Sunday, August 5, 2012

புலிகள் விட்ட அதே தவறை தொடர்ந்தும் த.தே.கூ செய்கின்றது. ஜே.வி.பி சந்திரசேகரன்.

உலகிலே மிகப்பெரிய ஆயுதப்போராட்ட இயக்கமாக வர்ணிக்கப்பட்ட புலிகளியக்கத்தின் 30 வருடகால போராட்டம் தோற்றதற்கான காரணம் அவ்வியக்கத்தின் இனவாதமும் மாற்று இனங்கள் மீதான வன்முறைகளுமே எனக்கூறிய ஜேவிபி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் அதே தவறை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்துவருவதானது இந்நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்காது எனத் தெரிவித்தார்.

கிழக்கின் தேர்தல் நிலைமைகள் தொடர்பாக இலங்கைநெற் இற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறிய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ஜேவிபி முற்றாக இனவாதத்தையும் பிரிவினையையும் எதிர்ப்தாகவும் கூறினார். இலங்கையிலே இனங்கள் தனித்து வாழமுடியாது என்று கூறிய அவர் தமிழ் தமிழ் நாடு , முஸ்லிம் நாடு எனப் பிரதேசவாரியாக பிரித்தெடுக்க முற்பாடுவதனூடாக நாடுமுழுவதும் பரந்துவாழும் தமிழ் முஸ்லிம் மக்களது அரசியல் எதிர்காலம் தொடர்பான பொறுப்புக்கூறலிலிருந்து தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதம் பேசும் கட்சிகள் தம்மை விடுவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

மேற்குநாடுகள் உதவி புரியும் எனத் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அனைவருமே மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர் எனவும் மேற்குலகின் தலையீட்டினால் பிரிக்கப்பட்ட கிழக்கு திமோர் , தென்சூடான், கொசோவா, சைப்பிரஸ் போன்ற நாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு சொல்லி ஏமாற்றுகின்றனர் எனக்கூறிய சந்திரசேகரன மேற்படி நாடுகள் எவையும் பிரிந்து சென்றதன் ஊடக எந்த நன்மையையும் அடைந்து கொள்ளவில்லை எனவும் அந்நாடுகள் மேற்குலகின் அரசியல் பந்தாடு தளங்களாக உருமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே கிழக்கு தேர்தலில் இனவாதம்பேசி மக்களை சூடேற்றி வாக்குகளை அபகரித்து எந்த கட்சி வெற்றிபெற்றாலும் ஈற்றில் அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் இனவாதம்பேசி வாக்கு கேட்டுவரும் கட்சிகளை மக்கள் முற்றாக நிராகரிக்கவேண்டும் எனவும் வேண்டினார்.

No comments:

Post a Comment