Sunday, August 5, 2012

பட்டதாரிகள் நியமனம்: சுயநலவாதிகளின் பொய் வதந்திகளை நம்பாதீர்.

பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கி விட்டு ஒருபோதும் பறிக்கமுடியாது என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதி யமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தேர்தலுக்காகவே வழங்கப்பட்டதாக தங்கள் சுயதேவைக்காக சிலர் வதந்திகளை பரப்பிவருவதாகவும் தெரிவித்தார். மட்டக்களப்பு,கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் 5000 ஊட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டத்தின் மாவட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு அபிவிருத்திகளை அடைந்துவருகின்றது. கட்டுமானப்பணிகள் அபிவிருத்தியடைந்துவரும் அதேநேரம் மக்களின் வாழ்வாதாரங்களையும் உயர்த்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கின்றோம். அதன் அடிப்படையில் தான் அண்மையில் 3000பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கினோம்.

ஆனால் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தேர்தலுக்காகவே வழங்கப்பட்டதாக தங்கள் சுயதேவைக்காக சிலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர். இதை நீங்கள் நம்ப வேண்டாம். கடந்த காலங்களில் பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்கினால் ஒருவருட காலம் அவர்கள் பயிற்சித்திட்டத்தில் இருக்க வேண்டும். அதை இம்முறை 6மாத காலமாக குறைத்திருக்கின்றோம். ஆகவே பட்டதாரிகளாகிய நீங்கள் புத்திசாலிகள். நியமனங்களை வழங்கிவிட்டு அதை பறிக்க முடியாது. நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்த்களுக்கு அப்பால் எங்களுடைய குடும்பங்கள் வளரவேண்டும் என்பதற்காகவே நாங்கள் பலதரப்பட்ட துறைகளையும் வளர்த்துவருகின்றோம். மீன்பிடி பாலுற்பத்தி விவசாயம் போன்ற துறைகள் வளர்ந்திருக்கின்றன.

இவ்வருடம் நிலவிய வரட்சியின் காரணமாக பொலன்னறுவை அம்பாறை மொனராகலை போன்ற மாவட்டங்களின் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவித சேதமும் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் எங்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களாகும். குளங்களின் மட்டத்தை உயர்த்தியது வாய்க்கால்களை திறம்பட அமைத்தது நீர் விநியோகத்தை சிறப்பாக மேற்கொண்டமையே விவசாயிகள் சிறந்த பலனை அடைந்ததற்குக் காரணங்களாகும்.

கிட்டத்தட்ட 17ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் வவுனதீவில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 3இலட்சம் மக்கள் இந்நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இது போன்ற பல அபிவிருத்திகள் சமாந்தரமாக இடம்பெற்றுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக எந்த ஒரு ஜனாதிபதியும் ஒதுக்காத நிதியினை மகிந்த ராஜபக்ச அவர்கள் ஒதுக்கித் தந்திருக்கின்றார். இதற்கு நன்றியுடைய மக்களாக நாங்கள் இருக்க வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com