Wednesday, July 25, 2012

கிழக்கில் வெட்கமில்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றார்களாம்.

இணைந்த வடக்குக் கிழக்கே எமது இலக்கு, ஆகவே கிழக்கு மாகாண சபையையும், கிழக்கு மாகாணத் தேர்தலையும் நாம் புறக்கணிக்கின்றோம், என்று அறிக்கையிட்டு 2008ல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை புறக்கணித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது துளியளவும் வெட்கமின்றி ஏனின்று எமது மாகாணத்தில், தேர்தலில் போட்டியிடுகின்றது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.சந்திரகாந்தன் கேள்வி எழுப்பினார்.

நேற்று மாலை வாகரை கண்டலடி காளி கோயில் முன்றலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரு.நா.திரவியம் தலைமையில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் கூட்டத்திலேயே கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில, முஸ்லீம் முதலமைச்சர் ஒருவர் வந்தாலும் கூடப் பரவாயில்லை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆட்சியமைக்கக் கூடாது என்றும் ஆளுங் கட்சியில் போட்டியிடும் எந்தத் தமிழனும் முதலமைச்சராக வரக் கூடாது என்றும் சம்பந்தன் கூறியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் எமது தேசியக் கொடி, புலிக் கொடி என்று கூற முடியுமா? தமிழீழம் வேண்டுமென இளைஞர்களின் உணர்வினைத் தூண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் எவருடைய பிள்ளைகளாவது ஆயுதமேந்திப் போராடியிருக்கிறார்களா? சிங்கள அமைச்சர்களின் பிள்ளைகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களது பிள்ளைகளும் கொழும்பில் பிரபல்யமான பாடசாலைகளில் ஒன்றாகவே கல்வி கற்கின்றனர்.

1987ல் மாகாண சபை முறைமையை கொண்டு வந்த இராஜீவ்காந்தி போராளிகளைப் பொலிஸ், இராணுவத்தில் இணையுங்கள் என்று கேட்டிருந்தார். மாகாண சபைத் தீர்வை அன்று முற்றாகவே புறக்கணித்து முள்ளி வாய்க்கால் வரை எமது மக்களை அழைத்துச் சென்று புதை குழிகளில் தள்ளி விட்ட பின்னர் தற்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றார்கள் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

62 வருடமாக வாக்களித்து எம்மால் எதையுமே சாதிக்க இயலவில்லை. ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலில் சரியான முறையில் வாக்களித்து நாம் பெற்றுக் கொண்ட அபிவிருத்திகள் எல்லோரும் அறிந்தவை.

உலக வங்கி அறிக்கையினைப் புரட்டிப் பார்த்தால் அபிவிருத்தி, முன்னேற்றம் பற்றி தெட்டத் தெளிவாகத் தெரியும். இருந்தும் மெத்தப் படித்த கூட்டமைப்பினர் என்றுமே அது பற்றி வாய் திறக்க மாட்டார்கள். 1977ல் இருந்து இன்று வரை மட்டக்களப்புத் துரோகிகள் என்பதையே அவர்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றார்கள்.

கிழக்கில் இன்று எமக்குக் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தினை நாம் இழப்போமாக இருந்தால் இன்னும் 20 வருடங்களுக்கு கிழக்கு மக்களின் தலைகள் மீது மிளகாய் அரைப்பார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை எவராலும் அழிக்க முடியாது. வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் நாம் நிலைத்திருப்போம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் எமது மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நா.திரவியம், வாகரைப் பிரதேச சபைத் தவிசாளர் சூட்டி மற்றும் பிரமுகர்கள், ஆலய நிர்வாக சபையினர், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் அவர்கள் ஆலய அபிவிருத்தி நிதிக்கென தனது சொந்த நன்கொடையாக ரூபா 50,000 பணத் தொகையினை ஆலய நிர்வாக சபையினரிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment