Thursday, August 9, 2012

எமது சமூகத்தை கட்டியெழுப்ப இத்தருணத்தில் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

சிந்திக்க தவறுவோமானால் எமது இனத்தின் வீழ்ச்சியை யாராலும் தடுக்கமுடியாத நிலை உருவாகும். – கருணாவின் சகோதரி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் விழிப்படையவேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது எனவும், கடந்த காலத்தில் பல்வேறு அழிவுகளை கண்ட எமது சமூகத்தை கட்டியெழுப்ப இத்தருணத்தில் அனைவரும் கைகோர்க்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வேட்பாளருமான ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.

தன்னமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டம் இன்று தன்னிறைவு பெற்று வருகின்றது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வரலாறு காணாத அபிவிருத்தி அடைந்துவருகின்றது.

இன்று தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ள எதிர்க்கட்சிகளுக்கு கூட மேடைகளில் இந்த அரசாங்கத்தை குறைகூறுவதற்கு எதுவும் அற்ற நிலையிலேயே இருந்துவருகின்றனர்.

எமது மக்கள் நன்கு சிந்திக்கவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம். நாங்கள் கடந்த காலத்தில் அடைந்த துன்பங்களை நினைவில் கொள்ளவேண்டும். நாங்கள் எமது பிள்ளைகளை தொடர்ந்து அந்த நிலைக்குள் வைத்திருக்க முடியாது.

அவர்களுக்கு சிறந்த கல்வி, சிறந்த எதிர்காலம் தொடர்பில் பெற்றோராகிய நாங்கள் சிந்திக்கவேண்டிய தருணம் இது. இத்தருணத்தில் நாங்கள் சிந்திக்க தவறுவோமானால் எமது இனத்தின் வீழ்ச்சியை யாராலும் தடுக்கமுடியாத நிலை உருவாகும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைமை தாங்கும் பொறுப்பிற்கு பெண்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முறையான திட்டங்கள் இல்லை. இவற்றை செய்ய வேண்டியவர்கள் கடந்த காலத்தில் அவற்றினை செய்யவில்லை. சிலர் உரிமைகளை பேசிக்கொண்டு தங்களது குடும்பங்களை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாகவுள்ளனர்.

இது தொடர்பில் எமது மக்கள் சிந்திக்க வேண்டும். நாங்கள் எமது குடும்பத்தை,எமது சமூகத்தை வளப்படுத்த வேண்டுமாகவிருந்தால் அதனை வளமுள்ள இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும். இந்த அரசாங்கம் எமது மக்களுக்கு அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளது.

இந்த முறை அந்த சந்தர்ப்பத்தை எங்களுக்கு தந்து காட்டுக்கள். அதற்கான வேலைத்திட்டங்கள் எங்களிடம் உள்ளன. நான் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளராக கடந்த காலங்களில் கடமையாற்றியபோது பெண்கள் பலர் வந்து தங்களது கஸ்டங்கள் தெரிவிப்பர். என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்துகொடுத்துள்ளேன். அந்த உதவியை மேலும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்த அரசியலுக்குள் பிரவேசித்துள்ளேன்.

ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும் ஒரு குடும்பத்தின் சுமை. அவற்றினை கொண்டு நடத்த வேண்டிய வழி.அந்த வகையில் இந்த மாகாணசபைத்தேர்தலில் எமது சமூகம் ஒன்றிணைந்த ஆதரவை எனக்கு வழங்கவேண்டும்.

கடந்த காலங்களில் அழிவுகளை சந்தித்த சமூகம் என்ற அடிப்படையில் இந்த சமூகத்தை உயர்பாதைக்கு இட்டுச்செல்லவேண்டிய தார்மீக பொறுப்பு எனக்கு இருக்கின்றது என தெரிவித்தார்.

தன்னாமுனை பிரதேச மக்களினாள் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com