அமெரிக்கா: சீக்கிய வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு ஏழு பேர் மரணம்
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், ஓக் கிரீக் பகுதியில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். வழிபாட்டுத் தலத்தில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காலைப் பிரார்த்தனைக்காக குருத்வாராவிற்கு வந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது அங்கு நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம். அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், குருத்வாராவின் சமையல் அறைக்குள் நுழைந்த ஓர் அமெரிக்கர், தனது கையில் இருந்து துப்பாக்கியால், சரமாரி யாகச் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிர் இழந்தனர்.
பின்னர் துப்பாக்கியுடன் குருத்வாராவில் இருந்து வெளி யேறிய அந்த அமெரிக்கர், மீண்டும் துப்பாக்கியால் சுட மேலும் இருவர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரைச் சுட்டுக் கொன்றனர்.
விஸ்கான்சின் மாநிலத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் உறைந்த ஒரு பெண்ணை அதிகாரி ஒருவர் தேற்றுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்
இதேநேரம் கொலையாளியை ஆலயத்தின் தலைவரே குத்திக்கொன்றதாகவும் அவர் ஒர் நாயகன் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக விறுவிறுப்பு இவ்வாறு கூறுகின்றது.
அமெரிக்க சீக்கிய கோவிலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது நடைபெற்ற விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன. சீக்கிய கோவில்ன் தலைவர், துப்பாக்கியுடன் வந்த கொலையாளியை தடுக்க கையில் கிடைத்த ஆயுதத்துடன் போராடி, மரணமடைந்துள்ளார் என்ற விபரம் வெளியாகி, அவர் ஹீரோவாக போற்றப்படுகிறார்.
“மில்வாக்கி சீக்கிய கோவிலின் தலைவர் சத்வாந்த் சிங் கலீகா, நண்பர்களுக்காக உயிரைக் கொடுத்தும் உதவி செய்யக்கூடியவர் என்று, சும்மா பேச்சுவாக்கில் நாம் கூறுவதுண்டு. இப்போது அவர் சக சீக்கியர்களை காப்பதற்காக நிஜமாகவே தமது உயிரைக் கொடுத்து, போராடினார் என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது” என்று கண்ணீர் மல்க கூறினார் அவரது நண்பர் ஜஸ்விந்தர்.
ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த கொலையாளி, சுடத் துவங்கியபோது, 65 வயதான சத்வாந்த் சிங், கொலையாளியை தடுக்க பாய்ந்தார். அந்த நிமிடத்தில் அவரது கையில் கிடைத்த ஆயுதம், வெண்ணை தடவும் கத்தி (butter knife) மட்டுமே.
ஒரு கட்டத்தில் கொலையாளியை மடக்கிப் பிடித்த சத்வாந்த் சிங், தம்மிடம் இருந்த சிறிய கத்தியால் கொலையாளியை குத்துவதற்கு முயற்சித்தார். கூரற்ற அந்த கத்தியால் குத்தி செயலிழக்க வைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், கொலையாளியின் கை ஓங்கியது. கொலையாளி தமது கையில் இருந்த துப்பாக்கியால் சத்வாந்த் சிங்கை குளோஸ் ரேஞ்சில் சுட்டார்.
இது துப்பாக்கிக் குண்டுகள் சத்வாந்த் சிங்கின் வயிற்றில் ஒன்றும், காலின் மேல் பகுதியில் ஒன்றுமாக பாய்ந்தன. சரிந்து வீழ்ந்த அவர் சிறிது நேரத்தில் மரணமடைந்தார்.
கொலையாளியுடன் சத்வாந்த் சிங் போராடி அவரது கவனத்தை திசை திருப்பிய சில நிமிடங்கள், கோவிலுக்கு உள்ளேயிருந்த பல பெண்கள் ஓடிச்சென்று மறைவிடங்களில் மறைந்து கொள்ள கால அவகாசத்தை கொடுத்தது. அந்த வகையில் தமது உயிரைக் கொடுத்து, அங்கிருந்த பலர் தப்புவதற்கு உதவியிருக்கிறார் அவர்.
துப்பாக்கி சூடு நடைபெற்ற பின் கோவிலுக்கு உள்ளேயே வைத்து ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்ட FBI அதிகாரி ஒருவர் கோவிலுக்கு வெளியே வந்து, “கோவிலின் தலைவர் சத்வாந்த் சிங்கின் உறவினர்கள் யாராவது இருக்கிறீர்களா” என்று கேட்டார். வெளியே காத்திருந்தவர்களில் ஒருவராக நின்றிருந்த அமர்தீப் சிங் முன்னே வந்து, “நான் அவருடைய மகன்.. என்ன விஷயம்?” என்று கேட்டார்.
விறைப்பாக நின்றபடி அமர்தீப் சிங்கின் கையை பற்றி குலுக்கிய FBI அதிகாரி, “உங்கள் அப்பா ஒரு நிஜ ஹீரோ” (Your dad’s a real hero) என்றார்.
மேலும் குறிப்பிட்ட கொலையாளி முன்னாள் இராணுவ அதிகாரி என செய்திகள் தெரிவிக்கின்றது. ஓக் கிரிக் பகுதியில் வாடகைக்கு குடியிருந்துள்ளார். இந்த குடியிருப்பை வாடகை விட்ட குர்த் வீன்ஸ் தன்னுடைய சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில், "சிகாகோ நகரைச் சேர்ந்தவர் என்றும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும், 40 வயது மதிக்கத்தக்க வழுக்கை தலையானவர் என்றும்' தெரிவித்துள்ளார். வெள்ளையின வெறியராக இவர் இருக்கலாம். எனவே, இவருடைய பெயரை தெரிவிக்க வேண்டாம் என, குர்த் வீன்சிடம் போலீசார் வற்புறுத்தியுள்ளனர்.
0 comments :
Post a Comment