இள, ஈழ, ஹெல, சிஹல, எழு, சிங்கல எல்லாம் ஈழம்தான்
´´ஈழம்´´ என்னும் சொல் பண்டைய சங்க இலக்கியங்களிலேயே பயன்படுத்தப்படுள்ளது என்றும் ஈழத்து பூதந்தேவனார் என்பவர் பெயரில் பல பாடல்கள் கூட சங்க இலக்கியங்களில் இடம்பெறுவதாகவும் தமிழறிஞர் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் தெரிவித்துள்ளார்.
டெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல்லின் பயன்பாட்டை தவிர்க்கலாம் என்று இந்திய அரசாங்கம் அறிவுரை வழங்கியுள்ளமை உட்பட கடந்த சில தசாப்தங்களாக பல இடங்களிலும் ஈழம் என்ற சொல் ஒரு சர்ச்சைக்குரிய சொல்லாகக் கருதப்பட்டு வந்த நிலையிலே, இந்த சொல்லின் பழமை, பயன்பாடு, பொருள் ஆகியவை குறித்து நுஃமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், இந்த ஈழம் என்ற சொல்லை ஒரு திராவிட மொழிச் சொல்லாக கருதமுடியுமா என்பது கேள்விக்குரியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். திராவிட மொழிகளின் சொற்பிறப்பு அகராதியில் இந்த ஈழம் என்ற சொல் கிடையாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி ஈழம் என்ற சொல் பாளி மொழியில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுவதாக அவர் தெரிவித்தார்.
கிறிஸ்துவுக்கு முந்தைய பிராமிக் கல்வெட்டுக்களிலே இள, ஈழ, ஹெல, சிஹல, எழு, சிங்கல ஆகிய சொற்களின் பொருள் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் பெயர்களாக பல்வேறு மொழிகளிலே வழங்கி வந்தவையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வீரமாமுனிவர் கூட ஈழம் என்பதை சிங்களவரின் தேசம் என்றுதான் குறிப்பிட்டுள்ளதாகவும் நுஃமான் தெரிவித்தார்.
முழு இலங்கையையும் குறிக்கும் பொருளைக்கொண்டதாக இருந்த இந்த ஈழம் என்ற வார்த்தை, தமிழ் பிரிவினை போராட்டம் ஆரம்பித்த பின்னர்தான் சர்ச்சைக்குரிய தமிழீழ பிரதேசத்தை குறிப்பதாக கருதப்படத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயினும் பொதுவாக எழுத்தாளர்கள் இன்னமும் இந்த ஈழம் என்ற சொல்லை இலங்கை என்ற நாட்டைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment