கருணாநிதியை ஆதரித்தால் கத்தியால் குத்துவேன். மிரட்டுகின்றார் சீமான்.
திமுக தலைவர் கருணாநிதியை தொடர்ந்தும் ஆதரித்தால் 'உயிரோட விடமாட்டேன்' என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீமானின் மேற்படி மிரட்டலுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக சுப.வீரபாண்டியன் தமது வலைப்பூ பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
17.08.2012 அன்று, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அதில், 'இந்த சுப வீரபாண்டியனைத்தான் கேக்குறேன். கலைஞருக்குப் பிறகு என்ன செய்வே? என்ன செய்வீங்க அப்புறம்? ஸ்டாலின் பின்னாடிப் போவீங்களா? (ஆவேசமாக) இங்க பாரு....திரளாகத் திரண்டிருக்கிற இன உணர்வும், மான உணர்வும் மிக்க என் மக்களிடத்திலே, என் அன்புச் சகோதரர்களிடத்தில் கேட்கிறேன்.... இவ்வளவு பெரிய நாட்டுக்குள்ள இல்லாத முதலமைச்சர், மறுபடி கருணாநிதி வீட்டுக்குள்ளதான் இருக்கான்னு தேடிப் போனே..... ஒரு பயலை உயிரோட விட மாட்டேன் உங்களை.
இனி ஒரு தடவை போனே.... (மீண்டும் மிக ஆவேசமாக) டேய்.....அஞ்சு முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்து நாட்டை ஆண்டுட்டாரு, ஆண்டுட்டாரு, சாதனை, சாதனை, பெருமை, பெருமைன்னு பேசிக்கிராதீங்க...........ஓடி ஓடி உழைக்காதே கருணாநிதியையும் அவரு குடும்பத்தையும் வாழவும் ஆளவும் வைக்கிறதுக்கு. அர்ப்பணிச்சு நிக்காதே.
இங்க பாரு..... நீண்ட நாளு இப்படிக் கத்திக் கத்திச் செத்துக்கிட்டிருக்க முடியாது. ஒரு அஞ்சு வருஷம் பாப்பேன். இல்லாட்டிக் கத்தி எடுத்துக் குத்திடுவேன். இங்க பாரு.... ஜனநாயகம் தோக்கும்போது வேற வழியில்ல.......... அதனால உங்க பிள்ளைகள் அந்த நிலைக்கு எல்லாம் போறதுக்கு முன்னாடி நீங்க சுதாரிச்சுக்குங்க. விழிப்புணர்வு அடையுங்க' என சீமான் பேசியுள்ளார்.
சுப.வீரபாண்டியன் பதில்
மேலே உள்ள உரை முழுவதும் தம்பி சீமானுடையது. ஒரு எழுத்தைக் கூட நான் மாற்றவில்லை. முதலில் உள்ள கொலை மிரட்டல் எனக்கு. பிற்பகுதியில் உள்ள மிரட்டல் மக்களுக்கு. இன்னும் ஐந்து வருடத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை அவர் கூறுகின்றார்.
இம் மிரட்டல்களுக்கெல்லாம் விடை சொல்ல வேண்டும் அல்லது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர்.
வேண்டாம் நண்பர்களே, தெளிவும் அரசியலும் அற்ற விவாதங்களில் நாம் சிக்கிக் கொள்ள வேண்டாம். வேண்டுமெனில், ஒன்றை மட்டும் சொல்லி வைக்கலாம். தன்னுடன் இருந்த ஒரு தம்பியின் கைகளால் கொல்லப்படுவதும், தான் மிகவும் நேசிக்கும் தலைவன் வீட்டு வாசலில் உயிர் பிரிவதும் எல்லோருக்கும் வாய்க்காது. எனக்கு வாய்த்தால் மகிழ்ச்சியே என்று சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment