Monday, August 6, 2012

சீபா ஒப்பந்தம் தனக்குத் தானே தூக்கிட்டுக் கொள்வதற்கு சமம்!

இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள சீபா எனப்படும் பொருளாதாரத்தை விஸ்தரிக்கும் நோக்கிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தனக்குத் தானே தூக்கிட்டுக் கொள்வதற்கு சமம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சீபா ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார , யார் என்ன வகையான இனிய கதைகளை கூறினாலும் குறித்த ஒப்பந்தம் குறித்து அரசு ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

மேலும் சீபா ஒப்பந்தம் என்பது மிகவும் பிரபலமான ஒப்பந்தமாகும். பொருட்கள், சேவைகள், முதலீடு என பொருளாதாரத்தின் அனைத்து விடயங்களும் இந்தியாவினால் கைப்பற்றக் கூடிய அபாயகரமான திட்டமாகும். அன்று கையெழுத்திடாத காரணத்தினால் அதனை விட ஓரளவுக்கு பலம் குறைந்த சேவை பிரிவை மட்டும் கருத்தி ற்கொண்ட ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தினர். அதனால் சீபா ஒப்பந்தம் மறுபடி வருவதென்பது சாதாரண விடயமல்ல.

இந்நாட்டிலுள்ள புத்திஜீவிகள், தேசிய அமைப்புக்கள், குறிப்பாக உள்ளுர் வியாபாரிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முன்வரவேண்டும். இந்தியாவின் பாரிய வியாபார சந்தைக்குள் நுழைவதற்குப் பதிலாக எமது சிறிய வியாபார சந்தையையும் சுரண்டுவதற்கான சந்தர்ப்பத்தையே அவர்கள் உருவாக்குகிறார்கள். சுதந்திர வர்த்தகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அதேபோன்ற பாரிய பிரச்சினைகளுடன் கூடிய ஒப்பந்தத்திற்கு கையெழுத்திடுவது என்பது தனக்குத் தானே தூக்கிட்டுக் கொள்வதற்கு சமம் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment