அட்டகாசமான பந்தல் காலியாக கிடக்க, சிறியதோர் ஹோட்டல் ரூமில் தொடங்கிது டெசோ மாநாடு.
டெசோ மாநாட்டின் முதல் நிகழ்வான ஆய்வரங்கம் சென்னை அக்கார்டு ஹோட்டலில் இன்று காலை தொடங்கியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆய்வரங்கத்தை ஆரம்பித்து வைத்தார். பிரமாண்ட மாநாடாக நடைபெறும் என்று விளம்பரம் செய்யப்பட்ட டெசோ மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி, மிக சிறிய அளவில், ஹோட்டல் உள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்றது.
சென்னை அக்கார்டு ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடக்கிய இந்த ஆய்வரங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் விக்கிரமபாகு, ஆம்னஷ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கனிமொழி எம்.பி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றனர்.
ஆய்வரங்கத்தின் தொடக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையில், ஈழத் தமிழர்களுக்கு திமுக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து திமுக செயல்படுவது என்பது வரலாற்று உண்மை. ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
மிகச்சிறிய இடம் என்பதால், கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆயிரம் தடைகள் வந்தாலும், திட்டமிட்டபடி டெசோ மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்திருந்தார். அதையடுத்து, கூட்டத்தை தமது கோபாலபுரம் இல்லத்தில் நடத்தாமல், அதைவிட சற்று பெரிய இடவசதி கொண்ட ஹோட்டல் ஒன்றின் கான்ஃபிரன்ஸ் ஹாலில் கூட்டத்தை நடத்துகிறார்.
சென்னை அக்கார்டு ஹோட்டலில், கடந்த வாரம் தமிழக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் வருடாந்த கூட்டமும் நடைபெற்றிருந்தது. இன்று டெசோ மாநாட்டுக்குப் பின், வேறு இரு தனியார் நிறுவனங்கள், தற்போது கருத்தரங்கம் நடைபெறும் ஹாலை முன்பதிவு செய்துள்ளார்கள்.
ஹோட்டல் கான்ஃபிரன்ஸ் ஹாலில் கூடியிருந்த சிறிய கூட்டத்தினரிடையே பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, “ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக நிற்போம்; ஈழத் தமிழர்கள் மீது அக்கறையுடன் தி.மு.க. தொடர்ந்து ஆதரவாக இருப்பது வரலாற்று உண்மை” என்றார்.
எது எவ்வாறாயினும் இம்மாநாட்டினை இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துகின்ற கட்சிகள் யாவும் புறக்கணித்துள்ளதுடன் அவர்கள் கருணாநிதியின் உள்நாட்டு அரசியல் லாபம்தேடும் இந்மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை எனக்குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
1 comments :
உலகிலேயே மிககேவலமான அரசியல் வாதிகள் என்றால் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளே ,
வெட்கம், மானம், மரியாதை மட்டுமல்ல முதுகெலும்பு கூட அவர்களுக்கு இல்லை. ஈழத்தமிழரில் உண்மையில் அக்கறை, கரிசனை இருப்பின், அவர்கள் முற்பது வருடங்களாக தமிழ்நாட்டு அகதி முகாங்களில் அடிமட்ட வாழ்வு வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திருப்பார்கள் அல்லது அவர்களின் அகதி வாழ்வுக்கு ஒரு தீர்வை கண்டு அவர்களையும் சாதாரண மக்களை போல் வாழவிட்டிருப்பார்கள். மற்றும் இந்திய சிறைகளில் வருடக்கணக்கில் மிருகங்ககள் போல் அடைபட்டு தவிக்கும் ஈழத் தமிழர்களில் அக்கறை கொண்டிருப்பார்கள்.
ஆனால், அவர்களின் தமிழீழ மகாநாட்டு எடுப்புகள் எல்லாம் எரியும் வீட்டில் குளிர் காயும் நடவடிக்கையாகவே அன்றும் இன்றும் எப்போதுமாக உள்ளது. இறக்கும் வயதிலும் சுயநலவாதம் விட்டுப் போகவில்லை..
இவர்களும் மனிதர்களா?
Post a Comment