சுட்டுத் தள்ளப்பட்ட துருக்கிய ஜெட் விமானம், சிரியாவிற்கு எதிரான புதிய ஆத்திரமூட்டல்களுக்கு போலிக் காரணமாகிறது.
சிரியாவின் வான் பகுதியில் நுழைந்த ஒரு துருக்கிய F4 Phantom ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர், அமெரிக்க தலைமையிலான பிரதான சக்திகள் தொடர்ச்சியாக யுத்த அபாய அறிக்கைகளையும், அச்சுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளன. ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன் துருக்கிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது பரந்த யுத்தம் எனும் திசையில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு பிரதான முன்னெடுப்பைக் குறிக்கிறது.
ஓர் அச்சுறுத்தலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையின் மீது உறுப்பு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தையை அனுமதிக்கும், கூட்டு மாநாட்டிற்கான விதிமுறை 4 இன் கீழ் அழைக்கப்பட்டுள்ள ஒரு கூட்டத்தில், நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகள் இன்று கூட இருக்கின்றனர்.
அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளின் இராணுவ நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் விதிமுறை 5இன் கீழ் இக்கூட்டம் நடைபெறவில்லை என்றாலும், விதிமுறை 5ஐ பரிசீலிக்க துருக்கி கூட்டத்தில் நேட்டோவிற்கு அழுத்தமளிக்குமென திங்களன்று அது குறிப்பிட்டது. பெப்ரவரி 2003இல்—அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்—ஈராக்கிற்கு எதிராக விதிமுறை 4ஐ பயன்படுத்தியதற்குப் பின்னர், இப்போது தான் அதேபோன்று முதல்முறையாக மீண்டும் செய்யப்பட்டிருக்கிறது.
வாரயிறுதி வாக்கில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், துருக்கி தொடக்கத்திலிருந்த அதன் நிதானமான தொனியிலிருந்து மாறியது. “இதுவொரு யுத்த நடவடிக்கையாகும்,” என்று வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தி தொடர்பாளர் செல்கக் உலால் திங்களன்று தெரிவித்தார். துணை பிரதம மந்திரி புலென்ட் அரின்க் கூறுகையில், “சர்வதேச சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் இறுதி வரை துருக்கி பயன்படுத்தும். இதில் சுய-பாதுகாப்பும் உள்ளடங்கும். பலவகைப் பதிலடிகளும் உள்ளடங்கும்,” என்று சேர்த்து கொண்டார்.
திரைக்குப் பின்னால், அமெரிக்கா பலமுறையும் சோதிக்கப்பட்ட ஒரு வழக்கமான செயல்முறையைப் பயன்படுத்துகிறது: அதாவது, யுத்த நடவடிக்கைகளுக்கு ஒப்பான பல ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பின்னர் எந்தவொரு விடையிறுப்பிற்கும் தீவிர முரட்டுத்தனத்துடன் விடையளித்து, இன்னும் அதிகப்படியாக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நியாயப்படுத்த அதை பயன்படுத்துவது.
பல வளைகுடா முடியரசுகளின் உதவியுடன் ஆயுதங்களை வழங்கி, பல மாதங்களாக, அமெரிக்கா சிரியாவில் உள்நாட்டு போரைத் தூண்டி விடுவதில் ஈடுபட்டுள்ளது. வார இறுதியில் அமெரிக்காவின் ஒப்புதலுடன் சவுதி அரேபியா, எதிர்ப்பு சுதந்திர சிரிய இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு ஊதியங்களை (ஊதியம் டாலர்களில் அல்லது யூரோக்களில் கொடுக்கப்படும்) அளிக்க போவதாக அறிவித்தது. இது நடைமுறையில் பஷர் அல்-அசத்தின் சிரிய அரசாங்கத்திற்கு எதிராக போரிடும் எவரொருவருக்கும் மறைமுகமாக நிதியளிப்பதாகும்.
ஒரு சிறந்த நேர்த்தியான போராடும் அமைப்பாக கொண்டு வருவதில் எதிர்ப்பு சக்திகளை ஒன்றுதிரட்ட உதவுவது அமெரிக்க கொள்கையாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் பகிரங்கமாகவே அறிவித்தார். இந்த அமைப்பில் சிரியாவில் உள்ள ஷியைட் மற்றும் அலாவைட் சமூகங்களுக்கு எதிரான படுகொலைகளை நடத்திய மற்றும் சிரிய அரசு அமைப்புகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய போராளிகள் சக்திகளும் உள்ளடங்கும். நன்கு-ஆயுதமேந்திய ஒரு எதிர்ப்புக்கு எதிராக மோதல் ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் திரும்பியுள்ளது என்று ஒரு சமிக்ஞை காட்டும் அளவிற்கு சென்றுள்ள சிரியா, வாரயிறுதி வாக்கில் இராணுவத்தின் 112 உயிரிழந்த உறுப்பினர்களை புதைத்ததாக அறிவித்தது.
மத்தியகிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் மீது அமெரிக்கா அதன் கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கு, ஒரு காரணம் மாற்றி வெறொரு காரணத்திற்காக, ஓர் இடையூறாக விளங்கும் அரசாங்கங்களுக்கு குழிபறிக்கும் அல்லது தூக்கியெறியும் ஒரு பிரச்சாரத்தின் சமீபத்திய இலக்காக சிரியா உள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா ஆகியவற்றிற்கு எதிரான யுத்தங்களுக்கு தலைமை ஏற்றிருந்த அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் யேமனில் ஆளில்லா விமான ஏவுகணைகளை பொழிந்துள்ளது. அதே நேரத்தில், ஈரானிற்கு எதிரான சதிவேலைகள் மற்றும் இணையவழி யுத்தமுறையின் ஒரு இரகசிய திட்டத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அது ஈடுபட்டுள்ளது.
இந்நிலைமைகளின் கீழ், ஜெட்டை வீழ்த்தியமைக்கு அமெரிக்காவின் விடையிறுப்பானது அமெரிக்க வெளியுறவு கொள்கையில் நிறைந்திருக்கும் கூறுபாடுகளான எரிச்சலூட்டும் பாசாங்குத்தனம் மற்றும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது. “சர்வதேச விதிமுறைகள், மனித உயிர்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பொறுப்பின்றி புறக்கணிக்கும் சிரிய அதிகாரிகளின் மற்றுமொரு பிரதிபலிப்பாக அது உள்ளது,” என்று அறிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அந்த நடவடிக்கை "திமிர்தனமானதும், ஏற்க முடியாததும் ஆகும்,” என்று கூறினார்.
சுட்டு வீழ்த்திய இந்த சம்பவம், “மூர்க்கத்தனமானது” என்று அறிவித்த பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக், ஐ.நா. சபையில் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். ஏனைய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளும் மிகுந்த எச்சரிக்கையோடு பிரதிபலிப்பு காட்டின, ஆனால் சிரிய ஆட்சியின் மீது கூடுதல் தடைகளை விதித்துள்ளன.
உண்மையில், அந்த சம்பவம் குறித்த விபரங்கள் இதுவரையில் குழப்பமாகவும், சச்சரவிற்கு உட்பட்டும் உள்ளன. துருக்கியின் நோக்கம் மற்றும் அந்த போர் விமானம் இருந்த இடம் குறித்த துருக்கியின் அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது அது சிரிய விமான எல்லையில் இருந்தது என்ற அதன் குற்றச்சாட்டை சிரிய அரசாங்கம் மீண்டும் திங்களன்று வலியுறுத்தியது. “விமானம் மறைந்து போய், பின்னர் சிரிய வான்பகுதியில் மீண்டும் தோன்றியது. அது 100 மீட்டர்கள் உயரத்தில் கிட்டத்தட்ட சிரியக் கடலோரத்தில் இருந்து 1-2 கி.மீ. [0.6-12 மைல்கள்] தூரத்தில் பறந்து கொண்டிருந்தது,” என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜிகட் மக்டிசி கூறினார். “நாங்கள் உடனே செயல்பட வேண்டியிருந்தது; அந்த விமானம் சிரியாவினுடையதாக இருந்திருந்தாலும் கூட நாங்கள் அதை சுட்டு வீழ்த்தி இருப்போம்,” என்றார்.
விமானம் சிரிய கடலோரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற எதிர்கூற்றுக்களை மறுத்த மகிசி, அது ஒரு விமான-எதிர்ப்பு இயந்திர துப்பாக்கியைப் பயன்படுத்தி வீழ்த்தப்பட்டது என்றும், அதன் அதிகப்பட்ச ஆற்றலே 1.2 கி.மீ. தான் என்றும் தெரிவித்தார். ஒரு நீண்டதூர ஏவுகணை அல்ல வெறுமனே இயந்திர-துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டது என்பதை சேதங்களில் இருந்தே சிரியாவால் உறுதிப்படுத்த முடியும் என்று மகிசி கூறினார்.
துருக்கி அதன் ஆரம்ப விடையிறுப்பில், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது சிரிய வான்பகுதியில் இருந்ததாகவும், ஆனால் பின்னர் அது சிரிய கடற்பகுதியிலிருந்து ஏறத்தாழ 13 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள் மூழ்கியதாகவும் ஒப்புக் கொண்டது போல் தோன்றியது. சர்வதேச புள்ளிவிபரங்களின்படி, சிரியாவின் நிலப்பகுதி கடலோரத்திலிருந்து 12 நாடிகல் மைல்கள் (ஏறத்தாழ 22 கிலோமீட்டர்) விரிந்துள்ளது. ஆனால் பின்னர் துருக்கி, அந்த விமானம் உண்மையில் கடலோரத்திலிருந்து 13 நாடிகல் மைல்கள் (ஏறத்தாழ 24 கிலோமீட்டர்) இருந்ததாக அறிவித்தது.
ஜெட் மிக குறுகிய காலத்திற்கே சிரிய வான்பகுதியில் இருந்ததாகவும், அது சிரியாவிலிருந்து "வேறொரு திசையில்" சென்று கொண்டிருந்த போது, ஒரு ஏவுகணையால் 15 நிமிடங்களுக்குப் பின்னர் சுட்டு தள்ளப்பட்டதாகவும், இப்போது துருக்கி வாதிடுகிறது. எவ்வாறிருந்த போதினும், துருக்கியின் கூற்றுப்படியே, அந்த ஜெட் சுட்டுவீழ்த்தப்பட்ட போது சிரிய வான்பகுதியில் இருந்துள்ளது. இந்த 15 நிமிடத்தின் பெரும்பகுதியில், அது "வேறோர் திசையில்" பயணிக்காமல், எல்லைக்கு மிக நெருக்கமாக பயணித்திருக்கிறது என்பதையே குறைந்தபட்சம் இது அர்த்தப்படுத்துகிறது.
அனைத்திற்கும் மேலாக, சம்பவத்தைக் குறித்த சிரியாவின் கருத்துக்களை உறுதிபடுத்தும் விதமாக, போர் விமானத்தின் சேதார பாகங்கள் சிரிய நீர்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக துருக்கி செய்தி ஊடகத்தின் ஆரம்ப அறிக்கைகள் அறிவித்தன. உண்மையில், விமானம் சிரிய நீர்ப்பகுதியில் விழுந்து நொறுங்கியது என்பதை துருக்கி தொடர்ந்து ஒப்புக் கொள்கிறது. சிரிய விமான எல்லைக்கு 2 கிலோமீட்டர் வெளியில் சிரியாவிலிருந்து விலகி பயணித்து கொண்டிருந்த ஒரு விமானம் எவ்வாறு சிரிய நீர்பகுதியில் தாக்கப்பட்டது என்பது தான் புரியவில்லை.
ஜெட் பறந்து சென்றதன் நோக்கமும் தெளிவாக இல்லை. துருக்கியின் ராடர் ஒன்றைச அது பரிசோதித்து கொண்டிருந்ததாக துருக்கி கூறுகிறது. சமீபத்தில் ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட அதன் ராடார் அமைப்புமுறை உட்பட சிரிய விமான பாதுகாப்பு அமைப்புமுறையை அது பரிசோதிக்க விரும்பியதே ஏற்கத்தக்க ஒரு விளக்கமாகும் என்று பல விமர்சகர்களும் கூறுகின்றனர். சிரியாவிற்குள் நடக்கும் எந்தவொரு அன்னிய இராணுவ ஊடுருவலும், இத்தகைய கருவிகளைக் கையாள வேண்டியுள்ளது. விமான பாதுகாப்பு கருவிகளும் கூட எதிர்ப்பு சக்திகளை ஆயுத உதவி அளித்தல் மற்றும் கண்காணிப்பு உதவிகளைத் தடுக்கின்றன.
“பல்வேறு திரைகளுக்குப் பின்னால் பலரும் பங்கு பெற்றிருப்பதோடு சேர்ந்து அப்பிராந்தியத்தில் நிறைய 'சந்தேகத்திற்குரிய' தந்திரோபாயங்கள் மற்றும் மூலோபாயங்கள் நடந்து வருகின்றன என்பதையே இவையனைத்தும் நமக்கு விளங்கப்படுத்துகின்றன,” என்று அமெரிக்க கடற்படை யுத்த கல்லூரியில் மத்தியகிழக்கு ஆய்விற்கான ஒரு பேராசிரியர் ராய்டரிடம் தெரிவித்தார். “கொடுக்கப்பட்ட இத்தகைய சூழ்நிலைகளில், சிரிய இராணுவம் துடிப்போடு இருப்பதற்கு காரணம் இருக்கிறது,” என்றார்.
இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் சிரியாவில் ஜெட் விமானங்கள் ஊடுறுவிய பின்னர் அது அதன் விமான பாதுகாப்பு கருவிமுறைகளை மேம்படுத்தியது. முதன்முதலில், 2006இல், காஜாவிற்கு எதிரான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான யுத்தத்திற்கு முன்னர், ஆசாத்தின் கோடைகால மாளிகை மீது நான்கு இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் பறந்தன. பின்னர் செப்டம்பர் 2007இல், துருக்கிய எல்லையோரத்திற்கு அண்மையில் இருந்த அணுசக்தி நிலையம் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்றிற்கு எதிராக எவ்வித புறத்தூண்டலும் இல்லாமல் இஸ்ரேல் ஒரு குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது.
எதிர்ப்பு சக்திகளுக்கு ஆயுதங்கள் அளித்தல் மற்றும் அவர்களுக்கு இடமளித்தல் உட்பட, துருக்கி ஆசாத் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளில் அதனோடு இணைந்து ஏற்கனவே மிக நெருக்கமாக வேலை செய்து வருகிறது. சிரிய எல்லைக்கு வெகு அருகே அது கணிசமான இராணுவப் படைகளையும் நகர்த்தியுள்ளது.
ஜெட் வீழ்த்தப்பட்டதற்கு காட்டப்படும் எந்தவொரு விடையிறுப்பும், பின்னர் கூடுதலான ஆக்கிரோஷ நடவடிக்கைகளுக்கு தளமாகிவிடும். “துருக்கி உடனே இராணுவரீதியாக பதிலளிக்கும் என்பது என்னுடைய கருத்தல்ல,” என்று இஸ்தான்புல்லில் இருக்கும் காலடசாய் பல்கலைகழகத்தின் பெரில் டெடியோக்லூ கருத்து தெரிவித்தார். “ஆனால் மற்றொரு நடவடிக்கை வந்தால், நிச்சயமாக இராணுவ விடையிறுப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை,” என்றார்.
2003இல் என்ன நடந்ததோ அவ்வாறே, நேட்டோ அளித்த விமானங்களோடு துருக்கியின் வான் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு விமானங்களை வலுப்படுத்துவதே இன்றைய நேட்டோ கூட்டத்திலிருந்து வரக்கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கும். அந்த விமானங்கள் பெப்ரவரியில் நிலைநிறுத்தப்பட்டன; ஈராக் படையெடுப்பிற்கு ஒரு மாதகாலத்திற்கு பின்னர், மே மாத தொடக்கம் முழுவதிலும் அது அங்கேயே நின்றிருந்தது.
இறுதியாக சிரிய வான் பாதுகாப்பின் மீது குண்டுத் தாக்குதலை நியாயப்படுத்தும் நோக்கத்தோடு, நேட்டோ விமானங்களைப் பயன்படுத்துவது இன்னும் கூடுதலான ஆத்திரமூட்டல்களை நடத்துவதற்கான அடித்தளமாக எளிதாக மாறிவிடக்கூடும்.
No comments:
Post a Comment