அரசியல்வாதிகள் என்போர் மக்களின் தேவைகளை செவ்வனே நிறைவேற்று கின்றவர்களாக இருக்க வேண்டும் உரிமைக் கோசங்களுடன் வெற்றுப் பேப்பர்களாக இருப்பவர்கள் மக்கள் மத்தியில் செல்லாக் காசுகளாகும். என கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸில் போட்டியிடுவது சம்மந்தமாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தனது கருத்தினை வெளியிடும்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்த வடகிழக்கு மானிலத்தில் தென்கிழக்கு அலகு என்ற யதார்த்தத்திற்கு முரணான சாத்தியமற்ற விடயத்தை முன்வைத்து எமது மக்களை பல இன்னல்களுக்கு உட்படுத்தக்கூடிய தீர்வினை பெற வெளிநாட்டு சக்திகளின் அளுத்தத்துடன் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது. இதனை முற்றாக எதிர்க்கின்றோம். இந்த விடயத்தை தேசிய காங்கிரஸ் ஏற்கனவே எதிர்பார்த்துதான் இதன்மூலம் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் கேட்கும் சூழ்நிலைதான் உருவாகும் என்பதை நாங்கள் ஊகித்துக் கொண்டோம்.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பதை விரும்பாத தேசிய காங்கிரஸின் வெற்றி வியூகங்கள் ஒருபோதும் தோல்வி கண்டதில்லை. தேசிய காங்கிரஸ் என்ற கட்சி எமது பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி, சாதுரியமானதும், சாணக்கியமானதும், தீர்க்கதரிசனமானதுமான தலைமைத்துவ பண்புகளுடன் மூவின மக்களையும் இணைத்துக் கொண்டு செயற்படுகின்ற கட்சியாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகை வாக்குகளை மட்டும் வைத்துக் கொண்டுள்ள எமது தேசிய காங்கிரஸ் கட்சியானது, இலட்சக்கணக்கில் வாக்குகள் உள்ளன என்று மார்தட்டி பேசுகின்றவர்கள் புரியாத சாதனைகளை எல்லாம் செய்து வந்துள்ளதை எமது தலைவர் அமைச்சர் அதாவுல்லா ஊடாக எமது கட்சியே செய்து வருகின்றது. அந்த அடிப்டையில் தற்போதுள்ள எமது மக்களின் தேவைகள் அபிலாசைகளை இனம்கண்டு அபிவிருத்தியுடன் கூடிய அரசியலை செய்கின்ற தேசிய காங்கிரஸில் இணைந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் நான் களமிறங்கி இருப்பதை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.
மாகாணசபையில் கதிரைகளை அலங்கரிக்கின்றவர்களுக்கு மத்தியில் ஒரு துடிப்புள்ள மக்கள் சேவகனாக சேவையாற்ற விரும்புகின்றேன். மக்களது பிரச்சினைகள் எவ்வளவோ தீர்வு காணப்படாமல் இருக்கின்றது. சுனாமி வீட்டுத்திட்ட பிரச்சினை குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் மாத்திரம் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளமை மிகவும் மன வேதனையைத் தருகின்றது. சுமார் 300 குடும்பங்கள் அவர்கள் இன்னும் தகரக் கொட்டில்களிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்க நாம் சொகுசு வீடுகளில் வாழ்வது என்பது மனக்கஸ்டமான விடயம். நான் இந்த மாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டால் எனது முதல் பணியாக இந்த மக்களுக்கு வீடுகளைப்பெற்றுக் கொடுக்க முயற்சி எடுப்பேன்.
ஏற்கனவே, கல்முனையில் அமைந்திருக்கும் இறைவெளிக்கண்ட வீடமைப்புத் திட்டத்திற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் தலைவராக இருந்து முழு மூச்சாக செயற்பட்டேன். அதுபோல் கஸ்டப்படுகின்ற சாய்ந்தமருது மக்களுக்கும் எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சேவையாற்ற காத்திருக்கின்றேன். இந்த மக்களின் வீடுகளை பெற்றுக் கொடுப்பதில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் முழு பிரயத்தனம் எடுத்தாலும் பிரதேச அரசியல்வாதிகளின் அசமந்தத்தால் மந்தகதியிலேயே இந்த வீட்டுத்திட்டப்பிரச்சினை காணப்படுகிறது. இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதன் மூலம் எமது பிரதேச மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வித்திடுவதே எமது தலையாய முதல் பணியாகும் என்றார்.
No comments:
Post a Comment