Sunday, August 26, 2012

கருணா பிள்ளையானை அமைச்சர்களாக்கி அப்பாவிகளை அடித்து கொல்கின்றீர்கள். இது நியாயமா? ஜேவிபி

கருணா பிள்ளையான் போன்ற புலிகளின் முக்கியஸ்தர்களை அமைச்சர்களாக்கி அவர்களால் தவறாக வழிநடத்தப்பட்ட அப்பாவிகளை அப்பாவி இளைஞர்களை சிறையில் இன்னும் அடைத்துவைத்து அடித்து கொல்கின்றீர்கள். இது நியாயமா? என ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் பாராளுமன்றில் பேசுகையில்:

2002 ல் தங்காலைச் சிறையில் ஜூலம்பிட்டி அமர குழப்பம் விளைவித்த போது அவரைச் சித்திரவதை செய்யவில்லை, எஸ்ரிஎவ் போய் அடித்து நொறுக்க விலை, சுட்டுக் கொல்லவில்லை . ஆனால், அவனோடு பேச்சுவார்த்தை நடாத்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் (மகிந்த ராஜபக்ஷ) சென்றார்.

வவுனியாவுல் நடந்தது இதே மாதிரி சம்பவந்தான். இது மாதிரி வெலிக்கடையிலும் நடக்கும், மகர சிறையிலும் நடக்கும். இது சாதாரணமாக சிறைகளில் நடக்கும் விடயங்கள். ஆனால், நீங்கள் அடித்து நொருக்கினீர்கள்.

விசேட சிறைகள் நான்கை வவுனியாவிலும், அனுராதபுத்திலும் அமைத்து நான்கே மாதங்களில, இல்லை ஒரே மாதத்தில் விசாரணையை முடித்து விடுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். என்ன நடந்தது ? விசாரணையை முடித்தீர்களா இல்லை. இது இந்தியாவுக்குக் கொடுத்த பொய் வாக்குறுதி. இந்த வாக்குறுதியை இலங்கை மக்களுக்குக் கொடுக்க வில்லை.

ஆனால், கடைசியில் வவுனியாவில் 2009 ல் கைது செய்யப்பட்ட 29 வயது நிமலரூபனையும், 39 வயது டில்ருக்சனைகயும் அடித்து கொன்றீர்கள். கருணா, பிள்ளையான் போன்ற பயங்கரவாதிகளை அமைச்சராக வைத்துக்கொண்டு சாதாரண இலைஞர்களை அடித்துக் கொல்கிறீர்கள். அரசியலமைப்பின் 3 ம் அத்தியாயம் 11 ம் பிரிவு கூறுகின்றது மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சித்திரவதைகள் செய்யக் கூடாது என்று. சிறைக்கைதிகளும் மனிதர்களே என்று சொல்லிக் கொண்டு வெலிக்கடையில் தமிழர்களைக் கொன்றீர்கள். இத்தகைய செயல்களால் தமிழர்களின் பொதுச் சிந்தனையையே அழித்துவிட்டீர்கள். அது பரம்பரைக்கும் மாறாமல் இருந்து வரும்.

இருவரைக் கொலை செய்தது அயிரக்கணக்கான தமிழர்களைப் பாதித்திருக்கின்றது. இது சில ஆண்டுகளில் வெடித்து எழலாம். இத்தகைய செயல்களைச் செய்து விட்டு அமெரிக்கா, கிளின்டன், நவநீதம்பிள்ளை, இப்ராகீம் என்று எல்லோரிடமும் போய் மண்டியிடுகிறீர்கள். டெசோவுக்கு போசனை அளிப்பது நீங்கள்தான். நீங்கள்தான் டெசோவுக்கு பாதை வெட்டிக் கொடுத்தீர்கள்.

நிமலரூபன், டில்ருக்சன் கொலைபற்றி சரியாக விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தீர்களா ? இல்லை. இனி நவநீதம்பிள்ளை நவம்பர் மாதம் நடைபெறும் மாநாட்டில், அன்று 22 வது மாநாட்டில் தீர்மானம் செய்தபடி புதிய குழுவை அமைத்து விசாரணை செய்யப்போகிறார். நீங்கள் செய்கின்ற தவறுகள் காரணமாக இவை நடக்கின்றன. 1956 ல் செய்தீர்கள், 83 ல் கறுப்பு ஜூலை நடத்தினீர்கள். இதனால், இன, மத வேறுபாடு இல்லாமல் 30 ஆண்டுகள் நாட்டில் எல்லா மக்களும் கஷ்டப்பட்டார்கள்.

கடந்த காலத்தை மறக்கச் சொல்கிறார் வெளிநாட்டமைச்சர். கடந்த காலத்தை மறக்க வேண்டும் என்றால் அரசியல் கைதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.செய்தீர்களா ? கருணா, பிள்ளையானுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுத்து விட்டு அவர்களால் தவறாக வழிநடத்திச் செல்லப்பட்ட சாராரண இளைஞர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள். இதனால் எப்படி தேசிய ஒற்றுமை ஏற்படும் ?

இரண்டு கொலைகளுக்கும் காரணமானவர்களைக் கண்டுபிடித்து தராதரம் பார்க்காது அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குங்கள். அப்படி இதுவரை செய்யவில்லை.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இலங்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத அசம்பாவிதம் ஒன்று இடம்பெறுகின்றபோது அது தொடர்பாக இனவாதிகள் என புலிகளாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கின்ற ஜேவிபி யினராலேயே பாராளுமன்றில் குரல் எழுப்பப்பட்டிருக்கின்றது. ஆனால் தமிழ் தலைவர்கள் எனத் தம்மை கூறிக்கொள்வோர் பிரேதங்களின் பின்னால் சென்று படங்களைப்பிடித்து ஊடகங்களுக்கு கொடுத்து சுயவிளம்பரம் செய்து கொண்டார்களே தவிர அதற்காக நீதி கோரவேண்டிய இடத்தில் மௌனம் சாதிக்கின்றனர்.

தமிழ் மக்களின் அவலங்களில் குளிர்காய்வதே தமிழ் அரசியல் தலைமைகளின் வரலாறாக இருந்து வந்துள்ளது. அவ்வாறே மேற்படி இரு கொலைகளும் இன்று கிழக்கு தேர்தலில் வாக்கு வசூலிப்புக்கான பேசுபொருளாக அமைந்துள்ளது. ஆனால் இவ்விடயத்திற்கு நீதிகோரும் எந்தச் செய்பாட்டினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை.

No comments:

Post a Comment