Friday, August 17, 2012

அமெரிக்க கடற்பகுதிக்குள் ரகசியமாக ஊடுருவி விட்டு திரும்பி வந்த ரஷ்ய நீர்மூழ்கி!

வாஷிங்டன்: ரஷ்யாவின் அணு சக்தியால் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க கடற்படையின் அனைத்துக் கண்காணிப்புகளையும் மீறி அமெரிக்க கடற்பகுதியில் ஊடுருவி பல நாட்கள் உளவு பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது. ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலாகும். விளாடிமீர் புடின் மீண்டும் ரஷ்ய அதிபரான பிறகு இந்த ஆண்டில் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் நடந்துள்ளது. அது அமெரிக்க கடல் பகுதியை விட்டு வெளியே சென்ற பிறகு தான் இந்தத் தகவலே அமெரிக்கக் கடற்படையின் அட்லாண்டிக் பிரிவிவுக்குத் தெரியவந்துள்ளது.

ஆனாலும் இதை அமெரிக்கா வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டது. இந் நிலையில் இந்தத் தகவல் நேற்று தான் வெளியே கசிந்துள்ளது. கடந்த மாதம் ரஷ்யாவின் பியர் எச் ரக குண்டுவீசும் விமானம் (Bear H strategic bomber) கலிபோர்னியா அருகே அமெரிக்க வான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து அமெரிக்க விமானப் படை விமானங்கள் அந்த விமானத்தை நெருங்கியதையடுத்து அது திரும்பிச் சென்றது.

சர்வதேச விவகாரங்களில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தும் முயற்சிகளில் புடின் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. சிரியா விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ரஷ்ய அதிபர் புடின் களமிறங்கி அந்நாட்டு அரசுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com