நான் அரச துரோகி ஆனால் தேசத் தியாகி. ரஜீவைக் கொல்வதற்கே அடித்தேன். விஜய விஜிதமுனி
1987 ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தம் அல்லது ஜே.ஆர்- ராஜீவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவேறி விட்டன. ஆனால், அதன் நோக்கங்கள் இன்றுவரை நிறைவேறவில்லை என்பதை இந்திய அரசோ, இலங்கை அரசோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களோ அதன் வெள்ளிவிழா பற்றி அலட்டிக்கொள்ள வில்லை என்பதிலிருந்து அறியலாம். சுதந்திரத்துக்குப் பின்னர் 1948 ல் இருந்து இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட தமிழர் தொடர்பான (அது மலையகத் தமிழர் அல்லது வடக்கு-கிழக்குத் தமிழர் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்) எந்த ஒப்பந்தமும் இலங்கையால் முறையாக நிறைவேற்றப்பட வில்லை. ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினரான இந்தியாவும் அதுபற்றி அலட்டிக் கொள்வதில்லை, அழுத்தமும் கொடுப்பதில்லை. ஏனெனில், அந்த இரு தரப்பினருக்கும் தமிழர் வேண்டப்படாதவர், தீண்டத்தகாதவர்.
மேலே கூறப்பட்ட ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தம் கைகச்சாத்திடப்பட்ட மறுநாள் 30.7.1987 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கொழும்பில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதில் அணிவகுத்து நின்ற 21 வயது விஜித விஜயமுனி என்ற கடற்படை வீரன் தனது துப்பாக்கியைத் திருப்பி அடிக்கட்டையால் ராஜீவ் காந்தியின் பிடறியில் ஒங்கி அடித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாகரித்துக் கொண்ட ராஜீவ் அடி பலமாகப் படாமல் தலையைத் தாழ்த்தி தப்பித்துக் கொண்டார். அந்த கடற்படை வீரன் அடித்த அடி முறையாகப் பட்டிருந்தால் இந்தியப் பிரதமர் அந்த இடத்திலேயே இறந்திருப்பார். அடித்தவனின் நோக்கமும் அவரைக் கொள்வதுதான். அவன் கடற்படையில் சேர்ந்து மூன்று வருடங்கள்தான்.
ஏன் கடற்படை வீரன் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவனை அந்த மனநிலைக்கு இட்டுச் சென்றது எது என்பவை பற்றி அவன் சமீபத்தில் செய்தியிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருகின்றான்.
பிரபாகரனின் எழுச்சி, தோல்வியடையும்; தருவாயில் ராஜீவ் காந்தியின் அழுத்தத்தினால் வடமராட்சி நடவடிக்கை (ஒபரேஷன்) திடீரென நிறுத்தப்பட்டது, தனது நாட்டின் சுதந்திரத்தில் இந்தியா தலையிட்டது, மாகாண சபை ஏற்படுத்தப்பட்டு பிரபாகரன் முதலரைச்சரானால் தான் அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்த வேண்டி யேற்படும் என்ற ஒவ்வாமை, சில காலத்துக்குள் இந்தியாவின் 26 வது மாநிலமாக இலங்கை ஆகப்போகிறது என்று பலர் சொல்லக் கேட்டதனால் ஏற்பட்ட ஆத்திரம் என்பவை ஒன்று சேர்ந்து இதற்கெல்லாம் காரணமான ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற திடமான மடிவு அவனது மனதில் ஏற்ப்பட்டது. தான், அவ்வாறு நடந்து கொள்வது படைவீரன் என்ற வகையில் படை ஒழுக்கக் கட்டுப்பாட்டை மீறும் செயலாளக இருந்தாலும், அரசைப் பொருத்தளவில் அரச விரோதச் செயலாக இருந்தாலும், நாட்டைப் பொருத்தளவில் அது தேசப்பற்றுச் செயலாகும் என்று திடமாக நம்பியிருக்கிறான்.
அவ்வாறு எண்ணியதை, பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணசிங்க பிரேமதாசா அவனுக்கு விதிக்கப்பட்டிருந்த 06 வருட கடூழிய சிறைத் தண்டனையை 2 ½ வருடமாகக் குறைத்து அவனை விடுதலை செய்ததும், தனது பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ஜேவிபியினர் சேர்த்துக் கொண்டதும் உறுதி செய்கின்றன. இதெல்லாம் அவனது பேட்டியில் அவன் கூறிய கருத்துக்கள்.
எந்த மக்களுக்காக அந்த மக்களின் மண்ணில் ராஜீவின் உயிர் பறிபோக விருந்ததோ அதே மக்கள் பின்னர் அவரது மண்ணில் அவரது உயிரைப் பறித்து விட்டனர் என்பதுதான் கொடூரம்.
அரசியலில் விருப்பமும் பக்குவமும் அற்ற ராஜீவ், அரசியல் முதிர்ச்சியும், சாணக்கியமும் நிறைந்த ஜேயாரால் ஏமாற்றப்பட்டார். மிலேச்சத்தனம் மிக்க இந்திய இராணுவம் தான் காப்பாற்ற வந்த மக்களை காட்டுமிராண்டிகளாக நடாத்தியது, கொலை, கற்பழிப்பு போன்றவற்றை அவர்கள் மீது தாராளமாக நடத்தியது. அதற்கு ராஜீவ் பலியாகிவிட்டார்.
0 comments :
Post a Comment