தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் முதலில் தங்களை இந்தியர்களாகவே கருதுகின்றனர்.
டாக்டர் சுப்ரமணிய சுவாமி
இலங்கையில், 2009 ம் ஆண்டு மே மாதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஒன்று இடம்பெற்றதை முழு உலகமும் அறிந்த உன்மை. புலிப் பயங்கரவாதத் தலைவர்கள் அன்று கொல்லப்பட்டமை பயங்கரவா தத்திற்கு எதிரான யுத்தத்தில் ஒரு மைல் கல் என முழு உலகமும் வரவேற்றது.
பேச்சுவார்த்தையின் மூலமான தீர்வுக்கும் யுத்த நிறுத்தத்திற்கும் வருமாறு பல உலக நாடுகள் கூறிய போதிலும் இராணுவ தீர்வு ஒன்றினை நோக்கிச் சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்று தசாப்தங்களாக இடம் பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இலங்கை இராணுவம் சாதித்த, உலகின் வரலாற்றுச் சாதனையான வெற்றியை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. . இராணுவத்தினரை தொடர்ந்து யுத்தத்தில் ஈடுபடுமாறும், வெற்றிக்கு பாடுபடுமாறும் ஜனாதிபதி ஊக்குவித்ததன் மூலமே இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. எனவே பயங்கரவாதத்தை தோற்கடித்த பெருமை, அதற்கு தேவையான அரசியல் தலைமையை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரியது.
பயங்கரவாதம் உலகில் பரந்து காணப்பட்ட நிலையில் புலிகளை இலங்கை அரசு தோற்கடித்ததை முழு உலகும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர் இந்த யுத்த வெற்றி உலக வரலாற்றில் மிக முக்கியமானது என்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஒன்றின் போது உயிர் இழப்புக்கள் ஏற்படுவது வழக்கமானது.
இதில் சில சந்தர்ப்பங்களில் அப்பாவி பொது மக்களும் கொல்லப்படலாம். ஆனால் அதனை வன்முறை என்றோ, மனித உரிமை என்றோ திட்டமிட்ட படு கொலை என்றோ கூற முடியாது. யுத்தத்தின் போது உயிரிழப்புக்கள் ஏற்படுவது வழக்கமான ஒரு விடயமாகும்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜெர்மனியிலும், ஹிரோஷிமா, நாகசாகியத்திலும் பொது மக்கள் கொல்லப்பட்டனர். இது பொது மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்ல. எதிரியின் மன உறுதியை தளர்த்தவும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவுமே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இலங்கையில் யுத்தத்தின்போது “0” பூச்சிய இழப்புக்கள் என்ற விடயத்தில் இலங்கை மிகவும் அக்கறை காட்டியது. இன்று யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதுடன் அவர்களது பிள்ளைகள் பலவந்தமாக புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்படுவ துமில்லை. மாறாக அவர்கள் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனநாயகத்துக்காகப் பாடுபட்ட தமிழ்த் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தது. தரை, வான் மற்றும் கடல் மார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு புலிகள் இயக்கம் பலம்பெற்றிருந்தது. இந்த பலம் இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.
ஆரம்ப காலத்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டு வந்தது. அத்துடன் அவ்வியக்கம் ஒப்பந்த அடிப்படையில் கொலைகளையும் செய்துள்ளது.
புலிகள் இயக்கத்தை முதலில் தடை செய்த நாடு இந்தியா. அதனை அடுத்து அமெரிக்காவும் புலிகளை தடை செய்தது. அதனை அடுத்தே கனடாவும், ஐரோப்பாவும் இந்த நடவடிக்கை மேற்கொண்டது என்றும் தெரிவித்தார்.
எனினும் இந்த இறுதி யுத்தத்தின் போது ஒரு தொகுதி தமிழ் மக்கள் நாட்டைவிட்டு இந்தியாவுக்கு சென்றனர். யுத்தம் தொடர்பாக இலங்கை அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொருட்டும் அதற்கு பொறுப்பானவர்களை இனம் காணும் வகையிலும் இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரில் உயர் மட்ட விசாரணை குழு வொன்றை அமைத்தது.
மேற்குறிய ஆணைக்குழு தனது அறிக்கையில் 135 பிரதான சிபாரிசுகளை செய்துள்ளது. இந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதி தனது செயலாளரான லலித் வீரதுங்கவின் தலைமையில் செயலணி ஒன்றை அமைத்துள்ளார்.
2013 ம் ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி சிபாரிசுகளில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய சிபாரிசுகள் இனங்காணப்பட்டுள்ளன. இதில் சில சிபாரிசுகள் இந்த வருட இறுதிக்குள்ளே நடைமுறைப்படுத் தப்படவுள்ளன.
மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம் பெற்ற சம்பவத்தையிட்டு இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக எந்த ஒரு முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை. இந் நிலையில் மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை.
இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தமையை விரும்பவில்லை. இந்தியாவின் இந்த தீர்மானத்தை எண்ணி வருந்துகின்றேன்.
அத்துடன், இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் எவையும் இலங்கை மீது தீர்வினைத் திணிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்துக்கு எதிரான இலங்கையின் வெற்றியைத் திசைத்திருப்ப பலர் முயற்சிக்கின்றனர். ஆனால், தமிழ் மக்கள் இந்த வெற்றியினால் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தை உணர்வுபூர்வமான அனுபவித்து வருகின்றார்கள். அவர்கள் தற்போதைய நிலைமையை எண்ணி மகிழ்கிறார்கள்.
ஆனால் இலங்கைப் படையினரின் யுத்த வெற்றியால் இன்று இலங்கையைப் போன்றே இந்தியாவும் புலிகளின் அச்சுறுத்தலின்றி சுதந்திரமாகச் செயற்படுகின்றது. தமிழர்களைப் போன்று சிங்களவர்களும் மிகவும் தைரியமாக இந்தியாவுக்கு வந்து செல்கின்ற நிலைமை இன்று உருவாகியுள்ளது' என்றார்.
இந்தியாவின் அதி உயர்ந்த விருதுக்கு ஏற்ற வகையில் இந்த யுத்த வெற்றி அமைந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மாநில மக்கள் புலிப் பயங்கரவாதிகளை நிராகரித்து வந்துள்ளனர் என்பதை ஒரு தமிழன் என்ற வகையிலும், ஒரு இந்தியன் என்ற வகையிலும் இதனை நான் கூறுகிறேன்.
தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் முதலில் தங்களை இந்தியர்களாகவே கருதுகின்றனர். அதன் பின்னரே அவர்களை தமிழர்கள் என்று கருதிக் கொள்கின்றனர்.
1991 ஜனவரியில் தமிழ் நாட்டின் தி. மு. க. அரசு இந்தியாவின் மத்திய அரசாங்கத்தினால் கலைக்கப்பட்ட போது மத்திய அரசின் சட்ட மற்றும் நீதி அமைச்சராக நான் இருந்ததால் இதனை நான் உறுதியாக கூற முடியும்.
தி. மு. க. அரசு கலைக்கப்பட்ட போது ஒரு வன்முறைச் சம்பவம் கூட இடம் பெறவில்லை என்பதை நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
நாட்டுப் பற்றுள்ள இந்தியர்களான எமக்கு தேசிய அக்கறையே முதலில் வருகிறது. இந்தியாவிலுள்ள நாம் சரித்திர பூர்வமாகவும், மத மற்றும் மொழி ரீதியாகவும் இலங்கை மக்களை வாழ்த்துகிறோம். அண்மைய மரபணு ஆய்வுகளின் போது இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் ஒரே மரபணுவே உள்ளது என தெரியவந்துள்ளது.
தமிழர்களும் சிங்களவர்களும் இரு வெவ்வேறு மொழிகளை பேசும் சமூகங்கள் ஆயினும் இன ரீதியில் வேறுபட்டவர்கள் அல்ல. நான் முன்னர் கூறியபடி இரு சமூகத்தினரும் ஒரே மரபணுவையே கொண்டுள்ளனர். இந்த இரு சமூகத்தினரும் இன ரீதியில் இந்தியர்கள் ஆவர். இந்தியாவிலுள்ள நாம் புத்தரை பிறப்பில் ஒரு இந்துவாகத்தான் பார்க்கின்றோம்.
கடந்த 10 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற இரண்டாவது இராணுவக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுப்ரமணியம் சுவாமி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை அரசியல் அமைப்பின் அடிப்படையில் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அது இலங்கை அரசுக்கும் சில நன்மைகளை ஏற்படுத்தும்.
இதேவேளை, ஒரு நண்பன், ஒரு அவதானி, என்ற வகையில் எட்டு ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகி ன்றேன். அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது உங்களது தீர்மானமாகும் என்றார்.
இலங்கையில் சிங்கள பெரும்பான் மையினருக்கும், தமிழ் சிறுபான்மையின ருக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்துவது அவசியம் என நான் கருதுகிறேன்.
சிங்கள பெரும்பான்மையினருக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய ஆலோசனைகள் என்ற அடிப்படையில் இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு அவர் 8 ஆலோசனைகள் இதன்போது முன்வைத்தார்.
அவரின் 8 ஆலோசனைகளும் பின்வருமாறு,
01. நல்லிணக்கத்துக்கான முன்மொழிவுகள் வெளியிலிருந்து திணிக்கப்பட முடியாது. இது பங்குதாரர்கள் யாவரினதும் பங்குபற்றலுடன் இலங்கையில் உருவாக வேண்டும். அத்துடன், இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் எவையும் இலங்கை மீது தீர்வினைத் திணிக்க முடியாது.
02. நாடாளுமன்றத்தில் ஓரளவு ஏற்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 13 பிளஸ் திருத்தத்தின் அடிப்படையில் இறு தீர்வுக்கான ஆலோசனைகள் அமைய வேண்டும்.
03. மாகாணங்களின் ஒன்றியமாக இலங்கை அமையும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணங்களுக்கும் தனித்தனியான அதிகாரங்கள் மற்றும் பொது அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.
04. இலங்கை அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையில் அமைய வேண்டும். ஒன்றியம், மாகாணம் ஒன்றின் அரசாங்கத்தைக் கலைக்கும் நிர்வாகத்தை பொறுப்பேற்கும் ஏற்பாடு இந்த அரசியலமைப்பில் இருக்க வேண்டும்.
05. பொது ஒழுங்கைப் பேணுவதற்கு மாகாண அரசாங்கத் தலைவரின் கீழ் மாகாண பொலிஸ் அமையும். ஆனால், ஒன்றியத்தின் அதாவது மத்திய அரசாங்கத்தின் கீழ் றிசேர்வ் பொலிஸும் ஆயுதப் படைகளும் இருக்கும்.
06. மத்திய அரசு அல்லது ஒன்றியம் விசேட மாவட்ட நீதவான்களை நியமிக்கும். இந்த நீதவான்களுக்கு மாகாணங்களின் நீதவான் வழங்கிய தீர்ப்புக்களை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் இருக்கும். இவ்வாறாக புதிய அரசியலமைப்பில் நீதித்துறை அமையும்.
07. இலங்கை அரசு சமய சார்பற்றதாக இருக்கும். இலங்கை பௌத்த நாடாயினும் சகல சமயங்களையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்.
08. தமிழ், சிங்கள சமுதாயங்கள் ஓரின பரம்பரை அடியிலிருந்து தோன்றியவர்கள். வரலாறு, கலாசாரத்தால் இணைந்தவர்கள். இரு மொழி எழுத்துக்களும் பிராமி அடிப்படையிலானவை. சுமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளின் பொதுப் பாரம்பரியங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே காணப்படுகின்றன.
எனவே,தமிழர்களை சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள இடங்களிலும் சிங்களவர்களை தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களிலும் குடியேற்ற வேண்டும். இதை அரசாங்கம் ஊக்குவிப்புக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளால் ஊக்குவிக்க வேண்டும். நிச்சயமாக இதில் அரசாங்கத்தின் நெருக்குவாரம் இருக்கக்கூடாது.
அரசியலமைப்பின் 13 பிளஸ் திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மேலும் தெரிவித்தார்.
நன்றி விடிவு
0 comments :
Post a Comment