அமெரிக்க செய்மதிப்படங்கள் உண்மைக்கு புறம்பானவை. பாதுகாப்பு செயலர்.
அமெரிக்காவின் செய்மதி நிறுவனம் ஒன்று வன்னிப்பிரதேசத்தில் பதிவு செய்துகொண்டுள்ள சில புகைப்படங்களில் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதைக்கப்பட்ட தற்கு ஆதாரமாக, மூன்று புதைகுழிப் பிரதேசங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர்.
இத்தகவல்கள் முற்றிலும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார். தியத்தலாவவில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர் இவை பொதுமக்களின் புதைகுழிகளே அல்ல என்றும் விடுதலைப் புலிகளின் புதைகுழிகள் என்றும் கூறியுள்ளார்.
'மனிதாபிமான நடவடிக்கையின் போது முல்லைத்தீவில், விரிவாக்கப்பட்ட இந்த மூன்று புதைகுழிப் பகுதிகளில் ஒன்றில் அதிகபட்சமாக 1346 புதைகுழிகள் காணப்படுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான இடுகாடு என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு இடத்தில் 960 புதைகுழிகள் காணப்படுகின்றன.
இவற்றையும் இணைத்து இறுதிக்கட்டப் போரில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கற்பனையில் செய்யப்பட்டு, மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன' என்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment