டொசோவுக்கு போடவேண்டும் வேலி, இல்லா- விட்டால் ஈழம் கட்டும் தாலி – ஹெல உறுமய.
தமிழ் நாட்டில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள டெசோ மாநாட்டுக்கு வேலி போடவேண்டும். இல்லாவிட்டால் இலங்கையிலும் டெசோ நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஹெல உறுமய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் நாட்டில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் சில, நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருந்தால் அது பாரதூரமான விடயமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று அறியக் கூடியதாகவுள்ளது. இவர்கள் கலந்துகொண்டால் அது நாட்டின் அரசமைப்பை அப்பட்டமாக மீறும் செயலாக அமையும்.
அதுமட்டுமின்றி, நாட்டைப் பிரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடமாட்டோம் என வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியையும் மீறும் செயலாகும். அரசமைப்பின் 157 ஆவது சரத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகள் அமைப்பு தோற் கடிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், மீண்டும் தனிஈழப் போரட்டத்துக்கு உயிர் கொடுப்பதற்கு தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் முயற்சித்து வருகின்றனர். தமிழீழக் கோரிக்கையால் ஏற்பட்ட வடுக்கள் மறைவதற்கு முன்னர் மீண்டும் தமிழீழக் கோரிக்கையை முன்வைப்பதற்கு சம்பந்தன் பாடுபட்டுவருகின்றார்.
தமிழீழப் போராட்டத்தின் இரண்டாம் இன்னிங்ஸ் (இரண்டாம் அத்தியாயம்) என இதை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்கள் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சக்திகளின் அழுத்தத்துடன், தமிழீழமொன்றை அமைப்பதற்கு கனவு காண்கின்றனர். இதன்மூலம் அவர்கள் நாட்டின் அரசமைப்பு, நீதி ஆகியவற்றை அப்பட்டமாக மீறியுள்ளனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அரசு இன்னும் அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், புரிந்துணர்வின் அடிப்படையிலா இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேற்படியான கூற்று உண்மையில்லை என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டின் சட்டத்தைப் பயன்படுத்தி தண்டனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் டெசோ மாநாடு நடைபெறும் திகதி தொலைவில் இருக்காது என்றே சொல்லவேண்டும்.
எனவே, நான்கு திசைகளிலிருந்தும் திரண்டுவரும் ஈழவாதிகளின் குரல்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் நாடு மீண்டும் பெரும் விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment