலாவுக்கு சென்று அராபத்தின் உடலை வெளியே எடுத்து பரிசோதிக்க உள்ளனர்.
0 comments :
Post a Comment