Tuesday, August 21, 2012

நாட்டின் 5 இடங்களில் அணு முன்னெச்சரிக்கை சமிக்ஞை தொகுதிகள் ஏற்படுத்த நடவடிக்கை.

இலங்கைக்கு எவ்விதத்திலேனும் அணு ரீதியிலான அழுத்தங்களோ, அணு கதிர் வீச்சு தாக்கங்களோ ஏற்பட்டால், அதற்கு பதிலளிக்கும் வகையில் அணு முன்னெ ச்சரிக்கை சமிக்ஞை தொகுதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அணு சக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கூடன்குளம் அணு உலையின் செயற்பாடுகள் அடுத்த மாதம் ஆரம்பமாவதனால், அதன் தாக்கங்கள் தற்செயலாகவேனும் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை சமிக்ஞை தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அணு சக்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக சர்வதேச அணு சக்தி பிரதிநிதிகள் நிறுவனத்தினால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான 8 முன்னெச்சரிக்கை சமிக்ஞை தொகுதிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவை அணு சக்தி அதிகார சபை இடர் முகாமைத்துவ மையம், இலங்கை கடற்படை, ஆகியவற்றில் ஏற்படுத்தப்படுவதாகவும், இது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாகவும், அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப நாட்டை சூழவுள்ள 6 கடற்படை முகாம்கள், மேல் மாகாணம், மத்திய மாகாணத்தின் கண்டியிலும் இந்த அணு முன்னெச்சரிக்கை சமிக்ஞை தொகுதிகள் ஏற்படுத்தப்படும் எனவும், இதன் பிரதான கட்டுப்பாட்டு மையம் ஒருகொடவத்தை இலங்கை அணு சக்தி அதிகார சபையில் அமையப் பெற்றுள்ளதெனவும், அதிகார சபை தெரிவித்துள்ளது

இனங்காணப்பட்ட 5 கதிர்வீச்சு கணீப்பீட்டு கருவிகளை பொருத்தும் பணிகள் அண்மையில் இடம்பெற்றுள்ளதுடன், ஒருகொடவத்தைக்கு மேலதிகமாக புத்தளம் லக்விஜய, அனல் மின்உற்பத்தி நிலையம், தலைமன்னார் ஊருமலைப்பகுதி, யாழ் நெடுந்தீவு, காங்கேசன்துறை கடற்படை முகாம் ஆகிய இடங்களில் இந்த சமிக்ஞை தொகுதிகள் ஏற்படுத்தப்படும் எனவும், 24 மணித்தியாலமும் செயற்படும் இந்த சேவை பிரதான கட்டுப்பாட்டு தொகுதி தொலைபேசி தொகுதியுடன் தொடர்புபடுமென அணு சக்தி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி அனுருத்த ஜெயலத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment