பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்றிட்டத்தில் எந்தவித அரசியல் பாரபட்சமும் காட்டப்பட வில்லையெனவும், ஜனாதிபதியின் ஆலோனைக்கு அமைய 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் செயற்திட்டம் அமைச்சரவையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டதற்கிணங்க, 42 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துளளார்
2005 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதன்முறையாக பெரும் எண்ணிக்கையான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது எனவும், 2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சியிலிருந்தபோது ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி வீதியிலிறங்கிப் போராடினர். அப்போது பொலிஸாரைவிட்டு துரத்தியடித்தவர்கள் தற்போது பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க எமது அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் குழப்ப முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு வழங்கும் செயற்றிட்டத்தில் கட்சி பேதம் பார்ப்பதாகவும், பாரபட்சம் பார்த்தே வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இவர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்று முழுதும் போலியானவை என்றும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment