Monday, August 6, 2012

யப்பானை தகர்த்த அமெரிக்காவின் லிட்டில் பாய்! இன்றுடன் 67 ஆண்டுகள் நிறைவு (படங்கள்)

உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி இன்றுடன் 67 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி காலை வழக்கம் போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா பரபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், காலை 8.15 மணிக்கு 'எனோலாகே' என்ற விமானம் "லிட்டில் பாய்" என்ற அணுகுண்டை ஹிரோஷிமா நகரத்தின் நடுப்பகுதியில் வீசியது அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரித்தன.

உடனடியாக 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது, கட்டங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

உடனே ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம், ஹிரோஷிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை தொடர்பு கொள்ள முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்து வர பணிக்கப்பட்டார்.

அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பின்னும்; ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது, அவரும் அந்த விமானத்தின் பைலட்டும், வான மண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகு தான்உலகத்திற்கே இந்த கொடுமை பற்றி தெரிய வந்தது.

ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. அதன் பின் 1950ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆய்வறிக்கையின் மூலம், அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது தெரியவந்தது.

இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும், சேதமும் இன்று வரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே இதனை சொல்ல முடியும். சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் சாவின் விளிம்பில் உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ஆனால் அமெரிக்கா, இந்த அணு குண்டு வீச்சினால் தான் இரண்டாம் உலக போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணு குண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமல் இருந்திருந்தால் இரண்டாம் உலக போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன் மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டதாக அமெரிக்கா தங்களது செயலை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது. அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை என்று ஜப்பான் தன்நிலையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து, செப்டம்பர் 2ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் தான் இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் கதிர்வீச்சின் தாக்கத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன. இவ்வாறான பேரழிவை சந்தித்த பின்னரும் ஜப்பான் உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் தான் திகழ்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

















0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com