நடைபெறவிருக்கின்ற மாகாண சபைத்தேர்தல்களையொட்டி அமைச்சர்களின் ஆதரவாளர்கள் மோதிக்கொள்கின்றனர். திருகோணமலை கந்தளாயில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி காரியாலயம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கில் அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம் மற்றும் அதாவுல்லா ஆதரவாளர்களிடையே தொடர் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றது.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பின் வேட்பாளரின் தேர்தல் காரியாலயமொன்று நேற்றிரவு எதிர்க்கட்சி காரர்களினால் சேதமாக்கப்பட்டதோடு, மற்றொரு காரியாலயம் தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் தேர்தல் காரியாலங்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இக்காரியாலயத்தினைத் தாக்கி தளபாடங்களை சேதமாக்கியதோடு, அங்கிருந்த இரண்டு வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் இராணுவர்தினர் வருகை தந்ததோடு, தாக்குதலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
இதேநேரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரசாந்தனது காரியாலயத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கி விட்டார்களாம் என அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்மீது தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment