Thursday, August 2, 2012

ராஜீவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரி தரும் அதிர்ச்சித் தகவல்கள்!

பத்மநாபா கொலையாளிகளை தப்பிப்போக வாய்ப்பளித்த தமிழகத்தின் கபடத்தனமான உயர் தலைமை.

சுதேந்திரராஜா என்கிற சாந்தன் என்கிற ராஜூ என்கிற சின்ன சாந்தனுக்கு சிறுவயது முதல் சிவராசனைத் தெரியும். 1988 பெப்ரவரியில் சிவராசன் ஒருநாள் சின்ன சாந்தனைக் கூப்பிட்டு, 'உனக்கு சென்னைக்குச் சென்று படிக்க விருப்பமா? இயக்கம் அதற்கு ஏற்பாடு செய்யும். நான் பார்த்துக் கொள்வேன்' என்று சொல்லியிருக்கிறார்.

இது நடந்து சரியாக இரண்டு வருடங்கள் கழித்து, 1990 ஆம் ஆண்டு பெப்ரவரியில் சிவராசன், சின்ன சாந்தனை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார். வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த நாகராஜன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் வீட்டுக்கு அவர்கள் சென்றார்கள். நாகராஜன் தொழில்முறையில் ஒரு கடத்தல்கார். அவரிடம் சின்ன சாந்தன் சென்னைக்குப் படிக்க வந்திருக்கும் விடயத்தைச் சொல்ல, அன்றைய தினமே நாகராஜனும் சிவராசனும் சாந்தனை எம.ஐ.ஈ.டிக்கு (Madras
Institute of Engineering Technology) அழைத்துச் சென்று சேர்த்துவிட்டார்கள். படிக்கவும் வைத்து, வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து யார் இப்படித் தன்னைக் கவனிப்பார்கள் என்று சின்ன சாந்தனுக்கு சிவராசன் மீது மிகுந்த மதிப்பும் விசுவாசமும் உண்டாயிற்று.

பதினைந்து நாட்கள் ஒழுங்காகக் கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். அதன்பின் ஒருநாள் வள்ளுவர் கோட்டத்தில் சிவராசனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, சிவராசன் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தைப் பற்றியும் பத்மநாபாவைப் பற்றியும் சின்ன சாந்தனிடம் சிறிதுநேரம் பேசினார். 'அது ஒரு சமூக விரோத இயக்கம். இந்திய அமைதிப்படையிடம் விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுப்பதே அவர்கள்தான். நீ கொஞ்சம் அவர்களைக் கவனிக்க வேண்டும்'

சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், 'பத்மநாபா கொல்லப்பட வேண்டியவர். இந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் செய்த பெரிய சேவை' என்றும் சொன்னார். சின்ன சாந்தனுக்கு அப்போது இருபது இருபத்தொரு வயதுதான். அந்த வயதுக்கே உரிய ஆர்வமும் பரபரப்பும் சாகசச் செயலில் ஈடுபடும் குதூகலமும் இருந்தன. சிவராசனுக்காக ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்துக்குச் சென்று பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு ஒற்றறிந்து சொல்வதாக உறுதியளித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. சின்ன சாந்தன் அங்கே செல்லத் தொடங்கினார். இலங்கையிலிருந்து புதிதாக வந்து இறங்கியிருக்கும் அகதி என்பது போன்ற அறிமுகத்துடன் அங்கே சென்று ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் மீது தனக்கு அக்கறையும் ஈடுபாடும் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அங்கிருந்த நபர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டார்.

இப்படி ஈ.பி.ஆர்.எல்.எப் காரர்களுடன் பழகி, அவர்கள் யார் யார், எத்தனை பேர் இருக்கிறார்கள், வந்து போகிறவர்கள் யார், அலுவலகத்தில் என்ன பேசுகிறார்கள், பத்மநாபா எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்று கிடைக்கிற ஒவ்வொரு தகவலையும் சிவராசனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

1990 மார்ச்சில் பத்மநாபா ஒரிஸாவில் இருந்தார். மே மாதம் அவர் சென்னை திரும்புவதாக சின்ன சாந்தனுக்குத் தெரிந்தது. உடனே அத்தகவலை சிவராசனுக்குத் தெரியப்படுத்தினார். சிவராசன் ஆயத்தமாகத் தொடங்கினார்.

ஜூன் மாதம் 19ஆம் தேதி நாள் குறித்தார்கள். அன்றைக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் மத்திய கமிட்டியின் முக்கிய மீட்டிங் ஒன்றும் நடைபெறவிருந்தது. பத்மநாபா, யோகசங்கரி, கிருபாகரன், கோமளராஜா, புவி, லிங்கம் என்று அமைப்பின் அனைத்து முக்கியஸ்தர்களும் கூடுவார்கள்.

இந்தத் தகவல் கிடைத்ததில் சிவராசன் சுறுசுறுப்பானார். அன்று மாலை ஆறு மணி அளவில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சின்ன சாந்தனைக் காத்திருக்கச் சொன்னார். ஒரு
அம்பாசிடர் காரில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த டேவிட் மற்றும்
சிலரும் சிவராசனுடன் அப்போது வந்தார்கள். சின்ன சாந்தனை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏற்றிக்கொண்டு நேரே ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்துக்குச் சென்றார்கள்.

சற்றுத்தள்ளி காரை நிறுத்திவிட்டு சின்ன சாந்தனை மட்டும் இறக்கி, அலுவலகத்தில் பத்மநாபா இருக்கிறாரா என்று பார்த்துவரச் சொன்னார்கள். சென்று பார்த்துவிட்டுத் திரும்பிய சின்ன சாந்தன், 'பத்மநாபா அலுவலகத்தில் இல்லை. அருகிலேயே ஒரு அபார்ட்மெண்டும் ஈ.பி.ஆர்.எல்.எப்புக்குச் சொந்தமானது இருக்கிறது. அங்கே தங்கியிருக்கிறார்' என்று தகவல் சொல்ல, சிவராசன், டேவிட் மற்றும் உடன் வந்த சிலரும் நேரே அபார்ட்மெண்டுக்குச் சென்றார்கள். அனைவரிடமும் ஏகே 47 இருந்தது. ஒரு வெடிகுண்டும் கொண்டு போனார்கள்.

வெளியே காவலுக்கு நின்ற சின்ன சாந்தனுக்குச் சிறிது நேரத்தில் உள்ளே துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. மணி சரியாக இரவு ஏழு. பரபரவென்று உள்ளே போன அனைவரும் திரும்பி வந்து காரில் ஏறிக்கொண்டார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நாங்கள் தேடிப்பிடித்த சின்ன சாந்தன் என்னும் சுதேந்திர ராஜா அளித்த மேற்படி வாக்குமூலத்தின் மூலம்தான் பத்மநாபா கொலையில் ஈடுபட்ட ரகுவரன், டேவிட் என்கிற பெயர்களுக்குரிய நபர்கள் யார் என்னும் விடயமே தெரிய வந்தது.

சென்னையில் பத்மநாபாவைக் கொன்றுவிட்டு அம்பாசிடர் காரில் தப்பித்தவர்கள் நேரே தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கோடியாக்கரைக்குச் சென்று இலங்கைக்குக் தப்பிப்பதுதான் திட்டம். அவர்கள் செங்கல்பட்டு தாண்டும்போதே இரண்டு போலிஸ்காரர்கள் வழி மறித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சந்தேகமெல்லாம் ஒன்றுமில்லை. வழக்கமான நெடுஞ்சாலைப் பரிசோதனைதான்.

காரை ஓரமாக நிறுத்திவிட்டு எதற்கோ இறங்கியிருந்தவர்களை நெருங்கிய அந்த இரண்டு போலிசாரும் வண்டியில் என்ன இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள்.

வண்டியில் நிறையவே ஆயுதங்கள் இருந்தன. ஏகே ரகத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் இன்னும் பல. 'டிக்கியைத் திறந்து காட்டுங்கள்!' 'டிக்கிதானே? ஓ திறக்கிறேனே!' என்று சொல்லிவிட்டு சிவராசன் மற்றவர்களைக் காரில் ஏறச்சொல்லி கண் ஜாடை காட்டினார். அனைவரும் காரில் ஏறிக்கொள்ள, சிவராசன் டிக்கியைத் திறக்கச் செல்பவர் மாதிரி பின்புறமாகச் சென்று, ஒரு கணம் தாமதித்து, சடாரென்று காரைச் சுற்றி வந்து டிரைவர் சீட்டில் பாய்ந்து ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

இரண்டு காவலர்களில் ஒருவர் வயதானவர். இன்னொருவர் இளைஞர். கேட்டது இளைஞர்தான். வயதான காவலருக்கு அவர்களைப் பார்த்ததும் 'பிரயோஜனமில்லாதவர்கள்' என்று தோன்றிவிட்டிருக்கிறது. இளைஞருக்கு ஒரு முயற்சி செய்து பார்க்கும் ஆசை. அதனால்தான் அவர் டிக்கியைத் திறந்து காட்டச் சொல்லியிருக்கிறார்.

அந்த இளம் காவலர் விடாமல் வண்டியைத் துரத்தப் பார்க்க, அவர் கையை இழுத்துப் பிடித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு சிறிது தூரம் ஓடி, ஓரிடத்தில் கையை விட்டார் சிவராசன். அடி. பலத்த அடி. அதன் பிறகு சிவராசனுக்குக் கவலை வந்துவிட்டது. ஒரே வண்டியில் மொத்தமாக அனைவரும் செல்வது ஆபத்து. இன்னொரு வண்டி வேண்டும். அவசரம்.

விழுப்புரம் அருகே அவர்களுக்கு அந்த இன்னொரு வண்டி கிடைத்தது. யாரோ மூன்று பேர்
வெள்ளை வானில் சென்று கொண்டிருந்தார்கள். சிவராசன் அந்த வண்டியை வலுக்கட்டாயமாக நிறுத்தி, அவர்களைத் துப்பாக்கி முனையில் இறக்கிவிட்டு, அந்த வண்டியையும் எடுத்துக்கொண்டார். இரண்டு வண்டிகளில் அவர்கள் பிரிந்து ஏறி திருச்சிக்குச் சென்றார்கள். அங்கிருந்து மல்லிப்பட்டணம் சென்று ஒரு தோப்பில் தங்கியிருந்து மறுநாள் மாலை படகேறி வல்வெட்டித்துறைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே பொட்டு அம்மான் அவர்களை வரவேற்று, கட்டித்தழுவிப் பாராட்டினார்.

இது சின்ன சாந்தன் விவரித்த தகவல். இங்கே வேனைப் பறிகொடுத்த நபர் சென்னை கமிசனர் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டு புகார் அளித்திருக்கிறார். ஆயுதங்களுடன் வேனைக் கடத்திக்கொண்டு போகிறார்கள். திருச்சிக்குத் தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் துல்லியமாகத் தகவல் சொல்லியும் சிவராசன் குழுவினரை திருச்சி அடைவதற்கு முன்னாலோ, திருச்சியிலோ மடக்கிப் பிடிக்கவும் கைதுசெய்யவும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவே இல்லை.

அவர்கள் திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து மல்லிப்பட்டணம் போய், இரவு வரை காத்திருந்து படகு வந்து ஏறிச் செல்லும்வரை ஒரு நடவடிக்கையும் கிடையாது.

போகிறவர்களைப் பிடிக்க வேண்டாம் என்று மேலிடத்து வாய் வழி உத்தரவுகள் இருந்ததாகப் பின்னால் சொல்லப்பட்டது.

இந்த வழக்கை யாரும் கேட்டுக் கொள்ளாமலேயே சி.பி.ஐ. எடுத்துக்கொண்டிருக்கலாம். அதற்கான அதிகாரங்கள் எங்களுக்கு உண்டு. தவிரவும் ராஜீவ் படுகொலை வழக்குடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கு அது. ஆனால் மாநில பொலிஸ் மெத்தனம் காட்டுவதைக் கண்டு அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, இதனை சி.பி.ஐக்கு மாற்றச் சொல்லி சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு, மத்திய அரசுக்குக் கடிதமே எழுதிய பிறகும், ஏனோ ராஜீவ் கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரான கார்த்திகேயன் அதில் அப்போது ஆர்வம் செலுத்தவில்லை. வழக்கை இறுதிவரை கையில் எடுக்கவும் இல்லை. தமிழ்நாடு போலிசே விசாரிக்கட்டும் என்று சொல்லிவிட்டார். இதற்கான காரணம் எனக்குப் புரியவே இல்லை.

(மேலே தரப்பட்டுள்ள பத்திகள், ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்த சிறப்புப்
புலனாய்வுக்குழுவின் தலைமைப் புலனாய்வு அதிகாரி – சி.பி.ஐ. (ஓய்வு) கே.ரகோத்தமன் எழுதி வெளியிட்ட 'ராஜீவ் கொலை வழக்கு' என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளாகும். பத்மநாபாவும் அவரது உயர்மட்ட தோழர்களும் புலிகளால் சென்னையில் வைத்துக் கொல்லப்பட்ட போது, தமிழகத்தின் முதலமைச்சராக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமிழகத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி புலிகளின் மனித வெடிகுண்டால் மிலேச்சத்தனமான முறையில் கொல்லப்பட்ட போதும், கருணாநிதியே தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுப் குழுவின் தலைவராக புலிகளின் போசகரான எம்.ஜீஆரின் விசுவாசியான கார்த்திகேயனே இருந்தார் என்பதும் கவனத்துக்குரியது.

இந்த விடயங்கள் பத்மநாபா மற்றும் ராஜீவ் கொலையாளிகளான புலிகளுக்கு, தமிழகத்தில்
யார் யார் பின்னணியில் இருந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையான ஊகங்களைத் தொடர்ந்து
கிளப்பிய வண்ணம் உள்ளது) .

No comments:

Post a Comment