Wednesday, August 29, 2012

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கியதில் பொறுப்பதிகாரி உட்பட பல பொலிஸார் காயம்.

நாட்டில் தற்போதுள்ள கல்வி முறை சம்பந்தமான அதிருப்தியை வெளிப் படுத்துமுகமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, இன்று கொழும்பு கோட்டையில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸார் முயற்சித்த போது, அவர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதல் நடாத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பல பொலிஸார் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள், பிற்பகல் 01.00 மணியளவில், வன்முறை ரீதியில் செயற்பட்டனர். குறிப்பாக ஒல்கொட் மாவத்தை தடைப்படும் விதத்தில், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் பிவேசிப்பதற்கும், அவர்கள் முயற்சித்தனர். ஏனையவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு, பொலிஸார், அவர்களுக்கு உத்தரவிட்டனர். அல்லது அங்கிருந்து விலகிச்செல்லுமாறு கேட்டுக்கொண்ட போதிலும், அவர்கள் இந்த உத்தரவிற்கு செவிசாய்க்கவில்லை.

இதனால், பொலிஸார், நீர் பீய்ச்சி அடித்தார்கள். இதற்கும் அவர்கள் அடிபணியவில்லை. இதனை தொடர்ந்து, அவர்கள் பொலிஸார் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடாத்தினர். இதற்கு, பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில், மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும், மேலும் ஐவரும், காயமடைந்தனர். அவர்கள், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எவருக்கும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உரிமை உண்டு. இது, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒரு உரிமையாகும். அந்த உரிமையை பொலிஸாராகிய நாம் மதிக்கின்றோம். அத்துடன் நெடுஞ்சாலைகளை மறித்து, இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை செய்வதற்கு, எந்தவித அனுமதியும் இல்லை. உலகில் உள்ள எந்தவொரு சட்டத்திலும், ஏனையவரின் உரிமையை மீறுவதற்கு, அனுமதியில்லை. ஏனையவர்களின் உரிமைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, எவருக்கும் சந்தர்ப்பம் இல்லை. வீதிகளை மறித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை முதலில் உருவாகும். பல லட்சக்கணக்கான மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு, இவ்வாறான நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டியுள்ளோம்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com