உலக நட்பு தினம் -புன்னியாமீன்
உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2012) ஆகஸ்ட் 5ஆம் திகதி உலக நட்பு தினமாகும். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம். இருவருக்கிடையில் அல்லது பலருக்கிடையில் ஏற்படக்கூடிய நட்பு இரு குழுக்களிடையே அல்லது பல குழுக்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு சமூகங்களுக்கிடையே அல்லது பல சமூகங்களுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு, இரண்டு நாடுகளுக்கிடையே அல்லது பல நாடுகளுக்கிடையே ஏற்படக்கூடிய நட்பு என்று பல வடிவங்களில் அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், பொதுவாக நட்பு தினம் என்று கூறும்போது இருவருக்கிடையே ஏற்படக்கூடிய நட்பின் பரிமாணமே கருத்திற் கொள்ளப்படுகின்றது. இது ஆண் -ஆணிடையே, பெண் – பெண்ணிடையே, ஆண் – பெண்ணிடையே ஏற்படலாம்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையில் நம்பகமான ஆலோசகர் தேவைப்படுகிறார். முக்கியமாக நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். ஒருவருடைய சிந்தனைகளையும், குணங்களையும் பட்டை தீட்ட, உதவி செய்ய அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகிறார்.
பெற்றோர்கள், மனைவியைவிட நமது துக்கத்திலும், சந்தோஷத்திலும் பங்கு கொள்வதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தாயிடமும், மனைவியிடமும், தந்தையிடம்கூட ஆலோசனை செய்ய முடியாத பல விடயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவை, தீர்வை பெறலாம். சில சந்தர்ப்பங்களில் பிறருடன் மேற்கொள்ளப்படும் நட்பைப் போலவே குடும்ப அங்கத்தவர்களிடையே நட்பார்த்தமான உறவுகள் ஏற்படுவதுண்டு.
உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது என பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். உண்மையான நட்பின் முன் தமது உள்ளக்கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது மனதில் ஏற்படும் அமைதியை அளவிட முடியாது. பிரச்சினைக்குரிய ஒரு விடயத்தை அல்லது தீர்வு காண வேண்டிய விடயத்தை மனதுக்குள் அடக்கி வைத்துக்கொள்வதனால் விமோசனம் கிடைக்கப்போவதில்லை மாறாக மன அழுத்தங்களும், விபரீதங்களுமே ஏற்பட இடமுண்டு.உண்மையான நட்புடன் அவற்றைப்பகிர்ந்து கொள்கையில் சில சந்தர்ப்பங்களில் எமக்குக் கிடைக்கும் ஆலோசனைகள் விலைமதிக்க முடியாமல் இருக்கலாம். தற்போதைய வேகமான நவீன காலத்திலும் நட்பினை கௌரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சில நட்பினை கலங்கப்படுத்தாமலும் இருப்பதில்லை.
சாதி, இனம், மொழி, பால் பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக கொண்டாடப்பட்டுவரும் இந்த நண்பர்கள் தினத்தில், தலைமுடி நரைத்தாலும் நண்பா உன்னிடம் நான் கொண்ட நட்பு இன்னும் மாறவில்லை என்று உலகெங்கும் உள்ள வயதானவர்கள்கூட இன்றைய தினத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது அவர்கள் ஞாபகம் வருதே… நண்பா ஞாபகம் வருதே… பள்ளிக் காலங்களில் நாம் ஒன்றாக சேர்ந்து சுற்றியது. ஆற்றங்கரையில் சிறு வயதில் கல் எறிந்து விளையாடியது. மாந்தோப்பில் மாங்காய் பறித்து தின்ற சுவையான நாட்கள் என்று பல பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து பூரிப்படைவார்கள்.
நண்பர்கள் தினத்தில்… நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். தொலைதூரத்தில இருப்பவர்களுக்கு செல்பேசி வழியாக குறுந்தகவல் அனுப்பியும் (எஸ்.எம்.எஸ்.), கணினி வழியாக மின்னஞ்சல் அனுப்பியும் தங்கள் நட்பை பலப்படுத்திக் கொள்கின்றனர்.
துன்பம் வரும் வேளையில் கடவுளை நினைக்கிறோம். அடுத்ததாக உதவி கேட்க நல்ல நண்பர்களைப் பற்றிய எண்ணம் நம்மையும் அறியாமல் நம் மனதில் உதயமாகிறது. பரஸ்பரம் அன்பை மட்டும் அல்லாமல் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆற்றல் நட்புக்கு மட்டுமே உரிய சிறப்பாகிறது. ஆனால் பலர் நட்பின் மகத்மீகத்தை சரிவர உணர்ந்து கொள்வதில்லை.
இதுநாள் வரையிலும், நண்பர்களே எனக்கு இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது. நட்பு, தோழமை என்பது இருவர் இடையேயோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், பால், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
திருக்குறளில் திருவள்ளுவர் நட்பு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களைப் போல நண்பர்களையும் இரண்டு கோணங்களில் அவதானிக்கலாம். அவர்கள் நல்ல நண்பர்கள்இ கெட்ட நண்பர்கள்.
நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை வெளிப்படையாகவே வழங்குகின்றான். தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை – உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான். ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.
மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும்.
பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க, அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான்.
அநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல், தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது. அறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்காகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன. புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும்இ கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான்.
எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்.
இவ்விடத்தில் வைரமுத்துவின் கவியொன்று என் ஞாபகத்திற்கு வருகின்றது.
நட்பு என்பது, சூரியன் போல்..
எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்
நட்பு என்பது, கடல் அலை போல்..
என்றும் ஓயாமல் அலைந்து வரும்
நட்பு என்பது, அக்கினி போல்..
எல்லா மாசுகளையும் அழித்து விடும்
நட்பு என்பதுஇதண்ணீர் போல்..
எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும்
நட்பு என்பது, நிலம் போல்..
எல்லாவற்றையும் பொறுமையாய் தாங்கிக் கொள்ளும்
நட்பு என்பது, காற்றைப் போல்..
எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்
நட்பு உன்னதமானது. அதனை மதித்து அதனை கௌரவித்து இத்தினத்தில் எமது நண்பர்களுக்கு எமது நட்பினை பகிர்ந்து கொள்வோம்.
0 comments :
Post a Comment