குரானின் சில பக்கங்களை எரித்ததற்காக மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சிறையில் அடைப்பு
பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்துவ சிறுமியொருவர் குரானின் சில பக்கங்களை எரித்ததாக, கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான் இஸ்லாமா பாத்தின் புறநகரைச் சேர்ந்த ரம்ஷா,11. இரண்டு வாரத்துக்கு முன், தன் வீட்டில் காய்கறி வாங்கும் பையில் இருந்த பழைய காகிதங்களை தீ வைத்து கொளுத்தியிருக்கிறாள். இதில், குரானின் சில பக்கங்களும் இருந்துள்ளன. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இந்த சிறுமி, குரானை எரித்ததன் மூலம், இஸ்லாமை அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி, அந்த பெண்ணின் வீட்டை பலர் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தியுள்ளதுடன், சிறுமியின் பெற்றோரும் தாக்கப்பட்டுள்ளனர்.
மத கலவரம் வெடிக்கும் அபாயம் உருவானதால், நிர்ப்பந்தத்தின் காரணமாக, சிறுமியை பொலீசார் கைது செய்து, இரண்டு வாரம் சிறையில் அடைத்துள்ளனர்.
பாதுகாப்பு கருதி, சிறுமியின் பெற்றோரும் பொலீஸ் காவலில் உள்ளனர். இவர்கள் வீட்டை சிலர், தீ வைத்து கொளுத்தி விட்டனர். இதனால், பக்கத்து வீடுகளில் இருந்த கிறிஸ்துவ சமுதாய மக்கள், உயிருக்கு பயந்து ஊரை விட்டு சென்று விட்டனர்.
இஸ்லாமிய சட்டப்படி, குரானை எரித்தால் மரண தண்டனை அளிக்கப்படும். இந்த சட்டத்தின்கீழ், சிறுமியை தண்டிக்கும்படி, பாகிஸ்தானில் உள்ள பழமைவாதிகள் வற்புறுத்தி வருகின்றனர். மனித உரிமை அமைப்பினர், இந்த சட்டத்தில் திருத்தம் செய்யும்படி பாகிஸ்தான் அரசை, வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்ததற்காக, சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சராக இருந்த ஷாபாஸ் பட்டியும், பஞ்சாப் கவர்னர் சல்மான் தஷீரும், கடந்த ஆண்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.'குரானை எரித்ததாகக் கூறப்படும் சிறுமி, மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரது பெயரையே சரியாக உச்சரிக்க தெரியாத அந்த சிறுமி, குரான் பக்கங்கள் என, தெரியாமல் தான் எரித்திருக்கிறாள்' என்று, பாகிஸ்தான் அமைச்சர் பால் பட்டி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment