Tuesday, August 14, 2012

முதலில் ராஜீவ் கொலையாளிகளை விடுவியுங்கள், நாம் இங்குள்ள புலிகளை விடுவிக்கின்றோம்.

இந்தியாவிற்கு ஹெல உறும சவால்

'புலிகளுக்கு நாங்கள் பொது மன்னிப்பு கொடுப்பதற்குமுன், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களுக்கு நீங்கள் பொது மன்னிப்பு கொடுங்கள் பார்க்கலாம்' என்று இலங்கை வந்திருந்த இந்திய அமைதிப் படையின் முன்னாள் தளபதி மீது பாய்ந்துள்ளது ஜாதிக ஹெல உறுமய கட்சி.

1980-களில் இலங்கை வந்த இந்திய அமைதிப் படையில் அங்கம் வகித்த அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா, 'இலங்கை அரசு கைது செய்து வைத்துள்ள விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். அவர்களது போர் திறமையை பயன்படுத்திக் கொள்வதற்காக, இலங்கை ராணுவத்தில் அவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு தொடர்பான ராணுவ மாநாட்டில், இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

கொழும்பு ராணுவ மாநாட்டில் உரையாற்றிய இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷே, போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த பெரும்பாலான விடுதலைப் புலிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும், 383 பேர் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் நடைபெறுவதாகவும் கூறியிருந்தார்.

அவர்களுக்கு பொது மன்னிப்பு வழக்குமாறே, ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்திய அமைதிப்படை முன்னாள் தளபதி அசோக் மேத்தாவின் கூற்றை, ஹெல உறுமய இன்று கடுமையாக விமர்சித்துள்ளது.

அக்கட்சியின் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்கே, '2009-ம் ஆண்டு மே மாதம்வரை இலங்கை ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரிந்த விடுதலைப் புலிகள் இலங்கையில் சிறையில் உள்ளார்கள். 1991-ம் ஆண்டு மே மாதம் கொல்லப்பட்ட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இந்தியாவில் சிறையில் உள்ளார்கள்.

இலங்கை சிறையில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறும் இந்திய அமைதிப்படை முன்னாள் தளபதி அசோக் மேத்தா, அதற்குமுன் புதுடில்லி சென்று சோனியா காந்தியை சந்தித்து, தமிழக சிறையில் உள்ள ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற விடுதலைப் புலிகளுக்கு, பொது மன்னிப்பு கிடைக்க முயற்சிக்கலாமே?' என்று கூறியிருக்கிறார்.

இதற்கு அசோக் மேத்தாவால் என்ன பதில் சொல்ல முடியும்?

1 comments :

Arya ,  August 15, 2012 at 1:46 AM  

A right reply, well done varnasinge, its a remember again about Sarath fonseka, military mens need to keep mouth closed and dont need to talk non sense.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com