Monday, August 20, 2012

தலைமறைவாகியுள்ள நபர் வெளிநாடுகளிற்கு செல்லாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்க

கடந்த சனிக்கிழமை வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் ஆகிய மூவரின் சடலங்கள் பிரதான சட்டவைத்தியர் ஆனந்த சமரசேகர தலைமையிலான விசேட சட்ட வைத்தியக் குழுவினரால் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளதுடன், மூன்று சடலங்களினதும் உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நபர் வெளிநாடுகளிற்கு செல்லாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் போது சடலமாக மீட்கப்பட்டவர்களின் மகன் பிரகாஷ் குமாரசாமி என்பவரே தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் தமது மகனுடன் முன்னேஸ்வரம் கோவிலுக்கு செல்வதாக கூறி கொட்டகலை பகுதியில் இருந்து கடந்த 11 ஆம் திகதி வெள்ளவத்தைக்கு வந்து மகனுடன் தங்கியுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த தந்தை தேயிலை தோட்டமொன்றின் சாரதியாக கடமையாற்றியுள்ளதுடன், அவர் அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வு பெற்றதன் பின்னர் வழங்கப்பட்ட கொடுப்பனவு பணமும் அவரிடம் இருந்தமை தெரியவந்துள்ளது. உயிரிழந்துள்ள 58 வயதான பெண், தோட்டத் தொழிலாளி என்பதுடன் 23 வயதுடைய அவர்களது மகள் பயிற்சி பெறும் எழுதுவிளைஞராகவும் தொழில் புரிந்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் வீடொன்றை வாடகைக்கு அமர்த்தி கடந்த 12 ஆம் திகதியன்று தனது குடும்பத்தாரை அவர்களது மகன் அங்கு தங்க வைத்துள்ளார் என தெரியவருகின்றது. இவர்கள் குடும்பமாக உரையாடும் சத்தத்தினை இறுதியாக செவ்வாய்க்கிழமை (14) இரவு கேட்க முடிந்ததாக பக்கத்து வீட்டார் கூறினர்.

மறு நாள் புதன்கிழமை (15) அதிகாலை மகனான பிரசாந்த் தொலைபேசியில் எவரிடமோ உரையாடிக் கொண்டிருந்ததையும் அவர்கள் கேட்டுள்ளனர். வெள்ளவத்தையில் மூடிக் கிடந்த வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்தே சடலங்கள் கடந்த 18 ஆம் திகதி நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து 16 ஆம் திகதியன்று உயிரிழந்தவர்களின் மகன் பிரசாந்த் கொட்டகலையிலுள்ள தனது வீட்டுக்கு தனியாக வந்ததாகவும், சுமார் ஒரு மணித்தியாலம் வரை வீட்டிற்குள் கதவையடைத்துக் கொண்டு இருந்துவிட்டு பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பத்தனை பொலிஸார் இந்தக் குறிப்பிட்ட தோட்டத்துக்கு சனிக்கிழமை சென்று உயிரிழந்தவர்களின் வீட்டினை அவதானித்த போது வீட்டின் முன்கதவிலுள்ள பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அத்துடன் அந்தக்கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

வீட்டினுள் சென்ற பொலிஸார் வீட்டிலுள்ள அறையொன்றில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதையும் அவதானித்துள்ளனர். இது தொடர்பாக தலைமறைவாகியுள்ள மகனை பொலிஸார் தேடிவலைவிரித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com